பயணம் !இயந்திர .......
ஆர்முடுகலின் கிசுகிசுப்பில்
புகை மூட்டங்கள்
பகையாகிப் போகின்றன - எம்
சுவாசத்துள்!

சாலை மலர்களை நசுக்கி
உரப்போடு.........
உரசி நிற்கிறது
எமதூர் பேரூந்து!

கடிகார அலைவுகளில்
அலைக்கழியும் எம் அவஸ்தை.......
இறக்கத்தின்
இடைத்தூரத்தில்
கருத்தூன்றிக் கிடக்கின்றது!

தரிசன குசலிப்புக்களில்
சில............
மனித உறவுகள்
புன்னகைகளை மௌனமாக
பரிமாற்றுகின்றனர் !

கர்ப்பிணிகள்.....
முதியோர்........
கரிசனத்தில் இளசுகள்- தம்
இருக்கைகளை
இடமாற்றும் தியாகிகளாய்
புதுமுகம் காட்டுகின்றனர்!

இறக்கங்களின் குதூகலத்தில் கூட
கிறங்காத - பல
மனிதச் சுமைகள்
மந்திரிக்கப்பட்டு..........
நிரம்பி வழிகின்றன
பேரூந்தின் உள்ளீட்டில்!

சில்லறை பொறுக்கிகள்
இச்சை ஸ்பரிசத்திற்காய் .........
வெட்கமிழந்து
உரசத் துடிக்கின்றன
பெண்மை நிழல்களோடு!

வியர்வைச் சலவையில்
துயராகும் தேகம்.....
விடுதலைக்காய்
புறுபுறுப்போடு
ஏங்கிக் கிடக்கின்றன!

இத்தனை சீரழிவின் மத்தியில்.....
எம் பொழுதின் பல கணங்கள்
பொய்மை அரிதாரங்களில்
பொசுங்கிக் கிடக்கின்றது!

இருந்தும் - எம்
மன இருப்பின் எண்ணங்களோ
சுதந்திரம் தேடி.........
வெளிறிக் கிடக்கின்றது
கையேந்தும் பிச்சைக்காரனாய் !No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை