About Me

2012/08/06

பத்ர் போர்



பத்ர் யுத்தம் நடைபெற்ற இடம்

நபி (ஸல்) அவர்கள் நுபுவ்வத்தின் பின் பதின்மூன்று வருடங்கள் பல்வேறு கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு மக்காவில் வசித்திருந்தார்கள். இறுதியில் அவர்கள் தமது தாயகத்தை விட்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றார்கள். எனினும் நபியவர்களைத் துன்புறுத்துவதை காபிர்கள் விட்டுவிடவில்லை. அவர்கள்  தனிமைப்படுத்தப்பட்ட முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்துவதோடு, அவர்களை மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செல்ல விடாது தடுத்தும் வைத்திருந்தனர்.

மேலும்  அவர்கள்,  நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள் மீதும் கடினமான பொருளாதாரத் தடையைத் திணிப்பதில் உறுதியாக இருந்தனர். மதீனாவுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பிரயாணக் கூட்டங்களைத் தடுத்தும் வைத்தனர். இந்தத் தடையானது நீண்ட காலம் நீடித்து, மதீனாவாசிகளின் மீது பெரும் சுமையையும், கஷ்டத்தையும் ஏற்படுத்தியதோடு, அத்தியாவசியமான உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக செங்கடல் ஓரங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்த்திலும் அவர்களைத் தள்ளியிருந்தது.

அபூஜஹ்ல், கடினமான வார்த்தைப் பிரயோகம் கொண்ட ஒரு கடிதத்தை நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பியிருந்தான். அதில் நபியவர்கள் மீதான தாக்குதலுக்கும், யுத்தத்திற்குமான ஏற்பாடு பற்றி குறிப்பிட்டிருந்தான்.

இவ்விடயத்தில் இரண்டு புனித அல்குர்ஆன் வசனங்கள் இறங்கின,

'அநியாயத்துக்குள்ளானவர்களுக்கு, யுத்தம் செய்ய அனுமதியளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ், இவர்களுக்கு உதவி செய்யப் ஆற்றலுடையோனாக இருக்கின்றான். இவர்கள், நியாயமின்றித் தங்கள் வீடுகளிலிருந்து துரத்தப்பட்டார்கள். எங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறியதுதான் இவர்கள் செய்த குற்றம். மனிதர்களில் அக்கிரமம் செய்யம்சிலரை சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருந்தால், கிறிஸ்தவர்களின் ஆலயங்களும், அவர்களுடைய மடங்களும், யூதர்களுடைய ஆலயங்களும், அல்லாஹ்வுடைய திருநாமம் அதிகமாக ஸ்தோத்திரம் செய்யப்படும் மஸ்ஜித்களும் அழிக்கப்பட்டே போயிருக்கும். அல்லாஹ்வுக்கு எவர் உதவி செய்கின்றாரோ அவருக்கு, நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க பலவானும் யாரையும் மிகைத்தோனுமாக இருக்கின்றான்' (அல்ஹஜ்- 39,40)


அந்த யுத்தத்திற்கான நாளும் வந்தது.


அது ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமழான் பிறை 17 ஆகும்.

மக்கத்து இறை நிராகரிப்பாளர்களான குறைஷியர்கள், உலகிலிருந்து இஸ்லாத்தை அழிக்கும் நோக்குடன் பெரும் படை திரட்டி "பத்ர்" எனும் இடத்தில் போரிடத் தயாரானார்கள்.

பத்ர் இடம் பற்றி அல்குர்ஆனில் பின்வரும் வசனங்கள் காணப்படுகின்றன.

"புனித மக்காவிலிருந்து 310 கி.மீ தூரத்திலும், மதீனாவிலிருந்து 155 கி.மீ தொலைவிலும் இரு நகரங்களுக்கு மத்தியில் அமைந்த  பகுதி "பத்ர்" !
நபி(ஸல்) அவர்களின் தலைமையில் அணிவகுத்த நபித்தோழர்கள் . வானவர்களுடன் இணைந்து போரிட்டு இஸ்லாத்தின் தடைக்கற்களைத் தகர்த்தெறிந்த புனித யுத்த பூமி அது! "  (அல்குர்ஆன் 3:123)


" பத்ர்" பள்ளத்தாக்கு பின்வரும் அடையாளங்களைக் கொண்டிருந்தது.
--------------------------------------------------------------------------------------------
* முதல் அடையாளம் (வலமிருந்து) - முஸ்லிம்கள் மதீனாவிலிருந்து வந்து முகாமிட்டிருந்த அருகில் உள்ள பள்ளத்தாக்கு "அல் உத்வத்துல் துன்யா"!

* இரண்டாவது அடையாளம் - வியாபாரக் கூட்டத்தினர் கடந்து செல்லும் கணவாய்ப் பகுதி

* மூன்றாவது அடையாளம் - ஜபலுல் மலாயிக்கா (அல்குர்ஆன் 8:42)

அவர்களது இந்த எதிர்பாராத போரழைப்புக்கு நபி (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் தயாராகினார்கள்.

 பத்ர் பிரதேசம் குறைஷிக் காபிர்களுக்கு சாதகமாகவே இருந்தது. அவர்களது யுத்தப்படையில் ஆயிரம் பேர் இணைந்திருந்தார்கள்.
ஆனால் நபி(ஸல்) அவர்களின் தலைமையினாலான படை போருக்காக தயாராகிக் கொண்டிருந்த பகுதி வெறும் மணற்பாங்கான பகுதியென்பதால் முஸ்லீம் அணியினர் பெரும் அசௌகரியத்தினையே எதிர்கொண்டனர். இருந்தும் அவர்கள் அல்லாஹ் தஆலா மீது கொண்டிருந்த நம்பிக்கையை கைவிடவில்லை.

அவர்களது படைப்பிரிவில் சுமார் 313 பேரே இருந்தனர். குறைஷியர்களை விட  அவர்கள் ஆட்பலத்தாலும், ஆயுதப் பலத்தாலும் பலவீனமான நிலையிலேயே இருந்தார்கள். ஆனால் அவர்களிடம் ஈமானிய பலம், அல்லாஹ்வின் அருள் , ஒற்றுமையுடனும் தியாகத்துடனும் போரிடக்கூடிய மனோபலமும் அதிகமாகவே இருந்தது. இவர்களிடமிருந்த ஆத்மீகப்பண்புகள் காரணமாக ஒழுக்கவிழுமியங்களும் அதிகமாகவே இருந்தது.

இதுவோர் பாரிய யுத்தமாகும். நபியவர்களுடன் இருந்த முஸ்லிம் போராளிகளுள் முஹாஜியர் சங்கடநிலைக்கானார்கள். அவர்களுள் சிலர் தமது பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள், பிள்ளைகளுக்கெதிராகவும் போரிட வேண்டிய நிலையிலிருந்தார்கள். ஆனால் அவர்கள் தங்கள் பாச உணர்ச்சிக்கு அடிபணியாமல், அல்லாஹ்வையை ஈமான் கொண்டு தம் ஆத்மீக பலத்துடன் போரிட்டனர்.

நபி(ஸல்) அவர்கள் பத்ர் யுத்தத்தில் போர்ப்படைத் தளபதியாக நின்ற இடம் "ஜாமிஉல் அரீஷ்" எனப்படுகின்றது.


                                              "ஜாமிஉல் அரீஷ்"

நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். நபி(ஸல்) அவர்களின் துஆ வை ஏற்று, முஸ்லிம்களுக்கு உதவியாக ஆயிரக்கணக்கான வானவர்களை அல்லாஹ் இறக்கி வைத்தான். சஹாபாக்களுடன் இணைந்து போரிடுவதற்காக மலக்குகள் வந்திறங்கிய மலையே "ஜபலுல் மலாயிக்கா" (மலக்குகளின் மலை) எனப்படுகின்றது.


நபி (ஸல்) அவர்களின் தலைமையினாலான 313 பேரை மாத்திரம் கொண்ட சிறிய முஸ்லிம் படை அல்லாஹ்வின் உதவியைப் பெற்று, 1000 பேரைக் கொண்ட எதிரிகளின் தாக்குதலை நேருக்கு நேர் சந்தித்து வெற்றிகரமாக முறியடித்து பாரிய வெற்றியைப் பெற்றார்கள்..

இப் பத்ர் வெற்றித் தினமானது 'யௌமுல் புர்கான்" என அல் குர்ஆனில் அழைக்கப்படுகின்றது. இதன் பொருளானது சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும் தினமாகும். இப் போர் வெற்றியானது இஸ்லாமிய எழுச்சிக்கு பெரும் உறுதுணையாகவிருந்தது.

முஸ்லிம்களுடைய வாழ்வியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், முஷ்ரிகீன்களுக்கு சாதகமான ஒரு சந்தர்ப்பத்தை முறியடிப்பதற்காகவும் நடைபெற்ற இப்போர் நமக்கொரு படிப்பினையாகும்.

"பத்ர்" யுத்தத்தில் 14 ஸஹாபாக்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள்.
நபி(ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் நல்லடக்கம் செய்யப்பட்ட பத்ர் ஸஹாபாக்களின் கப்ருக்கள் இவைதான்



"அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரை "மரணித்தவர்' என்று கூறாதீர்கள்! அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள். ஆனால் நீங்கள் அதனை உணரமாட்டீர்கள்"
(அல்குர்ஆன் 2:154)

பத்ர் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் தொகை பின்வருமாறு-
--------------------------------------------------------------------------------------------------------------
தாரீக் கமீஸ்      -84
இப்னு ஹிசாம்    -84
தாரீக் யாகூபி     -86 
தபகாத்            -84
பிஹார்           -84
தாரீக் தபரீ       -84   (ஆதாரம் - தாரீகுல் ஹமீஸ்)

இறந்தவர்களின் சடலங்களை வீசியெறிந்த கிணறு "அல்கலிப்" எனப்படுகின்றது.



எத்தகைய கொடுமைகள் நிகழ்ந்த போதிலும் நபியவர்கள் பிரச்சினைகளின் தீர்வாக யுத்தத்தை நாடியதில்லை. நபி(ஸல்) அவர்களின் யுத்தங்கள், நிலவிஸ்தரிப்பு, பழிவாங்கல் போன்ற நோக்கங்களைக் கொண்டவையல்ல.

நபி(ஸல்) அவர்கள் யுத்தத்தை விரும்பாத போதும் கூட , இஸ்லாமிய அழைப்புக்களுக்கான தடுப்புச்சுவர்களாக எதிரிகள் செயற்படும் போதும், உடன்படிக்கைகளை முறிக்கும் போதும், அநீதியான ஆட்சியும், அதிகார துஷ்பிரயோகமும் இடம்பெறும் போதும், முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பாதுகாத்து அவர்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவும், சத்திய வார்த்தையை உயர்த்துவதற்காகவும் தேவைப்பட்ட இறுதித்தீர்வாக யுத்தத்தைக் கைக்கொண்டார்கள். 

இவ்வாறான போர்களின் வெற்றி மூலம் இஸ்லாம் சர்வதேச ரீதியில் பலப்படுத்தப்பட்டதுடன், அடிமைப்படுத்தப்பட்டிருந்த முஸ்லிம்களின் ஏற்றத்தாழ்வுகளும் நீக்கப்பட்டன. நடுநிலையான ,நேர்மையான, நீதியான ஆட்சிகள் நிலைப்படுத்தப்பட்டன. இஸ்லாமிய எழுச்சிக்கு இவ்வாறான யுத்தங்களும் பங்களிப்புச் செய்துள்ளன என்பதும் மறுக்கப்படாத உண்மையாகும். 

அநீதிக்கெதிராக  ஜிஹாத் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும் என்பதை இத்தகைய யுத்தங்கள் நமக்குணர்த்தி நிற்கின்றன.


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!