சின்னக் கண்ணில் ஏக்கம் விதைத்து
வண்ண நிலாவை எட்டிப் பிடிக்க
கண்ட கனவின் புல்லரிப்பு
மீண்டெழுமிந்தப் பொழுதில்!
பூவின் மேனி நடுங்கச் செய்து
வண்டின் தேனை களவில் பருகி
மலர்ச் செண்டில் முகம் நனைத்த
ஞாபகங்கள் நெஞ்சைக் கிறுக்கும்!
காற்றின் காலில் பட்டம் கட்டி
சேற்று மணலில் உருண்டு பிரண்ட
மழலைப் பொழுது மனதைக் கௌவும்
மானசீக ரசிப்பில் இறுகிக் கிடக்கும்!
ஊஞ்சல் இறக்கை உயரப் பறக்கும்
அஞ்சாச் சிட்டின் சாகசம் வியக்கும்
வாஞ்சையோடு உறவும் ரசிக்கும்
பிஞ்சின் நெஞ்சில் மகிழ்வும் பூக்கும்!
மணல் சோறு ஆக்கியெடுத்து
மாலையும் சோகியும் கோர்த்தெடுத்து
பாவைப் பிள்ளை திருமணம் நடத்தும் - அந்தப்
பால்ய பருவம் வெட்கித்துக் கிடக்கும்!
நட்புக்களோடு கிட்டியுமடித்து
பள்ளிக்கூடம் "கட் " டுமடித்தே
நல்ல பிள்ளை பெயர் கெடுத்த - அந்தப்
பொல்லாக் கணங்கள் மிரட்டி விரட்டும்!
இரட்டை ஜடை கட்டி ஆட்டி
கொசுவம் வைத்து சேலையு முடுத்தி
பெரிய மனுஷியாய் போட்ட வேசம்
வில்லத்தனமாய் மனசுல் இறங்கும்!
அழுது விம்மி ஆர்ப்பரித்து நானே
அம்மாவிடம் அபகரித்தவையெல்லாம்
அள்ளியெடுத்து ரசித்த கணங்கள்
துள்ளி வந்து நெஞ்சை முட்டும்!
தம்பி பறப்பான் தும்பி பிடிக்க
எம்பிக் குதிப்பேன் எனக்கும் தாவென்று
கவலை மறந்த அந்தக் காலம்
கண்ணீரறியா பொற் காலம் !
முதுகை உதைக்கும் தோற்பையும்
வெம்மையில் புரளும் காலுறையும்
அழுக்காகத் துடிக்கும் வெள்ளையுடையும்
அடையாளப்படுத்தும் பள்ளி வாழ்வை!
கவலை மறந்த அந்தக் காலம்
கண்ணில் வாழும் நாள்தோறும்
களிப்பில் புன்னகை கோர்த்துத் தந்த
பிள்ளைப் பருவம் வாராதோ
மீள வாராதோ!
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!