About Me

2012/07/24

கோபம்


மனிதன் உணர்ச்சிகளின் கலவை...!

சூழ்நிலைகள் தீர்மானிக்கும் உணர்ச்சிகளை அவ்வவ்போது கொட்டித் தீர்ப்பவர்களாகவே நாம்  இருக்கின்றோம்.

நம் உணர்ச்சி வெளிப்பாடுகளிற் சில பிறரை மகிழ்விப்பனவாகவும் சில பிறரைத் துன்புறுத்துபவையாகவும் அமைந்துவிடுகின்றன. நம்மை அடுத்தவர் முன்னிலையில் அரக்கர்களாக உருமாற்றும் இக் கோபம் நாம் செய்த சில நல்ல பண்புகளையும் உறிஞ்சிவிடுகின்றது. கோபம் வந்தால் கட்டுப்பாட்டுடன் வெளிப்படுத்த வேண்டும். இல்லாவிடில் அந்த மனவெழுச்சியின் தாக்கத்தால் உயிர் கூட நசுங்கிப் போகலாம். சிலர் வெறித்தனத்துடனும், சிலர் மௌனமாகவும் கோபத்தின் ஆளுகைக்குள் வீழ்ந்து கிடக்கின்றனர். மௌனமாக இருப்பவன் திடீரென வெளிப்படுத்தும் கோபத்தின் பலம், அடிக்கடி கோபம் கொள்பவனிடம் இருப்பதில்லை.

நாம் கோபப்பட்ட சந்தர்ப்பங்களை நினைத்துப் பாருங்கள். ....................

நம் உடல் படும் அவஸ்தைகள் அப்பப்பா................!

நெஞ்சப் படபடப்பும், உடல் நடுக்கமும் , பண்பு தவறி விழும் உஷ்ண வார்த்தைகளும், தலையிடியும், பற்றற்ற மனநிலையும்,மன அழுத்தமும், பிறர் பகைமையும் நமக்குள் சொந்தமாகின்றன.

அது மாத்திரமின்றி அதிக கோப நிலை கண்டு சமுகத்தினரும் நம்மீது வெறுப்பை இறப்பு வரை உமிழ்ந்து கொண்டேயிருப்பார்கள். கோபப்படும் போது இரத்தவோட்டமும் அதிகரிப்பதால் மன அழுத்தமும் (டென்ஷன்) கூடுகின்றது. கட்டுப்படுத்தப்படாத கோபங்கள் இறுதியில் மனநோயாக உருமாறும் எனும் உண்மையை நாம் நிராகரிக்கவும் கூடாது..

நாம் பிறக்கும் போது சகலரும் ஒரே விதமாகத்தான் பிறக்கின்றோம். நம் உணர்வுகளில் மாறுபாடு ஏற்படுவதில்லை. இருந்தும் வளரும் போதுதான் நம்மைச் சுற்றிய சூழ்நிலைகளே நம் போக்கைத் தீர்மானிக்கின்றன. சூழ்நிலைக்கைதிகளாய் நாம் சிக்குண்டு கோபத்தை வெளிப்படுத்தும் போது அனல் பறக்கும் வார்த்தைகள், அருகிலிருப்போர் மனதை வெம்மைப்படுத்துமென்பதை ஏனோ மறந்தவர்களாய் கோபப்பாதையில் பயணிக்கின்றோம்.

மதங்கள் யாவும் கோபத்தை மனதிலிருந்து கொன்றொழித்து அம் மனதில் அன்பு, கருணையைப் பூட்டும் படி வலியுறுத்துகின்றன.. எம் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் தனது பொறுமையால் பிறரின் கோபத்தையெல்லாம் சாந்தமாய் உறிஞ்சிக் கொண்ட அப்படிப்பினைமிகு ஹதீஸ்களையெல்லாம் கேட்கும் போது உண்மையில் கோபத்தின் மீது எரிச்சல் ஏற்படுகின்றது. கோபத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்று உள்ளுணர்வு ஆணையிட்டாலும் கூட அந்த ஆணையை நிறைவேற்ற ஏனோ நம்மால் முடிவதில்லை .............இதுவே நிஜம்!
ஏனெனில் நாம் பலரும் கோபத்தின் அடிமையாய் பதியப்பட்டுள்ளோம்.

