தோழமைக்காக !உன் கிராமச் சாரலில்
தடமாய் பதிந்த என் சுவடுகளில்..............
நம் தோழமை விம்பமாய்ச் சிரிக்கும்!

நீண்டு செல்லும் உன்
ஒற்றையடிப் பாதையும்..........
விழுதுகளால் காலூன்றும் அந்த
ஆலமரமும் - உன்
ஞாபகப் புலம்பலை
எனக்குள் நிறைத்துக் கிடக்கும்!

உன் நிழற்படுக்கையில் கூட
வெம்மைத் தணல்கள் - தம்
மார் தட்டி நிற்கும்!

மூங்கிலுடைத்து ஸ்வரம் கண்ட
உன் கவிப்புல்லரிப்புக்களில்.........
சிலிர்த்த மனசின்னும்
பொலிவு துறக்கவில்லை!
இருந்தும்...........
என் கண்ணீருறிஞ்சும் உனக்காய்
சோகப்பூக்கள்
தலைவணங்கிக் கிடக்கின்றன
பொறுக்கிக் கொள்!

நீ சிரிக்கின்ற போது
பூரித்துக் கிடந்தேன்.......
புரிந்ததின்று...........
பரிவற்ற உன் வார்த்தைகளால்
கருமை பூசின என் பொழுதுகள்!

அன்புக்குள் பொய்மை பூசி
வம்பு வளர்த்தவுன் ஆணவம்- என்
மூச்சு வேர்களை அறுத்தெறிந்தன
இரக்கமின்றி!

உன் அப்பாவித்தனமும்.......
அழகான பேச்சும்
அடடா............
உயர் விருதுகளின் கௌரவிப்புக்களாய்
சமர்ப்பணமாகும்
உன் அரிதாரப்பூச்சுக்களுக்கே!

மல்லிகை பொறுக்கி........
மாலை தொடுத்து - அதை
அள்ளியெடுத்த என் கூந்தலின்
கண்டனப் பேரணி - உன்
வில்லத்தனத்திற்கெதிராய்
ஊர்கோலம் போகும்!

என் விழிநீர்த் தோரணங்கள்
கன்னச் சேமிப்பறையில்
உறைய முன்.................
உரித்தெடு அவற்றை!
ஏனெனில்.............
நாளையவை சாட்சி சொல்லக்கூடும்
உனக்கெதிராய்!

என்னுள்.............
கள்ளிப் பாலூட்டி நிதம்
புள்ளிக்கோலம் போடுமுன்
ஆத்மதிருப்திக்காய்...............
பாதாள மெத்தையில் தனித்திருக்கின்றேன்
வா- உன்
துரோதச் சரிதங்களை
அங்கேயாவது ஒலிபரப்புச் செய்யலாம்!

இருந்தும்.................
முள்வேலிகளாலிப்போ
எல்லைப்படுத்தும் நம் நட்பு............
பிரிவு உடன்படிக்கையில்
கைச்சாத்திட்டதால்
சுதந்திரமானோம் - புதுவுலகில்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை