About Me

2012/06/10

மழை


வானம் சலவை செய்யப்படுகின்றது
நெடுநேரமாய் - மேகத்தின்
வாலிப மிடுக்கோடு!

வழிந்தோடும் நீரில்
அடிக்கடி முகம் கழுவும் - என்
வீட்டின் முற்றங்கள்
ஜலதோஷத்தில் தோஷம் கழிக்கின்றது!

கூதல் காற்று குடை பிடிக்கும்
அண்டவெளிகளில்
புரண்டெழும் நீர்வயல்கள்
அணிவகுக்கின்றன ஆறுகளைத் தேடி
ஆர்ப்பாட்டமாய்!

உள்ளத்தின் குதுகலத்திற்காய்
ஊசலாடும் காகிதக் கப்பல்கள்
துறைமுகம் தேடி
கரையொதுங்குகின்றன - என்
தெருக்கோடி கரைதனில்!

கூரை பிழியும் நீரை
நிறைத்தெடுக்கும் பாத்திரங்கள்
திரு திருவென முழிக்கின்றன
விறைக்கும் தம்மேனியைச் சிலிர்த்தபடி!

சிட்டுக்களின் சிணுங்கலும்
சின்னப்பூக்களின் நீராட்டமும்
வண்ணப்பூச்சிகளின் சிறகுடைப்பும்
மின்னலின் படமெடுப்பும்
சிதறி வீழ்கின்றன என்னுள்
பரிதாபமாய்!

வெட்டவெளியில் வெருண்டோடும்
நீரை
இட்டத்தோடு பற்றிப் பிடிக்க
நட்ட மரங்களும் துடிக்குது - சில
தன் நாடித் துடிப்பை அடக்குது!

மழைக்குருவியாய் கரைந்திட
மனசும் துடிக்கையில்
அன்னையின் மிரட்டல் படியிறங்குது- என்
நினைவுத்தளத்தில் ஆக்ரோஷமாய்!

விழியோரம் வியப்புத் தேக்கி
மழைதனை ரசித்திட
புளாங்கிதத்தின் ஊர்கோலத்தில்
உலாவி நிற்குது என் மனம்!


- Jancy Caffoor-

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!