ஓர் நாள்!இப் பிரபஞ்சத்துள் தடம் பதிக்கின்றேன்
உறக்கத்திலிருக்கும்.........
வண்ணப்பூச்சிகளின் சிறகுகள்
என் ஹிருதயத்துள்
நீயாகி.............................
முத்தமிடத் துடிக்கின்றன!

விண் தொடுகின்றது - என்
காட்சிப்புலம் !
விண்மொட்டுக்களின் வில்லத்தனத்தில்
உன் ஞாபக விம்பங்கள்
மயங்கிக் கிடக்கின்றன!

இருளோடு சரசமாடும்
மல்லிகையின் மோகனத்தில் - என்
கூந்தல்.............
தன்னைத் திணிக்க தடுமாறிக்
கொண்டிருக்கின்றது
அப்பாவித்தனமாய்!

ஊர்க் குருவிகளின் அட்டகாசம்
என் கனவுகளையறுத்து
விழிப்புத் தொட்டிலை
நிறைத்துக் கொண்டிருக்கின்றது
வீம்பாய்!

அந்த மயானப் பொழுதினின்
தூறல்களில்..........
தூசி படிந்து கிடக்கும் - என்
தனிமைச் சாளரத்தை உடைத்தே
உன் நினைவுகள் - என்
மனவெளிகளில் அப்பிக் கிடக்கிறது
விதவைப் பெண்ணாய்!

நீ தந்த........
இதய வலிகளிலேனோ - என்
உதயமும் வழி தவறி
எங்கோ அலைந்து கொண்டிருக்கின்றன.....
வெறும் பிரமையாய்....
உன்னைப் போல!

என்னாச்சு.........என்னுயிருக்கு!
உன்...........
(ஏ)மாற்றங்கள் நகம் பிடுங்கியதால்
கண்ணீருக்குள் தன்னை
அடகு வைத்தே.........
அது சோரம் போனதோ!

எங்கோ ஓர் மூலையில்
பதுங்கியிருக்கும் உன் நிழல் மாத்திரம்
ரகஸியமாய் - நம்
பந்தத்தை மறு ஒலிபரப்புக்காய்
ஆவணப்படுத்திக் கொண்டிருக்கின்றது!

உன்னால் மறுக்கப்படும் - என்
நியாயங்கள்.............
ஊமை வலியில் முனகிக் கிடக்க
நீயோ............
எனை இராட்சகி முடி சூட்டி
குருதிப் பிழம்புக்குள் தள்ளிவிட்டே
வேடிக்கை பார்க்கின்றாய்!

தோல்விகள் நிரந்தரமல்ல.......
நேச வேள்வியில் வெந்து கருகும் - நம்
நெஞ்சின் சாலைப் பரப்பு
என்றோவொரு நாள் - நம்
பிரிவுக்கு நாள் குறித்து
வழி தரும்..........
வலி போக !


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை