About Me

2012/07/24

சிறுவர் உரிமைகள்



The Rights of the children
--------------------------
சிறுவர்கள் மென்மையானவர்கள். அவர்களின் உள்ளத்தில் தீய பழக்கங்களின் வேரூன்றல்கள் காணப்படுவதில்லை. எனினும் சமூகமும், குடும்பமும், நண்பர்களும் அவர்களின் நடத்தையைத் தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர். அவர்கள் வெண்களியைப் போன்றவர்கள். உரிய விதத்தில் அணுகுவதன் மூலம் அவர்களைப் பதப்படுத்தலாம்...அவர்கள் தமது சொல், செயல் என்பவற்றை சமூகத்திலிருந்து பெற்று திரும்ப அவற்றை சமுகத்திற்கே மீளளிக்கின்றனர்....

நாளைய பலமிக்க சமுதாயத்தின் தூண்களான இச் சிறார்களின் பாதுகாப்பு இன்றையவுலகின் வினாவாகத் தொக்கி நிற்கின்றது என்பதும் வேதனையான மறுபக்கமாகும்.

மனிதாபிமானத்தை தொலைத்து விட்டு மனமுரண்பாடுகளுடன் உலவும் மன விகாரம் படைத்தோரால் சிதைக்கப்படும் இச் சிறார்களின் வருங்காலம் கண்ணீரில் நனைந்து கிடக்கின்றது. 

குற்றங்களும், சிறைக்கூடங்களும், சீர்திருத்தப்பள்ளிகளும் ஏறுமுகமாக காணப்படும் அவலம் நம் உயிரை வருத்திச் செல்கின்றது.

சிறுவர்கள் கண்ணாடிப் பொருட்கள் போன்று கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்...

அண்மையில் நான் கேள்விப்பட்ட சம்பவமொன்றை மனம் ஞாபகப்படுத்திய நிலையிலேயே இப்பதிவையிடுகின்றேன்.

அவள் ஐந்து வயது நிரம்பிய பால் மணம் மாறாத சிறுமி. அவள் பெற்றோரால் "மாமா" என அறிமுகப்படுத்தப்பட்ட அந்த இளைஞனுக்கு இருபதை தொட்டு நிற்கும் வயது. தினம் தோறும் அவள் வீட்டுக்குச் செல்லும் அவன் சாக்லேட் வழங்குவதில் மறப்பதில்லை. சிறுமியும் அந்த மாமா மீது கொள்ளைப் பிரியம் வைத்திருந்தாள். அவனுடன் விளையாடுவது அவளுக்கு ஆசையான காரியம். பெற்றோரும் அந்த நண்பனை தாராளமாக தங்கள் பிள்ளை மீது பழக அனுமதியளித்தனர்..

அந்தப் பிள்ளை முதலாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தது.....ஒருநாள் பாடசாலை முடிந்தும் பிள்ளை வீடு திரும்பாததால் கவலையுற்ற பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் குற்றவாளி கண்டு பிடிக்கப்பட்டான்.

அவன்....................!

அந்தப் பிள்ளை அன்புடன் பழகிய மாமா..அவன் கொடுத்த வாக்குமூலத்தில் தானும் இன்னும் நான்கு இளைஞர்களும் இணைந்து அப் பிள்ளையை நாசம் செய்ததாகவும், பிள்ளை தன்னை அடையாளம் காட்டி விடுமென்ற அச்சத்தில் அப்பிள்ளையை கொலை செய்து ஆற்றோரம் வீசி விட்டதாகவும் இரக்கமின்றி கொலையாளி கூறினான்...அந்த மொட்டு பூக்க முன்னரே பறிக்கப்பட்டது.....


இவ்வாறான சம்பவங்கள் சாதாரண செய்திகளாக வெளிவரும் புவியிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மனித உருவிலுள்ள மிருகங்களை கண்டறியாத அப்பாவிகளாக நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றோம்..

இந்நிலையில் சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுத்து அவர்களைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாட்டு சமவாயம் (UNICEF) பட்டயமொன்றை 1989 ல் உருவாக்கியது. இச் சமவாயத்தில் 52 உறுப்புரைகள் காணப்படுகின்றன.



18 வயதிற்குட்பட்டோரை சிறுவர்களாகக் கருதி அவர்களுக்காக பின்வரும் விடயங்கள் அவர்களுக்கான உரிமைகளாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன..
-----------------------------------------------------------------------------------------------

பின்வரும் விடயங்களில் சிறுவர்களை ஈடுபடுத்தும் பெரியவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்

1. சிறுவர் தொடர்பான ஆபாச படங்களை எடுத்தல் அத் தகவல் தெரிந்தும் பொலிஸாருக்கு தெரிவிக்காமல் மறைத்தல்.

2. பிச்சை எடுக்கப் பயன்படுத்தல்

3. பாலியல் தொடர்புகளுக்குப் பயன்படுத்தல்

4. போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுத்தல்

5. சிறுவர்களை வதைத்தல்

6. வீட்டுவேலைக்காரர்களாக பயன்படுத்தல்

7. 12 வயதிற்குட்பட்டோரை பெற்றார் பராமரிக்காமை

8. கல்வியைப் பெற்றுக் கொடுக்காமை

9. சிறுவரை மிரட்டல், அச்சுறுத்தல், மரண பயம் விளைவித்தல்

10. அடிமைப்படுத்தல் , ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தல்

11. சிறார்களின் எண்ணங்களை மழுங்கடித்தல், விரும்பிய மதம், நட்பு பின்பற்றத் தடை விதித்தல்

12. அடிப்படை சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொடுக்காமை

13. அவர்களின் தனிப்பட்ட வாழ்வுக்கு இடையூறு விளைவித்தல்

இவையெல்லாம் பிள்ளைகளுக்கான பாதுகாப்பு கவசங்கள்

பிள்ளைகளை மனித மிருகங்கள் அண்டாமல் கண்காணித்து அன்பு செலுத்துங்கள்.அவர்களின் வருங்காலம் அவர்களுக்கான வெகுமதி !
அதை வழங்க வேண்டியது நமது கடமையாகும்



ஐ.நா. சபையின் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாய உறுப்புரைகளின் தலைப்புக்கள் சில பின்வருமாறு :
----------------------------------------------------------

உறுப்புரை 1 - சிறுவர் பற்றிய வரைவிலக்கணம்

உறுப்புரை 2 - பாகுபாடு காட்டாமை

உறுப்புரை  3 - சிறாரின் உயரிய நலன்கள்

உறுப்புரை  4 -சமவாயத்தை நடைமுறைப்படுத்தல்

உறுப்புரை  5 - பெற்றோரின் வழி நடத்தலும் குழந்தையின் வளர்ச்சியும்

உறுப்புரை  6 - உய்வும் மேம்பாடும்

உறுப்புரை  7 - பெயரும் நாட்டினமும்

உறுப்புரை  8 - தனித்துவம் பேணல்




உறுப்புரை  9 - பெற்றோரை பிரிதல்

உறுப்புரை 10 -குடும்பம் மீளச் சேர்தல்

உறுப்புரை 11 - சட்ட விரோத இடமாற்றமும் மீளாமையும்

உறுப்புரை 12 - சிறுவரின் கருத்து

உறுப்புரை 13 - கருத்துச் சுதந்திரம்

உறுப்புரை 14 - சிந்தனை, மனசாட்சி, மதச் சுதந்திரம்

உறுப்புரை 16 - அந்தரத்தைக் காத்தல்

உறுப்புரை 17 - தகுந்த தகவல் கிடைக்க வழி செய்தல்

உறுப்புரை 18 - பெற்றோர் பொறுப்பு

உறுப்புரை 19 - இம்சை, புறக்கணிப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு

உறுப்புரை 20 - குடும்பப் பிணைப்பற்ற பிள்ளையைப் பாதுகாத்தல்

உறுப்புரை 21 - சுவீகாரம்

உறுப்புரை 22 - அகதிச் சிறுவர்கள்

உறுப்புரை 23 - ஊனமுற்ற சிறுவர்கள்

உறுப்புரை 24 - சுகாதாரமும் சுகாதார வேசைகளும்

உறுப்புரை 25 - தாபரிப்பிடத்தை அவ்வவ்போது கண்காணித்தல்

உறுப்புரை 27 - வாழ்க்கைத் தரம்

உறுப்புரை 28 - கல்வி

உறுப்புரை 29 - கல்வியின் நோக்கம்

உறுப்புரை 30 - சிறுபான்மை மக்களின் பிள்ளைகள்








உறுப்புரை 31 - ஓய்வு, பொழுதுபோக்க, கலாசார நடவடிக்கைகள்

உறுப்புரை 32 - பால்ய ஊழியம்

உறுப்புரை 33 - போதைப் பொருட் துஷ்பிரயோகம்

உறுப்புரை 34 - பாலியல் இம்சை

உறுப்புரை 35 - விற்பனை, பரிவர்த்தனை, கடத்தல்

உறுப்புரை 36 - ஏனைய இம்சைகள்

உறுப்புரை 37 - சித்திரவதை, சுதந்திரத்தை மறுத்தல்

உறுப்புரை 38 - ஆயுதப் பிணக்குகள்

உறுப்புரை 39 - புனர்வாழ்வு , பராமரிப்பு

உறுப்புரை 40 - பால் நீதிபரிபாலனம்

உறுப்புரை 41 - நடைமுறையிலுள்ள நியமங்களை மதித்தல்

உறுப்புரை 42 - அமுலாக்கல்

சிறுவர் தொடர்பான இவ்வளவு பாதுகாப்பரண்கள் இருந்தும் கூட சில துஷ்டர்கள் அவற்றுள் நுழைந்து சேதப்படுத்துகின்றனர். இவர்களை சட்டம் தண்டிப்பதிலும் பார்க்க, இவர்கள் மனசாட்சியே இவர்களைத் தண்டிக்க வேண்டும்.....தண்டிக்குமா............?

காலச் செவியில் இவ் வினா கூட பயனற்றுக் கிடக்கின்றது !

இவ்விடயங்கள் யாவும் அகிலமுழுதும் எதிரொலிக்க வேண்டும். அப்பொழுதே மேற்கூறப்பட்ட நோக்கங்களும் சிந்தனைகளும் வலுப்பெறும்.

1. Support For Child Rights
2. Help Homeless Child
3. Help a child in need
4. Know Child Rights
5. Stop Child Labor
6. Free Education to Poor  Children


இவை வெறும் ஆணைகளல்ல.....நாம் சிந்திக்க வேண்டிய அம்சங்கள் !



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!