மே தினம்மனப்பாறை சிதைக்கப்படுகின்றது
முதலாளித்துவ
முறுக்கேறிய கரங்களால்!

உளியின் வலியால்
சிற்பமாகும் எங்கள் கனவு கூட
ஆவியாகிப் போகின்றது!

களமேட்டில் காத்திருக்கும் அந்தப்
பதர்களாய்...........
காய்த்துப் போனவர்கள் நாங்கள் !

வேரறுக்கப்பட்ட மரங்கள் பரப்பும்
நிழலுக்கும்
தகுதியற்றவர்கள் நிஜங்கள் நாம்!

விரல்களின் தீண்டாமைப் புரட்சியால்
காலாவதியான புத்தகங்களின்
சகபாடிகள் நாம்!

வியர்வைத்துளி நா
உறிஞ்சியெடுக்கும் கைரேகைகள்
முறிந்து வீழ்கின்றன வறுமைக்குள் !

எதிர்பார்ப்பு சமிக்ஞ - அடிக்கடி
வறட்சிக்குள் நிரப்பப்படும்
தொழிற்பூக்கள் நாம்!

உயரப் பறக்கும் எத்தனங்கள்
உடைக்கப்படுகின்றன
சிறகுடைக்கும் வல்லுறுக்களால் !

வைகாசி முதற்பொழுதினில்....
வெடித்திடும் ஒலிப்பதிவுகள் - ஏனோ
அழிக்கப்படுகின்றன அடிக்கடி!

வண்ண விண்மீன்களெம்மை
எரியூட்டும் தீப்பந்தங்களாய்
பணமுதலைகள் வாய் பிளக்கின்றன!

மனிதம் கொஞ்சம் தாருங்கள் - தொழில்
சூளைக்குள்ளும் எம் சுவாசம்
சூடேறட்டும் உயிர்ப்புக்காய்!
No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை