About Me

2012/08/07

67 வது ஹிரோஷிமா நினைவு தினம்


ஆகஸ்ட் - 6 - ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சின் 67 வது நினைவு தினமாகும்.

கொல்லப்பட்ட அம் மக்களுக்கான மௌன அஞ்சலியை எனது வலைப்பூ செலுத்தியவாறு, அப் பின்னணியை இன்று என் நினைவகம் ஏந்தி பகிர்ந்து  கொள்கின்றது.

புவிச்சுற்றுகை, புவிச்சுழற்சியினால் நாட்கள் வேகமாகப் பயணிக்கின்ற போதிலும் நம் ஆழ்  மனதில் ஆணியறையப்பட்ட ஞாபகங்கள் யாவும் உதிர்ந்து விடாமல் பத்திரப்படுத்தப்பட்டு ஏற்ற உரிய காலங்களில் விழிக்கின்றன.  இதுவே நியதி !

 பொதுவாக மானிட வாழ்க்கை போராட்டங்களால் சூழப்பட்டுள்ளன. அப் போராட்டங்களுக்கான தீர்வுகளும் பல்வேறு அணுகுமுறைகளில் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால் நாடுகளின் ஆட்சித்தலைமைகள் தமது வல்லமையை உலகில் நிலைநாட்டுவதற்காகவும், மண்ணாசை, பொருளாதாரப்  பேராசை போன்ற தீய குணங்களால் ஆட்பட்டமையினாலும், நாடுகளுக்களுக்கிடையே போர் முரசுகளைக் கொட்டி போராடும் அநாச்சாரம்  வரலாறாகி உலகக் கோளத்தில் கறைப் படிவுகளுடன் படிந்து கிடக்கின்றன.
அரசபீடங்களில் முடிசூட்டிக் கொண்டோர் தம் ஆதிக்கக்கரங்களின் வலுவூட்டலுக்காக  அப்பாவி மக்களைப் பலியாக்கி தம் ஆட்சிக் கிரீடங்களை அழகுபடுத்தி  வந்தமை, வருகின்றமை மறக்கப்பட முடியாத கசப்பான உண்மையாகும்.

 1  செப்ரெம்பர் 1939 ம் ஆண்டு தொடக்கம் 1945 ம் ஆண்டு செப்ரெம்பர் 2 ம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடைபெற்ற பாரிய உலகப்போரே இரண்டாம் உலகப் போராகக் கருதப்படுகின்றது.

இது ஐரோப்பா, பசுபிக், தெற்கு-கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, மத்திய தரைக்கடல், ஆபிரிக்கா போன்ற இடங்களை மையங் கொண்டன.


இதில் அச்சு நாடுகள், நேச நாடுகள் எனும் ஈரணியில் உலக நாடுகள் சில பிரிந்து போரிட்டன. இப்போரில் 10 கோடி இராணுவத்தினர் ஈடுபட்டனர். இப் போரிலீடுபட்ட நாடுகள் தமது சகல பொருளாதாரம், உற்பத்தி, தொழில் என்பவற்றை போர்க்களத்திலீடுபடுத்தியே போரிட்டதால் அதுவரை உலகம் கண்டிராத பாரிய அளவிலான உயிரழிவு இப் போரால் ஏற்படுத்தப்பட்டது.


1939 செப்ரெம்பர் 1 ல் நாசி ஜெர்மனியின் போலந்துப் படையெடுப்புடன் இப்போர் தொடங்கியது. பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள் நேச அணியையும், நாசி ஜெர்மனி, பாசிச இத்தாலி என்பவை இணைந்து அச்சு அணியையும் உருவாக்கின. சீனாவுடன் போர் தொடுத்துக் கொண்டிருந்த ஜப்பானும் அச்சு அணியில் இணைந்து இரண்டாம் உலகப் போரில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டது.

 1939-1941 வரையிலான காலப்பகுதியில் பிரிட்டனைத் தவிர மேற்கு ஐரோப்பிய நாடுகள் அச்சு அணியால் கைப்பற்றப்பட்டன. பின்னர் வடக்கு ஆபிரிக்காவை தம் வசப்படுத்த அச்சு அணி முயன்றன. சோவியத் ஒன்றியத்தின் மீதும் 1941 ஜூனில் அச்சு அணி போர் தொடுத்ததால் சோவியத் ரஷ்யா நேச அணியில் தன்னை இணைத்தவாறு போரிலீடுபட்டது.

ஜப்பான் படைகள் தென்கிழக்காசியாவின் பல பகுதியைக் கைப்பற்றி கிழக்கிந்தியாவின் எல்லை வரை முன்னேறிக் கொண்டிருந்தது. தானும் ஓர் வல்லரசாக மாற வேண்டுமென்ற முனைப்பில் ஜப்பான் 1941 டிசம்பரில்  பசுபிக் சமுத்திரத்தின் "பேர்ள்"  துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க கப்பலை மூழ்கடித்ததன் மூலம் அதுவரை வெறும் பார்வையாளராக இருந்த ஐக்கிய அமெரிக்காவைச் சீண்டி,  இரண்டாம் போருக்குள் அது நுழைய வழியமைத்துக் கொடுத்தது. இரண்டாம் உலகப் போரில் உள் நுழைந்ததால் அமெரிக்காவும் நேச நாட்டுப் படையணியுடன் கூட்டுச் சேர்ந்தது.

1942 ம் ஆண்டு வரை அச்சு நாடுகளுக்கு சாதகமாக இருந்த போர் நிலைமை , அமெரிக்காவின் பிரவேசத்தைத் தொடர்ந்து மாற்றமடையத் தொடங்கியது. அச்சுப்அணியின் மேலதிக நகர்வு சோவியத் படையால் தடுத்து நிறுத்தப்பட்டது. வடக்கு ஆபிரிக்காவிலும் அச்சு படையணி பின்வாங்கியது. பசுபிக் கடலோரத்தில் நேச நாடுகள் இழந்த பகுதிகளை அமெரிக்கா மீண்டும் கைப்பற்றத் தொடங்கியது.

1943 ல் நேச நாட்டுப் படையெடுப்பால் இத்தாலி சரணடைந்தது.1944ல் மேற்கு ஐரோப்பாவை மீட்கும் பணிக்கான போரில் நேச நாடுகள் கடல் மார்க்கமாக ஈடுபட்டன. கிழக்குப்புறமாக சோவியத் படையும், மேற்குப் புறமாக பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா நேச அணிகளும் கூட்டாகச் சேர்ந்து ஜெர்மனியைத் தாக்கத் தொடங்கின. ஈராண்டுகள் தாக்குதலின் பின்னர் நாசி ஜெர்மனும் 1945 ம் ஆண்டு மே மாதம் 8 ந் திகதி சரணடைந்தது. அதே நாளில் "சரண் ஆவணம்" ஜெர்மனால் கையெழுத்திடப்பட்டது.

ஆனால் ஜப்பான் தனது போர் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. இதனால் பசுபிக் பிராந்தியத்தில் தொடர்ந்தும் உக்கிரப் போர் நடைபெற்றது.நேச நாடுகள் ஜப்பான் மீது தொடர்ந்தும் பல தீக்குண்டுகளை வீசியது. 1945 ஜூலை மாதம் 26 ந்திகதி சீனா,ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஒன்றிணைந்து "பாட்சுடம் அறிக்கை " யை வெளியிட்டது. அவ்வறிக்கை மூலம் "ஜப்பான் தனது தோல்வியை ஏற்று உடனடியாக சரணடைய வேண்டுமெனவும், அல்லாவிடில் உடனடி முழு அழிவுக்குள்ளாக வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுத்தது"

 ஆனால் ஜப்பான் அவற்றின் கோரிக்கையை ஏற்காமல் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் உக்கிரப்பார்வை ஜப்பானை நோக்கி திரும்பியதில் 1945 ஆகஸ்ட்டி6-9 ம் திகதிக்குள் ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அணுக்குண்டுகளை அது வீசி அவ் ஜப்பானின் இரு நகரங்களையும் அழித்து தன் வல்லமையை உலக அரங்கில் நிருபித்தது.

இவ்வாறு அழிவுக்குள்ளான "இரேசிமா அல்லது ஹிரோஷிமா" என்பது ஜப்பானிலுள்ள பெரும் நகரமாகும். இது ஹோன்ஷூ தீவிலுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது முதன் முதலில் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ந்திகதி காலை 8.15 நேரத்திற்கு ஹிரோஷிமா நகரத்தின்  மீது ஐக்கிய அமெரிக்கா தனது சின்னப்பையன் (Little Boy) எனும் அணுகுண்டை  வீசியது. இவ் அணுகுண்டு விமானப்படைத் தளபதியாக இருந்த "போல் டிபெட்ஸ்" எனும் விஞ்ஞனியால் "எனோலா கே" எனும் பி-29 ரக விமானத்திலிருந்து வீசப்பட்ட முதலாவது அணுகுண்டாகும். "எனோலா கே"  என்பது இவ் விமானியின் தாயார் பெயராகும். இதன் நிறை 4000 கிலோ கிராமாகும். நீளம் 3 மீற்றராகவும், விட்டம் 0.7 மீற்றராகவும் காணப்பட்டது.


ஹிரோஷிமா 905.1 கிலோ மீற்றர் பரப்பைத் தன்னகத்தே கொண்ட மாகாணமாகும். இப் பிரதேசத்தில் அணுகுண்டு விழுந்ததும் அது பாரிய சப்தத்துடன் வெடித்தது. சுமார் 2000 அடிகளுக்கு மேல் தீச்சுவாலை மேலெழுந்தது.16 கிலோ மீற்றருக்குட்பட்ட சகல கட்டிடங்களும் தரை மட்டங்களாகின. 900,00 மக்கள்  தொடக்கம் 166,000 வரையிலான மக்கள் மடிந்தனர். இந் நகரின் தொடர்புசாதனங்கள் யாவும் உடனடியாக செயலிழக்கப்பட்டமையால்  இந் நகர அழிவின் கொடுமை பற்றி ஜப்பான் இராணுவத் தலைமையகம் உடனடியாக அறிந்து கொள்ளவில்லை. அதன் பின்னரே அறிந்து கொண்டது. அணுகுண்டு வீசி 16 மணித்தியாலத்தின் பின்னர்  அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அவ் அப்பாவிகளின் உயிரோடு தான் விளையாடி சாதனை படைத்ததை வெளி உலகிற்கு அதிகாரபூர்வமாகப்  பறைசாட்டியது.


 அன்று வீசப்பட்ட  அவ் அணுகுண்டின் தாக்கத்தால் பல இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன், குழந்தைகளும் சதைப்பிண்டங்களாகவும், அங்கவீனர்களாகவும் தமது பிறப்பை வெளிப்படுத்தினர். இற்றைவரை கதிர்வீச்சின் தாக்கக் கொடுமையை அம் மக்கள் அனுபவித்து வருவது வேதனைக்குரியது..அவ் அணுக்குண்டின் கதிர்வீச்சின் சிதறல்களால் சூழலும் பாதிப்புற்று உயிரின வாழ்விற்கு அச்சுறுத்தலாகவுள்ளது.

(இது வீசப்பட்ட 3ம் நாள் ஆகஸ்ட் 9 ந் திகதி கொழுத்த மனிதன் (Fat Man) எனும் பெயரில் 2வது அணுகுண்டு ஜப்பானின் இன்னுமொரு நகராகிய நாகசாகியில் வீசப்பட்டது.)

அமெரிக்காவின் புதிய அணுகுண்டு பரிசோதனைக் கூடங்களாக ஜப்பானின் நகரங்கள் பயன்படுத்தப்பட்டமையினால் 120,0000 ற்கு மேற்பட்ட உயிரிழப்புக்களும் இன்றுவரை முடிவு காணப்படாத கதிர்வீச்சுத்தாக்கங்களும் ஏற்பட்டுள்ளன.ஜப்பானும் தனது நகரங்களின்  மீது வீசப்பட்ட அணுகுண்டுத் தாக்குதலையடுத்து 15 ஆகஸ்ட் 1945 ம் ஆண்டு சரணடைந்தது. அதே ஆண்டு "சரண் ஆவணத்தில்" அது கையெழுத்திட்டதன் மூலம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இப்போரின் விளைவாக உலக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய காலனிய அரசுகள் தம் வல்லமையை இழந்தன. ஆபிரிக்கா, ஆசியா கண்டங்களில் காலனிமயமழித்தல் தொடங்கியது. ஐரோப்பியா பனிப்போர் கசியத் தொடங்கியது. அமெரிக்க ,ரஷ்யா புதிய வல்லரசாகியது, உலக அமைதிக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது. இருந்தும் இங்கு இழக்கப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்களின் இழப்புக்கு முன்னால் அவை வெறும் பூச்சியங்களே!

இவ் அணுகுண்டு வீச்சானது அறநெறிக்கப்பாற் பட்டதே. தன் நாட்டுக்கேற்பட்ட இழப்புக்களுடன் கூடிய அந்த பயங்கர வலியினால் ஜப்பான் 1967 ல் "அணு ஆயுத விலக்கு பற்றிய 3 தத்துவங்களை" வெளியிட்டது.

இதனடிப்படையில் தான் ஒருபோதும் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதில்லையென்றும், அணு ஆயுதங்களை தன் கைவசம் கொண்டிருப்பதில்லையென்றும், அணு ஆயுதங்களை நாட்டுக்குள் வர அனுமதிப்பதில்லையென்றும்  தத்துவங்களை இயற்றி செயற்படுத்தியது.

ஹிரோசிமா நகரத்தின் மீது அமெரிக்கா அணுக்குண்டினை வீசி பாரிய உயிரிழப்புக்களுடன் கூடிய அவலங்களை ஏற்படுத்தியதை நினைவு கூறும் வகையில் 1996ல் ஹிரோசிமா நகரில் "ஹிரோசிமா சமாதான நிலையம்" நிறுவப்பட்டுள்ளது. இதன் பெயர் ஜப்பானிய மொழியில் "கென்பாக்கு டோம்" (அணுகுண்டு குவிமாடம்) ஆகும்.  ஆக் கட்டிடத்தின் வடிவமைப்பின் ஆரம்ப கர்த்தா ஜான் லெட்செல் ஆவார்.


இவ்வாறு ஏதோ சில சுயநலங்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற யுத்தங்களும் அவற்றின் இழப்புக்களும் நிம்மதியுடன் வாழ முனைகின்ற ஆரோக்கிய மனித சமூகத்திற்கிடப்படுகின்ற  சாபங்களே! இவ்வாறான அவலங்கள் இனி இப் புவிக் கோளத்தின் நிலப்பரப்புக்களை ஒருபோதும் மாசுபடுத்தக்கூடாதென்பதே நம் அவாவும் பிரார்த்தனையுமாகும்!

- Ms.Jancy Caffoor -


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!