About Me

2012/07/29

அன்னையர் தினம்


மே 13
----------

தாயே ......

இவ்வுலக சகல ஜீவராசிகளின் உயிர்நாடிகளாகும். கருவறைச் சிறைப்படுத்தலில் குருதிப்பிண்டமாய் திரண்டிருக்கும் எம் உயிர்ப்படுத்தலைப் பேணி, உருவம் எமக்குள் நிலையூன்றும் வரை பேணி பாதுகாக்கும் ஒப்பற்ற உறவே தாய் !

அலையடித்து கடல் விலகாது என்பது போல, தாயின் சின்னச் சின்னக் கண்டிப்புக்களும், தண்டனைகளும் கூட எம்மீதான வழிப்படுத்தலுக்கே!

எம்மின்பத்தை தன் மகிழ்வாய் தனக்குள் நிரப்பி ,நாம் சிந்தும் கண்ணீரைத் தன் விழிகளுள் ஏந்தி , நம் மனச்சோகங்களை உணர்ந்து துடைக்கும் ஒப்பற்ற கரங்கள் அன்னைக்குரியது. 

எத்தனை நாட்கள்......
எத்தனை நொடிகள்........

தன் விழித்தூக்கத்தைக் கழற்றியெறிந்து விட்டு எம்மசைவுகளைக் காத்திடும் உன்னத உறவே அன்னை !

இத்தகைய உயரிய பண்புகளைக் கொண்ட அன்னைக்கு சர்வதேச ரீதியில் வைரக்கிரீடம் சூட்டும் நாளின்றாகும்..

"அன்னா ஜார்விஸ்" .........

அவர்தான் அன்னையர் தின உயிர்ப்புக்காகப் போராடிய கன்னித் தாய். .திருமணமாகாத அன்னையாய் சேவை செய்தவர். அன்னையரின் நலமேம்பாட்டுக்காய் தன்னையே வார்த்த அன்பு நெஞ்சமவர். அவரை மையப்படுத்தியே இவ் அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது.

"அன்னா ஜார்விஸ்" தாயின் ஒப்பற்ற பணியை, பாசத்தை, தியாகத்தை ஓர் நாளாவது கண்ணியப்படுத்த வெண்டுமென விரும்பி, அதனைச் செயற்படுத்த முனையும் போது  பல போராட்டங்களைச் சந்தித்தார்.  அந்தச் சவால்களை முறியடிக்க அன்னாவுக்கு ஆதரவாளர்கள் உறுதுணையாகவிருந்தனர். தமது எண்ணங்களை சமூகத்தினரிடையே உட்புகுத்தி அவர்களுக்கிடையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அதனூடாக அன்னையர் தொடர்பான ஆதரவினைத்திரட்டி 1911 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பல மாகாணங்களிலும்  குறித்த நாளில் அன்னையர் தினம் கொண்டாடப்படக் காரணமாகவிருந்தார்.

1912 ஆம் ஆண்டில் "அன்னா ஜர்விஸ்" "மே மாதத்தில் 2 வது ஞாயிற்றுக்கிழமை", மற்றும் "அன்னையர் தினம்"  ஆகிய வாக்கியங்களைப்பதிவு செய்து அன்னையர் தின சர்வதேச அமைப்பை உருவாக்கினார். அதுமாத்திரமின்றி தன் தாயைப் பெருமைப்படுத்தி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண்மணியாகவும் இவர் திகழ்கின்றார்.

அதனைத் தொடர்ந்து 1914 அம் ஆண்டு மே 8 ஆம் திகதி அமெரிக்க அதிபர் "உட்ரோவ் வில்சன்"  கூட்டறிக்கையொன்றில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

இன்றைய அன்னையர் தினத்தில் வெறும் வாழ்த்துக்களும், அன்பளிப்புக்களும் குவிக்கப்படுவதை விட பாசத்துடன் தாயவளின் அன்புப்பிள்ளையாக வாழ்வதை உறுதிப்படுத்துங்கள். இதுவே அன்னைக்கு நாம் வழங்கும் அற்புதப் பரிசாகும். தாயின் காலடியில் கிடக்கும் அந்த சொர்க்கம் எமக்கும் உறுதிப்படுத்தப்படும்.

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!