நேற்று வரை தொலைவாயிருந்த - என்
தொடுவானம்
இன்றென் கரங்களுக்குள் பிரமிக்கின்றது
பட்டாம் பூச்சியாய்!
தனிமை நீள் பரப்புக்குள் - செந்
தணலோடு வீழ்ந்து கிடந்த வென்னை
தாங்கினாய் தாயாய் - என்
தரணிக்கும் வேராய்!
முழு நிலவாம் உந்தன்
பழுதில்லா அன்பால் நானே
எழுதுகோலாய் உருப் பெற்றேனின்று
என்னுள்ளுன்னைச் செதுக்க!
உன் நிழல் சுமக்குமென்
பாதவோர கொலுசொலி சப்தங்களை
கழற்றியெடுத்தேன் - என்
செவி வெளிக்குள் நிதமுலாவ விட!
கார்த்திகைப் பூவே!
உனக்கென்ன ஐயம்
என் இருதயத் துடிப்புக்களின்
ஒவ்வொரு அலைவுகளிலும்
பத்திரமாய்த்தான் அசைகின்றாய்!
உன் புன்னகையும்
புதுமையும்
இலக்கிய ரசிப்பும் - உன்
இதமான அன்பும்
எனக்குள்ளுன்னை மட்டும்
அடையாளப்படுத்தும் சின்னங்கள்!
உன் காதலும்
ஊடலும்
கூடலும் - என்
உணர்ச்சிப்பிழம்பின் உயிர்ச்சத்துக்கள்!
உன்னருகாமைக் கணங்களின்
மலர்த்தூவல்களில் - என்
மடி தாலாட்டும் சோகம் துறந்து
மழலையாகின்றேன் மானசீகமாய்
பல பொழுதுகளில் !
நிலா என்னைக் கடக்கையில்
நினைவுகளால் எனை வருடுமுன்
முத்தங்களால்
நம் மிடைவெளிச் சமுத்திரங்கள்
குறுகுகின்றன
மன தரைகளில் நம்மைச் சங்கமித்தவாறே!
கனகாலமாய் நான் சுமந்தவென்
கற்பனை வாழ்வின்
கனாதிப் போராட்டம்
கலைந்தோடியதுன் தரிசனம் கண்டு!
என் மணிக்கட்டில் உனைக் கிடத்தி
நாடித்துடிப்பில் காதல் பாய்ச்சி - நாம்
நாட் கணக்காய் பேசித் தீர்த்தும்
ஏனோ
மௌனத்துளிகள் நம்மை
ஆக்கிரமிப்பதாய் பிரமிப்பு !
உன்னன்னையாய் நண்பியாய்
வாழ்க்கைத் துணையாய்
உருமாறிக் கிடக்கும் என்னிடத்தே
புல்லரிக்கு முன் நினைவுகள்
இப்பொழுதெல்லாம்
புதுப் பாதையில் பயணிக்கின்றன!
வசீகரிக்குமுன் வைரவிழிகளில்
சிறைப்பட்ட என் விம்பங்கள்
உன்னுலகோடு பிணைந்ததால்
என்னுள் உனைக் கண்டேனின்று!
என் யதார்த்தங்கள்
உன் நினைவுச்சாலையோரங்களில்
மலர் தூவித் தழுவுகின்றன
நாளைய என் வாழ்வின் இருப்புக்காய்!
இருந்தும்
முரண்பட்டாய் வேடிக்கையாய் !
மிரட்டி நிற்கின்றாய் செல்லமாய்!
உன் வசமான என்னிதயத்தை- நீ
என்னிடமே தேடுதல் தகுமோ!
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!