என் அழகிய தேசம்!வாழ்க்கை தொலைவினில்!
அது...........
எட்டா வானவில்லாய்
என் கண்களுக்குள்!

நிதம் புன்னகையேந்தும் - என்
கன்னங்களிரண்டும்
சினக்கின்றன- இனியும்
நடிக்காதேயென்று!

விழிகளோ கெஞ்சுகின்றன
விஷம் தந்து தமை கொன்றுவிடும்படி!

ஹிருதயமோ.............
விண்ணப்பிக்கின்றது விருப்புடன்- தன்
துடிப்பைத் துறக்கும்படி!

அழகான என் கையெழுத்து
அழுகின்றது - தன்
தலையெழுத்தை
நினைந்து நினைந்தே!

மனசேனோ.............
மௌனத்தின் நெருடலில்
நொருங்கிக் கிடக்க..............
நேசங்கள் முறைக்கின்றன
தம்மை மறந்ததாய்!

சோகத்தின் சுகங்களை
வாசிக்கும் மனமோ.............
ஏக்கத்தில் பூத்துக்கிடக்கின்றது
பக்கத்தில் வெறுமையை ரசித்தபடி

பூச்சியமான என் ராச்சியத்தின்
சரிதங்கள்........
பதிக்கப்படமுன்னரே
காலாவதியாகிப் போனதால்
வாழ்வை..............
கண்ணீர் சுமக்கின்றன பொறுப்போடு!

கனவுகள் கண்டறியாத விழிகள்
ஈரலிப்பிலழுகிக்
கிடக்கின்றன
கைக்குட்டையேதுமின்றி !

மகிழ்ச்சித் தேடலில்
தேய்ந்து போன என் பாதச்சுவடுகள்..........
பயணிக்கத் துடிக்கின்றன
மயானம் தேடி!

முட்களால் சுவாசம் பூட்டி
முகவரியாய்
கண்ணீர் நிறுத்தி............
தோற்றுத்தான் போனேன்
பாசம் தேடி!

புரியாத குடியுருப்புக்குள்
புழுக்களின் தேசமாய் மாற
புளாங்கிதமாய் மனுக் கொடுத்தேன்
படைத்தோனிடம்
அழகான மரணத்திற்காய்!

நாளைய புலர்வுக்குள்
சருகாய் நானும் வீழ்ந்துதிர..........
திடம் கொண்டேன் - என்
அழகிய தேசம் "ஆறடியென"
உச்சரிக்கும் உதடுகளை
உயிரோ காதலுடன் வருடுகின்றது
மெதுவாக!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை