என்
புலர்ந்த பொழுதின் விரல்களில்
மயங்கிக் கிடக்கின்றது வறுமை!
நிதம்
சூரியக் குளியலில் தோயும் - என்
மேனியின் நிறம்
அழகை இருட்டடிப்புச் செய்வதால்
காளையின் காதல் மோகம்
காணாமல்தான் போகின்றது!
மாதப்பூக்களில் அவிழும் - என்
குருதி மகரந்தங்களால்
பெண்மையின் சிதைவுகள்
கண்ணீர் சிந்திச் சிந்தி
அறிவிப்புச் செய்கின்றன
நாளைய இருப்புக்கு ஆளில்லையென!
முகம் முத்தமிடும்
வியர்வைத் துளிகளின் சரிதங்களில்
என்னுழைப்பின் ரகஸியம்
பத்திரப்பட்டுக் கொண்டிருக்கின்றது
காலத்தின் ஆணைக்காய்!
பெண்மை அரிதாரங்களில்
இச்சையேந்தும்
அணிவகுப்புக்கள்
அமிலம் ஊற்றுகின்றன - என்
விழி நீர்த் திடலில்!
சதை உறிஞ்சும் வல்லூறுக்களின்
மாமிச வேட்டையில்
நழுவும் ஜீவனாய் என்னுயிர்
பதுங்கு குழு தேடித் தேடி
களைத்துக் கிடக்கின்றது
தினம் தோறும்!
அக்கினிக்குள் அடகு வைத்த - என்
கனவுகளை மீட்டெடுக்க
வழியின்றி
வலியோடு காத்திருக்கும் - என்
வாலிப மனசை சிறையெடுக்க
கண்ணீர்க்கம்பிகள்
போர் தொடுக்கின்றன!
என் உயிர்ப்பற்ற செல்களை
வெறுப்பேற்ற
காத்துக் கிடக்கும் காளையரால் - என்
நாளைய பொழுதுகள்
நாட் குறிக்கப்படுகின்றன
மயானத்துக்குள் ஏலமாக !
மலினப்படும் உணர்வுகளால்
விசம் தடவும் விட்டில்கள்
தம்
இறக்கை கழற்றி
இறங்கத் துடிப்பதென்னவோ
தூசி படியாத - என்
புன்னகைத் திடலில் தான்!
சந்தோசங்களின் சமாதியில்
தோசம் கழிக்கும் - என்
வாழ்க்கையில்
மிஞ்சியதென்னவோ
முட் தேசத்தின் சாம்ராஜ்யம்தான்!
கனவுக்குடியிருப்புக் கூட
என்
கண்ணீர்ச்சுவட்டோரங்களுடன்
தொட்டுக் கொள்கின்றது ரகஸியமாய்!
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!