கவிதை+காதல் = காதலி

என் விழியோரக் கனவுகளில்
உனை நுழைத்துக் காத்திருந்தேன்
பல பொழுதுகள் !
நுழைந்தாய் மானசீகமாய்
என்னையே பித்தாக்கி !

கனிமொழி நனைத்து
காதலைப் பிசைந்து - நிதம்
நீயூட்டும் அன்பெல்லாம்
ஞாபகங்களாய் உதிர்ந்து கிடக்கும்!

காற்றில் சிறகு நெய்து- உன்
வானில் பறந்து திரியுமென்னை........
ஒற்றிக் கொள்ளுன் மார்பில்
ஒப்புக் கொள்ளுன் சுவாசம் நானென !

உன் சுவடுகளில் வீழ்ந்து கிடக்கும்
என் பயணங்களில்................
உன் இதழின் மின்சார ஒத்திகைகள்
கைகாட்டும் உன் சமிக்ஞ க்காக!

கடிகார அலைக்கலிப்பில்
தேய்ந்து செல்லும் பொழுதுகளெல்லாம்..........
உனை நான் சுமப்பதால்
உயிர்ப்போடு கண்சிமிட்டியலையும்!

உன்னைப் பற்றிய நிதர்சனங்களால்
கனவுகள் கூட கர்ப்பம் தரிக்கின்றன இப்போது!
நம் ரகஸியப் பொழுதுகளின் கூடலில்
கால் நனைத்துச் சிலிர்க்கின்றன!

அடிக்கடி யுன்னால் .......
விழி மறக்குமென் தூக்கத்தினால்
விடியலின் இடைவெளி குறைந்து போக
கடிகின்றன இருள் வெளிகள்!
என்னுள் ளிருக்குமுன் ஆரோக்கியம்
கெட்டுப்போகுமென!

காற்றின் மூச்சினிலே...........
வெண்ணிலாச் சாறு பிழிந்து - நீ
எனக்கிடும் கவிதைகளெல்லாமிப்போ
காதலாகி...............
கலைந்து செல்கின்றன- நம்
இதயக் கூட்டினில் ஒன்றிணைய!No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை