About Me

2012/08/10

ஒற்றைச் சொல் !


நீயுதிர்த்த ஒற்றைச்
சொல் ............
என் உயிரறுக்கும் தீப்பந்தமாய்
மிரட்டி நிற்கின்றதென்னுள்!

உன் முகம் காணா நேசத்தில்
சிலிர்த்தவென் பாசத்தில்..........
விஷம் தடவும் தேளானாய்
அடுத்தவர் வார்த்தைக்காய்!

தீப்பற்றியெரிகின்றேன்
நீரூற்ற யாருமின்றி .........
ஒற்றை வழி போகின்றேன் - உன்
ஒற்றைச் சொல் வழிநடத்த!

உன் வெந்நீராய் வார்த்தைகள்
வெறித்தனமாய் எனைக் கருக்கவே........
இற்றுப் போன இதயமும்
குற்றுயிராய் வெந்ததுவே!

நீ தந்த கனவுகள்
விழித்திரையறுத்தே மிரண்டோட.....
என் உறக்கமறுத்து கூவுகின்றாய்
நானுன் அந்நியமென!

 நீர்க்குமிழி வாழ்க்கையிலே
நீ விதைத்த வர்ணங்கள்..............
கலைந்ததுவோ  ரசிக்கின்றாய்
உளமதை சிதைத்தே தான்!

இற்றுவரை நானுன்னை
வேற்றவனாய் நினைக்கவில்லை!
நெஞ்சுடைத்தே போகின்றாய்
பஞ்சென்னை காற்றிலுதிர்த்தே!

வெற்றுக் காகிதமென்னில்
நீ போட்ட  கோலங்கள்...........
உன்னொரு சொல்லாலின்று
முற்றுப்புள்ளியாய் ஆனதுவோ!

ஐயகோ...................!
என் பயணத்திலினி தடைக்கல்லாய்
உன் ஒற்றைச் சொல்.........
உயிர் துறந்து போகின்றேன்
சமுத்திரங்களை விழியேந்தி!

பல நிஜங்கள் தெரிந்ததில்
சில கனவுகள் எரிந்ததுவே!
இன்னலின் அகதேசத்தில்
அனலும் புனலுமுறவானேதே!

அடுத்தவருக்காய் எனை விரட்டி- யுன்
நினைவுப் படுக்கையில் முள்விரித்தே.................
நீ தந்த முகவரிகள் - இனியென்
மயான  நிலவறைகள்!

ஆகாயவெளியில் அந்தரிக்கும்
விண்மீன்கள் கதறியழ.................
வெள்ளிநிலா உள்ளம் நொந்து
இருளுக்குள் இறங்கிக் கிடக்கும்!

"நிஜங்கள் வலிக்குமென்ற"
உன் வார்த்தையென் சொத்தாக்கி......
தனிவழியே போகின்றேன்
இனியுன் பார்வை  மறைந்தே!

கள்ளிப்பால் நீயூட்டி விட்டாலே
களிப்போடு அமுதமாகும் என்னுள்............
ஐயத்திலென் னன்பைக் குலைத்தே
சொல்லிட்டாய் ஒற்றைச் சொல்!

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!