அருவி !அந்தக் காலைப் பொழுதினில்
மலையடி வாரத் தலைவனின்
கொஞ்சலில்............
அவள்
வெட்கித்துக் கிடந்தாள்
கனநேரமாய்!

அவள்...........
மேனியைச் சூரிய கதிர்களோ
மஞ்சளுடன் சந்தனமுமரைத்து
ஈரப்படுத்திக் கொண்டிருந்தன
காதலால்!

அவள்........
மேனி ரகஸியங்கள்
வெள்ளாடை முந்தானை விலகலால்...........
பகிரங்கமாய்
பறைசாட்டப் பட்டுக் கொண்டிருந்தன!

அவள்.............
முத்தத்தில் நனைந்த கற்களோ.........
நாணச் சிலிர்ப்பில்
விறைத்துக் கிடந்தன
கரைக் கொதுங்கி..........

அவள்....
குரற் சலங்கைச் சலசலப்பில்
மோகங் கொண்ட குயில்கள்
மெட்டுக்களை - தம்
குரலுக்குள் திணித்துக் கொண்டன
களவாய்!

காற்றின் ஸ்பரிசத்தை
தன் நீர் விரல்களில் பூட்டி......
நளினமாய் நர்த்தனம் புரியும்
அருவி மகளை.........
பூமியேந்திக் கொண்டது
பூத் தூவி!

அவள்...........
பாற் சுரப்புக்களில்
மோகித்த அன்னங்கள்............
அணி வகுத்தன- நீரைப்
பிரித்தறியும் ஆவலுடன்!

மனித மௌனிப்புக்கள்.........
அவள் புன்னகையில்
கழற்றின - தம்
சோகங்களை!


அவளுள் செருகுண்ட - அந்த
இயற்கையின் இதயம் மட்டும்......என்னுள்
ரசிப்பாகி.........
கவியைத் துடிப்பாக்கிக் கொண்டிருந்தன
காதலுடன் !

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை