About Me

2012/08/09

நினைவெல்லாம் நீ


என் நினைவோரங்களில்
நிழலாடுமுன்னை ...........
களவாய் இறுக்கிப் பிடித்தே
கன்னம் தேய்த்தேனின்று........
கதறினாய் காதலில் நசிந்து
இறுக்காதே இன்னும்
நானுன்னில் தானிருக்கின்றேனென!

நறுக்கென்றோர் குட்டு
எனக்கிட்டாய்!
இருட்டிலுமுன் குறும்பு விழியோரம்
விசமம் பூட்ட
ஏதுமறியாதவளாய் நானும் .........
மௌனித்துக் கிடந்தேனுன்னருகில்!
மெல்லவென்னுயிரில் அலைந்தே
கன்னமிட்டாய் வாஞ்சையுடன்!

குட்டியது யாரோ............!- என
எட்டி நின்ற என்னையும் நீயிழுக்க
வட்ட நிலாச்சாறும் கசிந்தே
சட்டென்றே என்னுள் பரவ....
இட்டத்துடன் பற்றிநின்றாய்- என்
இடைவெளிகள் மறுத்தே தான்!

இடை  நெரித்து  நீயும்  ........
தடையேதுமின்றியென்
குரல்வளைக் காற்றிலுன் மூச்சை நசித்து
வருத்துக்கின்றாய் காதல் அனலால் -உன்
பருவச் செழிப்பையென்னுள் பாய்ச்சி
இருவரும் ஒருவராய் மாற!

போடா...........!
பொறுக்கியென்றேன்!!
தினமுன் னன்பை என்னுள் நீ
பொறுக்கியெடுப்பதால்!

சிலிர்த்து நின்றாய் சிங்கமாய் !
வலித்திடாமல்  கன்னம் கிள்ளி
சிறுக்கி மகளே..............உனை
இறுக்கியே என்புடைப்பேன்
மிரட்டிச் சொன்னாய் மிருதுவாய்
என் பெயருரைத்து!

பருவத்து பூவெடுத்து- உன்
புருவத்தில் சூடியவளே!
இன்னுமா நானுன்னைப்
பிரிவேனென்றாய்.............

பிரியேனொருபோதுமுனை  - அகிலச்
சூரியக்குழம்பு குளிர்ந்திட்டாலும்
மறவேனுன்னையென
வார்த்தைகளில் நேசம் நிரப்பி
கோர்த்திட்டாய் என்னுசிரினிலே!

ஏனடா நமக்குள்ளிந்த மயக்கம்
என்னடா செய்திட்டாயென்னை!
ஏக்கத்தின் பெருமுச்சில் நெஞ்சம் புடைக்க
பாராடா எனையென்றேன்- என்
பாரின் சுழற்சியவன்
கரங்களைப் பற்றிக் கொண்டே!

உன்னோடு பகிர்ந்தது
உன்னோடு இறந்ததென-என்
உசிருக்குள் முத்தச் சூடேற்றி
வசிகரித்துச் சென்றிட்டான் காதலாய்!

மறைந்திட்டாய் திடீரென!
நாளை வருவேனென  - என்
கருத்தினிலுன்னை  நிறைத்தபடி!
நொடிகள் யுகங்களாய் நகர
நாடியில் விரல் பதித்து
தேடி நிற்கின்றேனுன் திசையோரம்!

ஜன்ஸி கபூர் 




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!