இரவின் மடியில்பனித்துளிகள் மோதும் இரவினை
ஊசியாய் துளைக்கும் காற்று!

நிலவொளியின் ஒளிக்கசிவில்
களவாய் விழித்திருக்கும் வானம்!

ஓசை தொலைத்த நிசப்தங்களின்
மெல்லிசையில் மயங்கும் நம் விழிகள்.........
அடிக்கடி.............
கனாக்களுக்கு மனுப்போட்டு
காத்துக் கிடக்கும்!

இருள் வயலில் விதைக்கப்பட்ட
வான் வைரங்கள்............
வெட்கிக் கிடக்கும்
பூகோளத்தின் புன்னகை கண்டு!

அல்லிக் காகிதத்தின்
மையல் வரிகளில் - தன்
மொட்டவிழ்த்து - நறுமண
மெட்டுக்கட்டும் மல்லிகைகள்!

சூரியக்குமிழின்
நேசம் நிரப்பி...............
சந்து பொந்துகளில்- தம்
பெருமை பேசும் மின்விளக்குகள்!

பூமிப் பாறையின்
நங்கூரத்தில் - மனித
உயிர்கள் தரித்து நிற்கும்
உறக்கத்திற்காய்!

இரவுத்தூரிகையுன் ஓவியத்தில்
மௌனிப்புக்கள்
மனசையறுக்கும் மானசீகமாய்!

கலைந்தோடும் மேகங்கள்
கரித்தேசத்தினை
தத்தெடுக்கத் துடிக்கும்!

குளிர்ச்சீண்டலில் .........
விழி விளக்குகள் விறைத்துக்கிடக்க........
இயக்கச் சாவி துறந்து
இளைப்பாறும் இவ்வுலகம்!

அழகின் சொப்பனத்தில்...........
வழுக்கிச் செல்லுமிந்த இரவின் மடியினில்......
என் விழிகளோ ஏக்கம் நிறைத்து
காத்துக் கிடக்கும்- புது
விடியலொன்றிற்காய்!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை