About Me

2012/08/06

பர்மிய முஸ்லிம்கள்



அழகான இயற்கைக்குள் கூடு கட்டி வாழும் மனிதன் தன் மென்மையான மனதினுள் இனவாத சகதியைத் தேக்கி நாற்றமெடுக்கின்ற வரலாற்றை விருப்போடு எழுதிக்கொண்டிருக்கின்றான். பெரும்பான்மையினர் தமது காலடிக்குள் வாழும் சிறுபான்மையினரை நசுக்கி, அவர்களின் குருதியில் தாம் நனைந்து புன்னகைக்கும் அராஜகம் உலகெங்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

அந்த வகையில் இன்று சர்வதேச ரீதியில் மனிதாபிமான மனித மனங்களில் , துயரத்தைப் பிழிந்து கொண்டிருப்பவர்களே பர்மாவைச்  சேர்ந்த ரோஹீங்கியா முஸ்லிம்கள்.


முகநூலில் கூட அவர்களின் கொலை செய்யப்பட்ட படங்கள் தினமும் பதிவாகி வரும் போதெல்லாம் அவற்றை காணும் சக்தியற்றவளாய்  நான் பல தடவைகள் கண்களை இறுக மூடியிருக்கின்றேன். அப்பொழுதெல்லாம் கண்ணுக்குள் நிரம்பும் கண்ணீர் மூடிய விழிகளினூடாக வெளிப்படுத்தப்படாமல்  கண்ணுக்குள்ளேயே நிறைந்து  விடும்.

அந்த அராஜகத்தின் தீக்குள் நனைந்து கருகிக் கொண்டிருக்கும் பர்மிய சிறுபான்மை முஸ்லிம்களின் உணர்வுகளிலும், அவலங்களிலும், கதறல்களில்களிலும், கண்ணீரிலும் கரையும் நான், என் துன்பத்தை இன்று இப்பதிவு வழியாக வலைப்பூவினில் கசிய வைக்கின்றேன்! அம் மக்களின் வாழ்க்கைப்பின்னணியை என் நினைவகம் சோகத்துடன் ஏந்திக் கொள்கின்றது.


9ம் நூற்றாண்டில் அராபிய மன்னன் அரகனால் நாடு கடத்தப்பட்ட அரபு முஸ்லிம் வர்த்தகர்கள் பயணித்த வணிகக் கப்பல்  நடுக்கடலில் விபத்துக்குள்ளானதால் அவர்கள் பர்மாவின் பக்கம் கரையொதுங்கினர். பர்மாவினுள் உட் சென்ற அவர்கள் பர்மியப் பெண்களை மணந்து கீழைத்தேய வர்த்தக முகவர்களாக பின்னாட்களில் செயற்பட்டனர்.  இவர்கள் மொகாலாயர்களுடன் வர்த்தகத் தொடர்புகளைப் பேணுமளவிற்கு அதிகாரமிக்கவர்களாகவும், பணபலம் மிக்கவர்களாகவும் விளங்கினர். இவர்களின் வருகையே பர்மியர்களின் இன்றைய பொறாமை கலந்த இனத்துவேசத்தின் மூலவேர்களாக விளங்குகின்றது. இவர்கள் பர்மாவுக்கும், அரேபியாவுக்குமிடையில் இணைப்புப் பாலங்களாகவிருந்து தமது பர்மியச் செல்வங்களை அரேபியா சுரண்ட இடமளிக்கின்றனர் என்றும், தமது பர்மியப் பெண்களை பலாத்காரமாக மணக்கின்றனர் என்றும் பெரும்பான்மை பர்மியர் முஸ்லிம்களுக்கெதிராக இனக் குரோதம் கொண்டனர்.

அக்கால பர்மிய நாணயத்தில் கூட ஏக இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. முகமது நபி இறைவனின் தூதராக உள்ளார்கள்" எனும் அராபிய எழுத்துரு வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இது அக்கால அராபியாவுக்கும், பர்மாவுக்குமிடையிலான தொடர்பை முதன்மைப்படுத்துகின்றது.



பர்மா

பெரும்பாலும் பௌத்தர்களையும், அதற்கடுத்ததாக இந்துக்களையும் கொண்ட நாடு.  இங்கு சுமார் 10 இலட்சம் ரோஹீங்கியா முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். இங்கு வாழும் சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு குடிமக்கள் அந்தஸ்து மறுக்கப்பட்டு வருவதால், அரசின் இனவாதப் பசிக்கு அவ் அப்பாவி மக்கள் அடிக்கடி இரையாகிக் கொண்டு வருகின்றார்கள்.


ரோஹீங்கியா பிரதேசம். 1950 களில்  தனி பிரதேசமாகவே இனங் காணப்பட்டது. இதில் இந்திய, வங்காள இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் காலனியாக இருந்த பர்மா ஜப்பானிய படைகளால் வெற்றி கொள்ளப்பட்டதிலிருந்தே முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் இங்கு ஆரம்பிக்கப்பட்டன.

பர்மாவை ஆட்சி செய்த பாஷிச இராணுவ ஆட்சியாளர்கள் தங்கள் அராஜக இராணுவ இருப்பைத் தக்க வைப்பதற்காக இந்த ரோஹீங்கியா சிறுபான்மை முஸ்லிம்களை வேட்டையாடுவதை தமது அரசியல் செல்நெறியாக வகுத்து செயற்பட்டார்கள். செயற்படுகின்றார்கள். மியன்மார் ராணுவமும், புத்த மதத் தீவிரவாதிகளும் இவ் இன அறுப்பை கச்சிதமாக ஈவிரக்கமின்றி செய்து வருகின்றனர். இவர்கள் தமது கொலை வெறியை ரோஹீங்கியா முஸ்லிம்களின் மீது மட்டுமே திணிக்கின்றனர்.

பெளத்த பிக்குகள் கைகாட்டும் திசை யெல்லாம் இராணுவத்தினரும் பொலிஸாரும் தமது ஆயுதங்களால் அப்பாவி இம் முஸ்லிம் மக்களின் உயிர்களைக் கொன்று குவிக்கின்றனர். நிலத்தில் சிந்தப்படும் குருதித்துளிகளும், கிழிக்கப்படும் உடற் சதைகளும், அவற்றிலிருந்து வடியும் ஊன் நாற்றமும் இவ் இனவாதிகளின் நாடி நரம்புகளில் பரவசத்தை வழங்க, இம் மனித மிருகங்கள் புத்தரின் அஹிம்சைத் தத்துவங்களையெல்லாம் தம் சுயநலத்தால் துவம்சம் செய்கின்றனர்.பன்சலயில் மணியை பிக்குகள் அடிக்கும் போதெல்லாம் பர்மிய மக்கள் திரண்டு வந்து இம் முஸ்லிம்களை கொலை செய்யும் அநாகரிகம் பர்மா தேசத்திலேயே வரலாறாகப் பதியப்படுகின்றது. இந்த இன வன்முறைக் கலாசாரத்தின் விளைவாக 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்களாதேஷூக்கும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மலேசியாவுக்கும் அகதியாய் தப்பியோடியுள்ளனர்.


பல ரோஹீங்க்யான் முஸ்லிம்  மக்கள் கொத்தடிமைகளாக்கப்பட்டு மியான்மார் இராணுவத்தில் கூலி வேலைகளுக்காகத் தினமும் திணிக்கப்படுகின்றார்கள். கல்வியுரிமை இச்சிறார்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுவர் உரிமை சாசன வரைபுகள் கூட இங்கு செல்லாக்காசாகி விட்டன.

இம் ரோஹீங்க்யான் முஸ்லிம்கள் பெரிய வியாபாரங்களில் ஈடுபடவோ, கடலில் மீன் பிடிக்கவோ தடுக்கப்பட்டுள்ளனர். கற்பழிக்கப்படும் பெண்கள் சட்டத்தின் துணையை நாட முடியாதவராகவுள்ளனர். இஸ்லாமிய மத வழிபாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. குடியுரிமை அந்தஸ்து இல்லாத காரணத்தால் திருமணம் செய்வதற்குக் கூட அரசின் அனுமதியைப் பெறவேண்டும். இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறமுடியாது. இப் பெண்கள் கட்டாய குடும்பக் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக வேண்டும். இளைஞர்கள் சுதந்திரமாக நடமாட முடியாது போன்ற கீழ்த்தரமான சட்டங்களால் இம் மக்கள் தினமும் இம்சிக்கப்படுகின்றனர். நிச்சயம் இதுவோர் நவீன அடிமைத்தனத்திற்கான சட்ட வரைவுகளே! இந் நூற்றாண்டில் கூட இவ்வாறான கேவலமான மனிதர்களின் கூடங்களாக இவ்வுலகம் தன்னையிருத்திக் கொண்டுள்ளது என்பது வேதனை தரக்கூடியதே!

பிக்குகளின் தலைமையில் குண்டர் கோஷ்டிகள் மஸ்ஜிதுகளில் புகுந்து அவற்றைத் தீ வைப்பதும், திருக்குர்ஆன்களைத் தீயிடுவதும், வீடுகளை இடிப்பதும், வர்த்தக நிலையங்களை கொள்ளையடிப்பதும், இளம் பெண்களை மானபங்கப்படுத்துவதும் , இம் முஸ்லிம்களைத் தீயிட்டுக் கொளுத்துவதும் இக் காட்டுமிராண்டி மியன்மியரின் அரச சரித்திரங்களில் பதிக்கப்படும் பொன்னெழுத்துக்களாகும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சித்திரவதையை இப் புத்த வாதிகள் பரீட்சிப்பது ரோஹீங்கிய முஸ்லிம்களின் உடலிலும், உயிரிலும், வாழ்க்கையிலும் தான் !


சிட்வே, டாவுன்கு ,தபூ போன்ற பிரதேசங்களிலும் இவர்கள் வன்முறை காலத்துக்காலம்  நிகழ்த்தப்பட்டுள்ளது. ரோஹீங்கிய முஸ்லிம்கள் இந்நாட்டின் நிரந்தரப் பிரசைகளல்ல எனக் கோஷிக்கப்பட்டு அவர்கள் கொன்றொழிக்கப்படுகின்றார்கள்.

இம் மனிதாபிமானமற்ற கொலைவெறியை கண்டிக்காது சீனா, ரஷ்யா போன்ற பொதுவுடமை நாடுகளும்,  ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் அமெரிக்கா  மற்றும் ஆசிய, ஆபிரிக்க நாடுகளும் மௌனம் சாதிப்பதன் மர்மம் தானென்ன. அம் மர்மத்தின் பிண்ணனியில் நமக்குத் தெரிவது பர்மாவில் அவர்கள் மலிவாகப் பெற்றுக் கொள்ளவிரும்பும்  இயற்கை வளங்களும், மனித வளங்களும் தான்!

இவர்களுடன் இணைந்தவர்களாக அமெரிக்காவின் காலடியில் வீழ்ந்து கிடக்கத் துடிக்கும் அரபு நாடுகளும் தமது, ஆற்றல் ,மார்க்கம் கற்றுத் தந்த ஒழுக்க விழுமிய கலாசாரங்கள்  என்பவற்றை  மறந்து, தம் இஸ்லாமிய மார்க்க நெறியுடன் ஒன்றித்து வாழும் தம் சகோதரர்களுக்காக ஐனநாயகக் கோஷங்களை வெளிப்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றனர். இது  வருந்தத்தக்க கண்டிக்கத்தக்க செயலாகும்.

கண்டதுண்டமாக இம் முஸ்லிம் மக்களின் உடலை வெட்டிப் போட்டும், கண்டவுடன் சுட்டுக் கொண்டும் இப் பௌத்தவாதிகள் செய்யும்  இந்தக் கொலைகளைக் கண்டிக்க ஐ.நா வோ, பொதுசன சர்வதேச ஊடகங்களோ  பெரிதும் அக்கறைப்படாத  இன்றைய நிலையில், இம் மக்களின் மனிதாபிமானமற்ற இறப்புக்காக குழி தோண்டும் இவ் அக்கிரமக்காரர்களின் இதயங்களை அறுத்திட வல்ல இறைவன் ஒருவனால்தான் முடியும்.

இந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் கொல்லப்படும் மனிதாபிமானமற்ற செயல்களுக்காக ஆங்காங்கோ வாழும் முஸ்லிம் மக்கள் கண்டனத்தையும், ஆர்பாட்டத்தையும் மேற்கொண்டு வந்தாலும் கூட அவற்றின் வலுவும், வலிமையும் குறைந்தவை. அவை செவிடன் காதில் ஊதிய சங்கொலியாய்  கண்ணீர் காற்றில் கலந்து விடக்கூடியன.

இது ரமழான் மாதம். புனித மாதம். நோன்பாளிகளின் துஆக்கள் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படும் மாதம். இச்சகோதரர்களுக்கு நீதி கிடைப்பதற்காகவும் நிம்மதியான வாழ்விற்காகவும் நாமும் இறைவனிடம் இறைஞ்சி துஆ செய்வோமாக!



- Ms. Jancy Caffoor -






No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!