அந்தச் சாலையோரப் பூக்கள்
நீயின்றி விதவைகளாகின!
மழைத்துளிகளையேந்திய
மலர் முகங்கள்
சருகாய் வீழ்ந்து மடிந்தன!
அலை நுரைகள் யாவும்
உன்
புன்னகையில் கரைந்தே
என் மனக்கரையில் சங்கமித்தன!
கைபேசியும் கணனியும்
கல்லறைச் சுவர்களுள்
தம்மைக் கிடத்தப் பேரம் பேசின!
இருதயக் கடிகாரத்தின்
நகர்வோசைகள்
கண்டனப் பேரணிக்கு
தலைமை வகித்தன!
என் விழி நூலகத்தின்
பார்வை நூல்களிலுன்
செய்திகளே தலைப்புக்களாகி
முடிசூட்டிக் கொண்டன!
நெஞ்சின் எரிமலைக் குழம்பு
பனிப்புகார்களாய்
உருமாறிக் கிடந்தன
உன்னை நினைந்து!
என் வாழ்க்கைச் சாலையில்
நீ பதித்த சுவடுகள்
அடையாளங்களாகி
முறைக்கின்றன அடிக்கடி!
நீயின்றி ஒவ்வொரு நொடிகளும்
யுகங்களாய் எனை மிரட்டுகையிலுன்
மடி தேடுகின்றேன் - நீயோ
எகிறிக் குதிக்கின்றாய்
விண் மேட்டை நோக்கி!
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!