About Me

2012/06/10

முற்றுப் பெறாத பயணம்!



தொலைத்துவிட்ட வாழ்வைத் தேடி
தொலை தூர பயணம்!
தொல்லையற்ற உன் தேசத்தின்
எல்லைச்சுவர் நானாக!

இருண்ட வான் கண்ணீரில்
நீராடும் என் வரண்ட தேகம் 
மிரண்டோடுது
விரக்திக் காடுகளைத் தேடி!

உறுமி விரட்டும் காற்றுக் கூட- என்
உயிரைப் பிழிந்து 
விரல் பதிக்கின்றது தேகத்தில்
முட்களை மெதுவாய் நட்டபடி!

இறந்த காலத்தின் இரைப்பைக்குள்
முறிந்து விழுந்த என் கனாக்கள் - மீள
தரிக்கத் துடிக்கின்றன
நிகழ்காலத்தின் வலிகளாய்!

பாதம் பதிக்கும் சுவடு கூட- என்
பயணத்தின் சொந்தமில்லை!
அயர்ந்து விழும் நிழலில் கூட
உன் ஆறுதல் ஏதுமில்லை!

வெளுத்த பகலோரங்களில்
வெம்பித்திரியும் உன் நினைவுகள் 
களவாய் குளிர் காயும் இரவினிலே
கண் விரித்துக் கிடக்கும் நீளமாய்!

தோளில் மிதக்கும் சுமையாய்
தாங்கிப்பிடியென்னை அன்பே...!
நாளை 
ஏக்கத்தின் இருளிலே முறிந்து கிடக்கும்
என் வாலிபத்தையாவது நிமிர்த்த!

வலிகளின் மூச்சிரைப்பில் - நாளை
என் நிஜங்கள் கூட இற்றுப் போகலாம்!
நீயோ 
என் ஞாபகப் பிண்டங்களின்
ஆக்ரோஷத்தில் வெந்தும் மடியலாம்!

இருந்தும் !
என் விடிகாலைப் பொழுதினில்
நீரூற்றும் உன்னால்
வேரூன்றும் அழகிய கனாக்கள்
எந் நாளும் உறவாகலாம் - அவை
நம் சொந்தமாகலாம்!

ஜன்ஸி கபூர் 


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!