About Me

2012/06/14

அன்றும் இன்றும் !


அன்றோ 
உன் நடையோசைச் சிணுங்கலில்
கவனித்தாயா - என்
இதயமோ சுளுக்குக் கண்டது!
இன்றோ 
நீயென் இதயம் கிழித்து
உயிர் விரட்டுகின்றாய்
என்னிலிருந்து 

அன்றோ 
கடற்கரை மணல் கண்ட
நம் காதலை
அலை நுரைகள் தழுவிய போது
தடம் தேடி கண்ணீரானாய்!
இன்றோ 
கண்ணீரில் என் கனாக் கழுவும்
வில்லனாய்
புன்னகைக்கின்றாய்
அட்டகாசமாய்!

அன்றோ 
என் நினைப்பில் நீ
எகிறிக் குதிக்கும் போதெல்ாம்
களைக்காத காதல்!
இன்றோ 
இளைப்பாற மடி தேடுது
யார் கண் பட்டு!

அன்றோ 
என் நினைவகத்தில்
ஆட்சியேற்றினாயுன் அன்பை!
இன்றோ 
விஷமூட்டி கருவறுக்கின்றாய் - என்
உணர்வுகளை!

அன்றோ 
நேசத்துடன் கல்வெட்டானாய்
என்னுள் !
இன்றோ 
உன் கல்மனச் சர்வதிகாரத்தில்
துவம்ஷத்துடன்
என்னுள் மரண அவஸ்தை
வார்க்கின்றாய்
வில்லத்தனத்துடன்!

அன்றோ 
முழுமையாய் எனை ஆக்கிரமித்து
சிறை வைத்தாய் எனை !
இன்றோ 
என் வாழ்க்கை மன்றத்தில்
நீயொரு விசாரணைக் கைதியாய்
தீர்ப்பளிக்கப்பட்டுள்ளாய்!

அன்றோ 
சிறகடிக்குமுன் விழிகளில்
உனை நிரப்பிக் காத்திருந்தாய்!
இன்றோ 
பொய்மைக்குள் எனை விழுத்தி
புன்னகைக்கின்றாய்
இரக்கமில்லாதவனாய்!

அன்றோ 
ஓவியமாய் ஒளிந்திருந்தாய்
என்னுள் கருத்தோடு!
இன்றோ 
வீழ்ந்து கிடக்கின்றாய் சர்வாதிகாரியாய்
துரோகச் சரிதத்தில் !


அன்றுன் 
பார்வையால் எனை விழுங்கி
களவெடுத்த என்னை!
இன்றோ 
இருப்பிடம் பிடுங்கி
ஏலமிடுகின்றாய் வேரொறுவனுக்கு!


ஜன்ஸி கபூர் 


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!