என்னிடம் சர்வாதிகாரப் போக்கு இருப்பதில்லை ஆனால் மனசாட்சியை மலினப்படுத்துவோர் முன்னிலையில் அவர்கள் கொட்டமடக்கும் சர்வாதிகாரியாய் எழுச்சி பெறுகின்றேன். ஏனென்றால் மனசாட்சியை  நான் அதிகம் நேசிப்பவள் மதிப்பவள். நம் மனசாட்சியோரங்களில் இறைவனின் வழிநடத்தல்கள் இருக்கும். அந்த மனசாட்சிக்கு முரணாய் யாரிருந்தாலும் அவர்களை நான் மன்னிப்பதில்லை. இந்த முரண்பாடுகளே அதிகம் என்னை கோபப்படுத்தியுள்ளது..
 
நான் மிகவும் பொறுமைசாலி. என்னைச் சுற்றியுள்ளவர்கள் கண்ட வுண்மையிது. சீக்கிரம் கோபப்படமாட்டேன். சமாதானப் பிரியையாய் என்னை வெளிப்படுத்தவே முயல்வேன். அமைதியாக பிரச்சினைகளைக் கையாளவே முயற்சிப்பேன். கோபத்தை என்னுள்ளிருந்து விரட்டும் கட்டுப்படுத்தும் பயிற்சியுள்ளது. இருந்தும் அந்தப் பொறுமையையும் பிறர் சீண்டும் போதுதான், மனக்கட்டுப்பாடுகள் உடைந்து மன எரிமலை அனல் கக்கத் தொடங்குகின்றது. இருந்தபோதிலும் எரிமலை வெடிக்கையில் இயலுமான வரை மௌனித்துக் கிடப்பேன் அநாவசிய வார்த்தைகளை வெளிப்படுத்த விரும்புவதில்லை.

கோபப்படும் போது என் அறைக்குள் அல்லது தனிமைக்குள் நுழைந்து நிறைய அழுவேன். அந்தக் கண்ணீரின் ஈரலிப்பிலேயே மனவெம்மைச் சூடும் தணியும். அல்லது கோபம் ஏற்படுத்தியவர் தொடர்பான மன ஆத்திரத்தை என் தாயாரிடம் சொல்லிப் புலம்புவேன் அல்லது டயறியில் அவற்றைக் கொட்டித் தீர்ப்பேன். ஆனால் இப்பொழுதெல்லாம் என் சுயத்தின் மீதான வலுவான பற்றும் நம்பிக்கையும் பிறரின் கோபத்தை சமாளிக்கும் மனப் பக்குவத்தைத் தருகின்றது. நாம் ஒருவர் மீது கொள்ளும் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களாக உடையும் போதுதான் அதிக கோபம் வருகின்றது. ஒருவரின்  இயலாமை கோபத்தின் மூலம் வலுப்பெற முயற்சிக்கின்றது. எனவே எதிர்பார்ப்புக்களை குறைப்பதும் கோபம் தவிர்ப்பதற்கான சிறந்த பாதையாகும்.

அது மட்டுமல்ல ஒருவர் கோபமாக வார்த்தைகளை உதிர்க்கும் போது மெளனமாக இருப்பதே சிறப்பு. இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவ்விடத்தை விட்டு அகன்று விடுவதே சிறப்பாகும். ஏனெனில் மௌனத்தின் வலிமையில் சினம் செல்லாக் காசாகி விடும். தனியே ஒருவர் புலம்புவதை இவ்வுலகம் பைத்தியக்காரத்தனமாக நினைப்பதால் ஆத்திரம் கொண்டவன் தன் நாவாலயே மானமுடைந்தும் பெறுமதியிழந்தும் போவான். போகின்றான்.......

தொலைபேசியில் உரையாடும் போது திடீரென கோபத்தின் வெளிப்படுகள் வெடிப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே அத்தொடர்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வார்த்தை மோதல்கள் கடுமையாகும் போது கோப எழுச்சியும் மிகையாகின்றது.

வகுப்பறையிலும் நான் கல்வி கற்பிக்கும் போது எப்பொழுதும் அன்பான முகத்தை மட்டுமே மாணவர்களுக்கு காட்ட முயற்சிப்பேன். இருந்தபோதும் அவர்கள் கல்வியை உதாசீனம் செய்யும் போது அதிகமாக ஆத்திரப்படுவேன். சம்பந்தப்பட்ட மாணவர்க்கு நான் வழங்கும் தண்டனை அம்மாணவரைச் சிந்திக்க வைக்கும். இது எனக்கு கிடைத்த வெற்றியே! ஏனெனில் அம் மாணவன் மீண்டும் அந்தத் தவறை என் முன்னிலையில் செய்வதில்லை. செய்ய விரும்புவதில்லை. உண்மையில் நாம் ஒருவர் மீது கோபப்படும் போது சம்பந்தப்பட்டவர் தன் தவறை உணர்வானாரால் அக் கோபம் கூட நமக்கு நன்மை செய்து விடும்.

இந்தக் கோபத்தின் விளைவை சற்று நேரம் தணிந்து உணர்ந்தால்....... ரொம்ப மனசு வலிக்கும். சம்பந்தப்பட்டோர் என் குடும்பத்தினராக இருந்தால் அந்தக் கோபத்தின் சுவட்டை அழிக்குமளவிற்கு உடனே நிறைய அன்பு செலுத்துவேன். என்னுடன் கோபம் கொண்டவரையும் சில மணித்தியாலங்களின் பின் மன்னித்து விடுவேன். குடும்பத்துள் கோபம் விசிறி உறவுகளை ஊனப்படுத்த நான் விரும்புவதில்லை.

"இந்த அன்பே என் பலமும் பலகீனமும்"

சிலர் நம் மனநிலையின் சமநிலையைக் குழப்ப வேண்டுமென்றே கோபப்படுத்துவார்கள்.  அந்நிலையில் அவ்விடத்தை விட்டு நகர்வதே சிறப்பு. ஏனெனில் நம் அமைதி, பொறுமைக்கு முன்னால் அந்தக் கோபம் தோற்று வெட்கித் தலைகுனிந்து கிடக்கும்..!

கோபப்பட்டு நாமெடுக்கும் முடிவுகளும் திருப்தி தருவதில்லை. கோபம் தணிந்த பின்னர் அவ் விளைவுகளின் முடிவுகள் நமக்குப் பொருந்தாமல் வலி தருபவையாக இருக்கலாம். அவசரமும், யோசிக்காத தன்மையும் நம்மை முட்டாள்களாகப் பரிகாசம் செய்யும் .....

இல்லறவாழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கணவன், மனைவிக்கிடையிலும் கோபம் நுழையும் சந்தர்ப்பங்கள் அதிகம். அவ்வாறான தருணங்களில் இருவரும் மாறி மாறி வார்த்தைகளை மோத விடும் போது அக் கோபத்தின் உக்கிரம் விவாகரத்து வரை செல்லும் . எனவே ஒருவர் பொறுமையாக இருப்பதன் மூலம் பிரச்சினைகளைத் தவிர்த்து இல்லறத்தை செழிப்புடன் நகர்த்தலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெண்ணே அடங்கிப் போகின்றாள். இந்த அடக்கம் எதிர்காலத்தின் நிலைப்படுத்துகைக்கு அவசியம்.

கோபம் அநாகரிகமானது. ஒருவரின் திறமைகள் கண்டு பாராட்ட மனமின்றி கோபத்தில் கொந்தளித்து பொறாமைப்படுவோரும் இருக்கின்றனர். என் வாழ்வில் கூட பொறாமையால் சினம் உதிர்த்த சிலரை சந்தித்துமுள்ளேன்.. அவர்களை நான் பொருட்படுத்துவதில்லை. அந்த அலட்சியப் போக்குக் கண்டு அவர்கள் தம் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் தாமாகவே பின்வாங்கி விடுவார்கள் !..


இந்தக் கோபத்தை விரட்ட பல வழிகளுண்டு......!
இயற்கையை ரசிக்கலாம், கொஞ்சும் மழலையின் செயல்களை ரசிக்கலாம், நமக்குப் பிடித்த நபர்களையோ, அல்லது நினைவுகளையோ  மீட்டிப்பார்க்கலாம்,  அல்லது எல்லாவற்றையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு தனிமையில் அறைக் கதவைத் தாளிட்டவாறே தூங்கலாம் அல்லது இனிமையான மனம் நெகிழும் நல்ல பாடல்களில் மனதை அலைய விடலாம் அல்லது தொழுகை, அல்குர்ஆன் ஓதல் போன்ற இறைவனை நெருங்கும் வணக்கங்களில் நம்மை ஈடுபடுத்தலாம்.

இவ்வுலகில் இயலாத காரியமென்று எதுவுமேயில்லை. நம்மைச் சுற்றியிருப்போரிடம்  நாம் அன்பு காட்டும் போதும், அன்பை அதிகரிக்கும் போதும் கோபம் நம்மை அடிமைப்படுத்துவதில்லை.

"நல்ல மனம் நல்லதையே நினைக்கும்."

அன்பான நம் அணுகுமுறை கண்டு அடுத்தவர் தன்னைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பார்...கோபத்தின் அத்திவாரத்தில் எழுதப்படும் யுத்தங்கள் கூட வெற்றி பெற்றதாக சரித்திரமில்லை. சமாதானத்தின் இனிமை. யுத்தத்தில் கிடைப்பதில்லை..

ஒவ்வொரு இரவும் நான் படுக்கையில் 10 நிமிடங்களாவது அன்றைய நிகழ்வுகளை என் எண்ணவோட்டத்தில் செலுத்துவேன். அம்மீள் பரிசோதனை புதிய சிந்தனைகளைத் தரும். அந்த உயிர்ப்புடனே மறுநாள் விடிகாலை உதயமாகும்....

மனிதனை வழிப்படுத்துவது எண்ணங்களே......
அந்த எண்ணங்களுக்குள் கோபச் சகதி பூசப்படும் போது மனம் அழுகலடைகின்றது. கோபத்தை உடனுக்குடன் அகற்றும் போதே மனம் லேசாகுவதுடன் நறுமணமும் பெறுகின்றது.

கோபம் ஒருவரின் சுயநினைவை இழக்கச் செய்கின்றது.  இது ஓரு விதமான மனப்பாதிப்பே !

ஒருவரின்  நலனும் மன ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டதன் வெளிப்பாடே இந்தக் கோபம் என்பதை ஏற்றுக் கொண்டு வாழ முயற்சிப்போம். கோபத்தை கண்டு அமைதிப்படும் போது அந்த பொறுமைக்கு இறைவன் நற்கூலியும் தருகின்றான்..

வாழ்க்கை என்பது குறித்த காலத்திற்காக இறைவன் நமக்களித்த பொக்கிஷமாகும்..அந்த வாழ்க்கையை மகிழ்வுடன் நகர்த்த அன்புகொள்ளலும், அன்பைப் பெறுதலும் நமக்கவசியமாகும். எமக்கும், பிறருக்கும் துன்பம் தரும் கோபத்தை நம்மிலிருந்து அகற்றும் புனிதர்களாய் வாழ முயற்சிப்போமாக !

கோபம் வன்முறையின் உறவாளி. கோபத்தில் ஒருவரையொருவர் தாக்குவதும் வசை பாடுவதும் இயல்பே. கோபம் தணிந்த பின்னர் நமது செயல்களும் வார்த்தைகளும் நமக்கே சகிக்க முடியாத அவமானங்களாகப் பொங்கிக் கிடக்கும்.

ஆனால் பாசத்தின் மீது பொழியப்படும் கோபம் நிலைப்பதில்லை. கோபத்தில் ஆட்கொள்ளப்பட்ட நேசம் உயிர்ப்பையிழக்காமல்  மீண்டும் மீண்டும் தளிர்க்கின்றது. ஏனெனில் பிரிவு கூட புரிதல் தரும் பரிவும் வளர்க்கும். ..........

கோபம் வந்தால் அடக்காதீர் ........வெளிப்படுத்துங்கள். ஏனெனில் முகமூடி போடப்பட்டிருக்கும் நம் மனதை பிறருக்கு புலப்படுத்துவது இக் கோபமே. நம் குணமறிந்து பிறர் தம்மை நமக்கேற்றவர்களாக மாற்ற கோபம் ஒரு சந்தர்ப்பமாகின்றது.

கோபத்தில் நாம் ஆட்கொண்ட பின்னர் பாசங் கொண்டவர்களாயின் அவர்களிடம் மன்னிப்பை பெற வேண்டும். பகைவராயின் மீண்டும் அவர்களின் நிழல் தொடாதவாறு நம்மிருப்பை மாற்ற வேண்டும்.!

வாழ்க்கை நம் கையில் !
வாழ முயற்சிப்போம் மகிழ்வோடு!













No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!