மழைத்தோரணங்கள்


மழையின் சலசலப்பு
ஊசியாய் தேகம் துளைத்துப் போகும்!

காற்றின் ரகஸிய கிசுகிசுப்பு
கூதலில் வீழ்ந்து தவிக்கும் !

இருள் குவிந்த மேகங்கள்
இளைப்பாற ஓரிடம் தேடும்!

நீராடும் மலர் மேனிகள்
புல்லரிப்பில் நாணி மோகிக்கும்!

வீதிக் கன்னத்தினில்
நீர்ப்பருக்கள் மெல்ல வருடும்!

போர்வைக்குள் தூங்கிக் கிடக்க
நம்மனங்கள் ஏங்கித் தவிக்கும்!

குடைக்காளான்கள் குஷியாய்
நடைபாதையில் நளினம் காட்டும்!

தவளைகளின் காதலோசையால்
கற்குவியல்கள்  கதறியதிரும்!

நீர்த்தோரண அலங்காரம் கண்டு
வெள்ளமொன்று எட்டிப் பார்க்கும்!

வானேட்டில் வண்ணத் திருசியமாய்
வானவில்லும் எட்டிப்பார்க்கும்!

குளியலில் நனைந்தேதான் பூமியும் நடனமாடும்- அதை
குஷியாய் மின்னலும் படமெடுத்துப் போகும்!

வாலிப மனங்களின் கரகோஷம் கேட்டு
இடியும் வெடி கொளுத்தி மகிழும்!

இயற்கை ஏஸிக்குள் விறைக்கும்  நம்முணர்வால்
இதய மேனி சிலிர்த்தே மகிழ்ந்து கிடக்கும் !

மழை ரசிப்பில் மனமோ லயித்து - தினமும்
கவி பல கொட்டி ரசிக்கும் காதலுடன்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை