About Me

2012/07/23

யாழ்ப்பாணக் கோட்டை


யாழ்ப்பாணம்..............!

பனை வளங்களால் முடி சூடப்படும் அழகான ஊர்!
வட மாகாணத்தின் இதயம் ...........
கடல்களும், செழிப்பான வயலோரங்களும்  சுவைமிகு பயி ருற்பத்திகளும், பல வரலாற்று ஆவணங்களின் சேமிப்பும் அதன் முக்கியத்துவத்தை மேலும் ஒருபடி கூட்டுவன!

இத்தகைய யாழ்ப்பாணம் ஒரு சில தசாப்த யுத்தக் கூக்குரலால் சிதைந்தது. எம் நேசபூமியான முஸ்லிம் பிரதேசங்களோ அடையாளம் தெரியாதபடி சில வன்முறையாளர்களால் (இராணுவத்தினர் அல்ல) சிதைக்கப்பட்டன.,
இச்சிதைவுகளின் கண்ணீரை மெல்ல மெல்ல காலம் துடைக்கத் தொடங்கியதால் யாழ்  மக்களின் இயல்பு வாழ்வும் தற்போது மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புகின்றது.

யாழ் பூமியில் சேமிக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பதிவுகளிலொன்றுதான் யாழ்ப்பாணக் கோட்டை !

யுத்த காலத்தில் இக்கோட்டைக்குள் சிறைப்படுத்தப்பட்டிருந்த இராணுவத்தினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான தொடர்ச்சியான போராட்டத்தால் எம் உயிரைக் கையிலேந்தி பரிதவித்துக் கிடந்த ஞாபகங்கள் இன்னும் நெஞ்சக்குழியில் வீழ்ந்துதான் கிடக்கின்றன.

அன்று.... 

கோட்டையை முற்றுகையிட விடுதலைப் புலிகள் நடுநிசியில் அவ்வவ்போது நடத்திய தாக்குதல்களும், பதிலுக்கு இராணுவத்தினரின் ஷெல் வீச்சுக்களும், இராணுவத்தினருக் குதவியாக நடத்தப்பட்ட விமான, ஹெலி தாக்குதல்களும் எமது சாமப் பொழுதின் உறக்கத்தை உறிஞ்சி பீதிக்குள் எம்மைத் தள்ளிய கணங்கள்! அவை மறக்கப்பட முடியாத இதிகாசங்கள்!

விண்ணென தலைக்கு மேலே பாய்ந்து சென்று ஷெல்களும், குண்டுகளும் அண்மைப் பகுதியில் மோதி வெடித்து உயிர்களையும், எம் சந்தோஷங்களையும் காவு கொண்ட அந்தக் கணங்கள் மறக்கப்படாத பொழுதுகள் !

யாழ்ப்பாணக் கோட்டைக்கும் எமது முஸ்லிம் பகுதிக்குமிடையில் பாரிய தூர இடைவெளி இல்லாமையால் எமது முஸ்லிம் தெருக்களே பெரும்பாலும் ஷெல் வீச்சுக்கு இலக்காகி அவலப்பட்டன.............

அந்த அவலம் இன்னும் என் மனக்கண்ணை விட்டு அகலாத நிலையில் இப்பதிவிடுகின்றேன்.............

அந்த வயதிலேற்பட்ட ஞாபகங்களின் அனல் பல வருடங்கள் கழிந்த நிலையிலும் எட்டித்தான் பார்க்கின்றன...........

கோட்டைக்கு அருகிலுள்ள பண்ணைக் கடலும், பண்ணைப் பாலத்தை ஊடுறுவிச் செல்லும் அல்லைப்பிட்டிக்குச் செல்லும் பாதையும் எமது மண்கும்பான் பள்ளிவாசல் தரிசனப் பயணங்களுக்கு அவசியப்பட்டதால் நாம் அடிக்கடி விடுமுறை காலங்களில் மண்கும்பான் பள்ளிவாசலுக்கு செல்வது வழமை. அப்பொழுதெல்லாம் கோட்டையைக் கடந்தே செல்வதால், யாழ்ப்பாணக் கோட்டை எம் நினைவகத்தில் ஆழப்பதிந்து கிடக்கின்றது.....
பல வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் !

யாழ்ப்பாணக் கோட்டை.............!

கருங்கல்லாலும் பாறைகளாலும் மதிலிடப்பட்டுள்ள மிக உயரமான சுவர்களும், சுவர்களுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள ஆழமான அகழியையும் கொண்டுள்ளது. அவற்றின் நிர்மாணம் வியப்பை அள்ளிக் கொட்டக் கூடியது.

ஒருசமயம் யாழ்ப்பாணம் முழுதும் விடுதலைப் புலிகள் வசமிருந்த போதும் (1984 தொடக்கம் 1987 வரை) கோட்டை மட்டும் இராணுவத்தினரின் பாதுகாப்பு அரணாக விளங்கியது. இதற்குக் காரணம் குண்டுகளால் துளைக்க முடியாத இறுக்கமான மதில்கள்தான்!

ஆனால் இலங்கை - இந்திய சமாதான உடன்படிக்கையின் கீழ் இந்திய அமைதி காக்கும் படையினர் 1989 ம் வருடம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த போது, யாழ்கோட்டை அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வெளியேற்றத்தை தொடர்ந்து மீண்டும் கோட்டையை விடுதலைப்புலிகள் கைப்பற்றி, கோட்டையின் பல கட்டிடங்களை தமது பாதுகாப்பு கருதி உடைத்தெறிந்தனர்.

மீண்டும் 1995 ம் ஆண்டுகள் இராணுவத்தினரால் யாழ்கோட்டை பெரும் யுத்தத்தின் பின்னர் மீண்டும் கைப்பற்றப்பட்டது.

யுத்தத்தின் பின்னர் இப்பொழுது அது மீண்டும் புனரமைக்கப்பட்டு பார்வையாளர் பார்வையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.........

யாழ்ப்பாணக் கோட்டை.............!

1619 ல் யாழ்ப்பாண மன்னனின் ஆட்சிக்குள் போத்துக்கேயர் நுழைந்தனர். இதனால் நல்லூரிலிருந்த தலைநகரம் யாழ்ப்பாணத்துக்கு இடமாறியது. 1625 ம் ஆண்டு போத்துக்கேயர் யாழ் கோட்டையைக் கட்டும் பணியை ஆரம்பித்தனர்.

இக் கோட்டை கிட்டத்தட்ட சதுர வடிவானது. நான்கு மூலைகளிலும் அமைந்த காவலரண்களுடன் ஒவ்வொரு பக்கச் சுவர்களின் மத்தியிலும் அரைவட்ட வடிவிலமைந்துள்ள அரண்களும் அமைந்திருந்தன. கோட்டைக்குள் கத்தோலிக்க தேவாலயமும். கப்டன் மேஜருக்கான வீடும், வைத்தியசாலை யொன்றும் மேலும் முக்கிய சில கட்டிடங்களும் இருந்தன. இருட்டறைக்குள் சிறைக்கூடமும் இருந்தது. போத்துக்கேயரின் நகரமான யாழ்ப்பாணம் கோட்டைக்கு வெளியே இருந்தது.


ஒல்லாந்தர் காலம்
-------------------------------
யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் 1658 ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் திகதி கைப்பற்றிய அடுத்த நாள் ஜூன் மாதம் 23 1658இல், மேற்படி கோட்டையை அவர்கள்  இடித்துவிட்டு ஐங்கோண வடிவிலமைந்த புதிய கோட்டையைக் கட்டினார்கள்.

 கோட்டையைப் பார்வையிடும் எங்கள் வீட்டுச் செல்லம்

      கோட்டை நுழைவாயில்


                                         மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இடம்
                                       அதன் அகழியைச் சூழ்ந்திருக்கும் மதில்

- Ms. Jancy Caffoor -


















No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!