மயக்கம்


தொலைவின்................
நிசப்த நெருடலில் - தன்
ஒளி விரல்களால் எனை வருடும்
நிலாக்கசிவில்.........
அலைந்து கொண்டிருக்கின்றது
மங்கலாய் உன் முகம்!

அன்றுன்னால்............
அழுகிப் போன - என்
கருவளையங்களின் மூச்சிரைப்பில்
மீண்டுமுன்............
ஆத்மாவின் முனகல்
ரகஸியம் பேசுகின்றது!

எல்லாமே நேற்றுப் போலிருக்கின்றது
உன்னிடம் தோற்றுப் போன
என் அன்பும்...........
கரைந்து போன கன்னமும்.........
கனவாகிப் போன நிஜங்களும்.........
எல்லாமே தோற்றுப் போய் !

எதுவுமேயில்லை என்னிடம்
இப்போது............!
நீ தந்த சோகங்களும்
காயங்களும்
அவமானங்களும் தவிர!

என் உயிரணுக்களைப் பிழிந்து
நீயிட்ட தீ..........
இன்னும் வெம்மைக் கசிவோடு
நசிந்து கொண்டுதானிருக்கின்றது
இன்னொரு ஆதவனாய்!

உன் மனதோரத்தில்
மரித்துக்கிடந்த என் ஞாபகங்கள்
மீண்டும் உயிர்த்தனவோ
உன்னுள்!
மெல்லக் கதவைத் தட்டுகின்றாய்
என்னுள் - ஆனால்
நான் மரணித்ததையறியாமலே!

அன்றுன் சுயத்திற்காய்- என்
சுயவரக் கனவுகளில்
முட்கீரீடம் வார்த்தவுன்
கரங்கள்...........
மீண்டுமென் திசைநோக்கி
அணைக்கத் துடிக்கின்றன
அப்பாவித்தனமாய்!

உன்னால்
எனக்குச் சொந்தமாகிப் போன
சமுத்திரமும்...........
பாலை நிலங்களும்
எனைப் பரிதாபமாய் பார்க்க
நீயோ
புறப்பட்டுவிட்டாய்- என்
சாலைகளில் உலா வர!
No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை