About Me

2012/08/09

பகை வேண்டும் புகையில்!


அழகான வாழ்க்கையின் ஆனந்தம் ஆளுக்காள் வேறுபடுகின்றது. நம் வாழ்வின் ஆரோக்கியம் நம்மால் சீரழிக்கப்படும் போது துயரும், நிம்மதியின்மையும் நமது சொத்தாகின்றது. அற்பமான சந்தோசத்தில் தம் ஆயுளை இழக்கும் பலர் புகையிலையுடன் நட்பைப் பேணி வருவது ஆரோக்கியமற்ற செயலே!

"நிச்சயமாக அல்லாஹ் , ஒருவர் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளாத வரை அவர்களை மாற்ற மாட்டான்" ( திருக்குர்ஆன் 13:11)

எனவே அழிவுப் பாதையில் நாம் பயணிக்கும் போது , அதனை உணர்ந்து வாழ்வை திசை திருப்பி நம்மை நாமே  பாதுகாத்துக் கொள்ள  வேண்டும். மனிதனை அழிக்கும் சக்தி வாய்ந்த பொருட்களுள் புகையிலையும் ஒன்றாகும்.

ஆரம்ப காலத்தில் அமெரிக்கர்கள் புகையிலையை காயங்களைச் சுத்தப்படுத்தவும், தொற்று நீக்கவும் பயன்படுத்தினர். 1847 ல் "பிலிப் மொரிஸ்" என்பவரே புகையிலையைப் பயன்படுத்தி சிகரெட் தயாரித்தார்.


1953 ல் டாக்டர் எமல் என்பவர் சிகரெட் பாவனையால் புற்றுநோய் ஏற்படுவதை கண்டறிந்தார். இதனைத் தொடர்ந்து 1964 களில் அமெரிக்க அரசு புகைபிடிப்பதால் சுகாதாரத்திற்கு கேடு எனும் நோக்கில் சிகரெட் விற்பனைக்கெதிராக சட்டம் இயற்றியது. 

1988 ம் ஆண்டு பின்லாந்தும்,1994 ல் பிரான்சும் புகையிலை விளம்பரத்துக்குத் தடை விதித்தது.

மனிதனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் முக்கிய இரண்டாவது காரணிகளுள் ஒன்றாக புகையிலை விளங்குகின்றது.

வெற்றிலையுடனும், மூக்குப் பொடியுடனும் சேர்த்து பாவிக்கப்படும் புகையிலையை பீடி, சுருட்டு, சிகரெட் போன்ற வடிவங்களிலும் பயன்படுத்துகின்றனர்.

புகையிலை என்றதும் நம் நினைவுக்கு வரும் சிகரெட்டில் நிக்கோடின் எனும் நச்சுப்பொருள் உண்டு. இப் பொருளுடன் மேலதிகமாக பியூட்டேன், காட்மியம், ஸ்டியரிக் ஆசிக் , அமோனியா , நாப்தலமைன், போலோனியம் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களும் உடலோடு சேர்கின்றன. இந்நச்சுப் பொருட்களுள் பல வெடிகுண்டு செய்யப் பயன்படுபவை. எனவே உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் சிகரெட்டும் ஓர் வெடிகுண்டே! இதிலுள்ள 4000 இரசாயனப் பொருட்களுள் 43 இரசாயனப் பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. புற்றுநோயானது சுவாசப் பாதை வழியே கடும் தொற்றுதலை ஏற்படுத்துகின்றது.

புகையிலையிலுள்ள 4000 ற்கு மேற்பட்ட நச்சுப்புகையை சுவாசிக்கும் பலர் ஒரு நிமிடத்துக்கு 6 பேர் எனும் வீதத்தில் இறந்து போகின்றார்கள். ஆண்டுக்கு 60 லட்சத்துக்கும் மேல் பலியாகும் இப் புகையிலைப் பாவனைக்கு அதிகம் பலியாகுவது வளர்முக நாட்டவர்களே!

வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தம், நண்பர்களின் இணைவு,ஸ்டைல், காதல் தோல்வி, தனிமை, மகிழ்ச்சி வாழ்க்கைப்பிரச்சினைகளை சமாளிக்க முடியாமை, பொழுதுபோக்கு எனத் தொடரும் சாதாரண புகைபிடிக்கும் பழக்கம் காலப்போக்கில் அவர்களை நிரந்தரக்குடிப்பழக்கத்திற்கும்  அடிமையாக்குகின்றது. 

புகை பிடிப்பதற்கான காரணங்களை ஆய்வு செய்ததில் பின்வரும்  விகிதப் பெறுபேறுகள் கிடைத்துள்ளன

மகிழ்ச்சிக்காக                           - 22 %
பொழுது போக்குக்காக          - 8.2 %
விடுபட முடியாத காரணம்  - 17 %
பரீட்சித்துப் பார்க்க                 -  8.7 %
தனிமையைப் போக்க            - 10.5 %
மன அழுத்தம்                            -  10 %
பிரச்சினை                                   - 15 %



புகைப்பழக்கத்தின் மூலம் அனைத்து உறுப்புக்களும் பாதிக்கப்படுகின்றன. மாரடைப்பு, நுரையீரல்ப்புற்று, இரத்தக் கொதிப்பு, ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், வீரியக்குறைவும் போன்ற பல விளைவுகள் ஏற்படுகின்றன. அத்துடன் புகை பிடிப்பவர்களின் குழந்தைகளுக்கு சளி, இருமல், மூச்சுத் திணறல் என்பவையும் ஏற்படலாம். ஒருவரின் புகைபிடிக்கும் பழக்கத்தினால் அவர் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். "புகை பிடிப்பது உடல நலத்திற்கு கேடு" என எச்சரிக்கை விடப்பட்டும் கூட அதனைப் பாவிப்போர் தொகை குறைந்தபாடில்லை.

நிறுத்தும் வழிகள்
--------------------------
உடனடியாக இதனை கட்டுப்படுத்துவது கடினம் தான். ஏனென்றால் தொடர்ந்து ஒரு செயல் செய்யப்படும் போது அது பழக்கமாக மாற்றமடைகின்றது. இப் பழக்கத்தை உடனடியாக முற்றாக நிறுத்த மனவுறுதியுடன் கூடிய கட்டுப்பாட்டு பயிற்சி அவசியம். இருந்தாலும் கூட "முயன்றால் ஆகாதது ஒன்றுமில்லை." என்பதற்கேற்ப  புகை பிடித்தலின் தீங்கின் பால் மனதை நிலைப்படுத்தி அதன் விளைவுகளை ஆராய்ந்து உணர்ந்து, மனவுறுதியுடன் அந்த ஆர்வத்தைத் தடுக்க வேண்டும். புகைக்கும் ஆர்வம் ஏற்படும் போதெல்லாம் வாயில் மெல்லும் சுவிங்கம், சாக்லேட், நீர், எலக்ட்ரானிக் சிகரெட், வாயில் ஒட்டிக் கொள்ளும் நிகோட்டின் கலந்த கம், பேஸ்ட் என்பவற்றைப் பயன்படுத்தலாம். படிப்படியாகக் கட்டுப்படுத்துவது தவறு ஓரேயடியாக அதனை நிறுத்த முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு புகை பிடிப்பதனை நிறுத்தினால்
----------------------------------------------------------
20 நிமிடங்களில் புகை பிடிப்பவரது இரத்தஅழுத்தம், இரத்தவோட்டம் போன்றவை  சீராகும்.  8 மணி நேரத்தில் இரத்தத்திலுள்ள ஒட்சிசன், காபனீரொட்சைட்டு போன்ற சுவாசத்துடன் தொடர்பான வாயுக்களினளவு சீரடையும். 72 மணித்தியாலயத்தில் இச்செயற்பாடு காரணமாக நுரையீரல் உள்ளிட்ட சுவாசப் பாதையிலுள்ள பகுதிகள் அனைத்தும் சுத்திகரிக்கப்பட ஆரம்பிக்கப்படும் .சுவாசிக்கும் திறனும் அதிகரிக்கப்படும். 9 மாதங்களில் இருமல், சளி என்பவற்றின் தாக்கமும் குறைகின்றது.ஓராண்டின் பின்னர்  மாரடைப்பு படிப்படியாக குறைய ஆரம்பிக்கின்றது, 10 வருடங்களின் பின்னர் சுவாசப் புற்று நோய் அறவேயில்லாமற் போகின்றது.

இலங்கை , இந்தியா போன்ற நம் நாடுகளில் புகைபிடிக்கும் பழக்கம் பெரும்பாலும் ஆண்களிடையேதான்  காணப்படுகின்றது.அரிதாகவே பெண்களிற் காணப்படுகின்றது. பலசிந்தனைச் சிற்பிகள் கூட இப் பழக்கத்தால் இன்று சீரழிந்து காணப்படுகின்றனர். தினந்தோறும் உழைக்கும் பணத்தில் ஓர் பகுதியை இதற்கென செலவளித்து உபாதைகளையும், துன்பத்தையும் விலை கொடுத்து வாங்கும் பழக்கம் இன்றைய நம் இளைஞர்களிடத்தில் அதிகமாக காணப்படுகின்றது. இன்று புகைப்பிடிக்காத இளைஞர்களின் எண்ணிக்கை மிக அரிதாகவே காணப்படுகின்றது. விருந்துகளில் ஒன்று சேரும் இளைஞர்கள் புகைபிடித்தலையும், குடிப்பழக்கத்தையும் தம் அம்சமாக பெரும்பாலும் சேர்த்திருப்பார் என்பது மறுப்பதற்கில்லை.

புகையிலை நிறுவனங்களின் வர்த்தக தந்திரோபாயங்களும், புகைத்தலின் கேடு தொடர்பாக அக்கறைப்படுத்தப்படாத மனநிலையும் இன்றைய நவீன உலகில் புகை பிடிக்கும் பாவனையை அதிகரிக்கச் செய்துள்ளன. மறுபுறம் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையில் 170 நாடுகள் புகையிலைக் கட்டுப்பாட்டினை நடைமுறைப்படுத்தும் வகையில் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.அரசானது விநியோகம், விளம்பரம் தொடர்பாக உரிய நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்களையும் மேற்கொண்டுள்ளன.

ஆனால் புகைத்தலைத் தடை செய்தல் எனும் மிகப்பெரிய கனவினை நிறைவேற்றும் கடமையினை ஒவ்வொரு நாடும் உணர்ந்தாலும் கூட, இதன் மூலம் கிடைக்கும் பொருளாதாரத்தை இழப்பதாக இல்லை. சிகரெட் போன்ற பொருட்களுக்கு அதிக வரி அறிவித்தும் கூட, அதிக விலை கொடுத்து வாங்கி தம்மை சீரழிக்க பலர் தயாராகவே உள்ளனர். எனினும் பாவனையைக் கட்டுப்படுத்தும் வெற்றி பொதுமக்களின் அர்ப்பணிப்பு மிகு உணர்ந்து கொள்ளலிலேயே தங்கியுள்ளது.

இவ்வாறாக புகை பிடிப்பதனால் ஏற்படும் தீங்குகளை மக்கள் முன் எடுத்துக் காட்டி அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் மே மாதம் 31 ம் திகதி " சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக" அறிவித்துள்ளது புகையிலையினால் ஏற்படும் ஆபத்துக்களையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே இத்தினத்தின் நோக்கமாகும். 

.புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட புகையிலை பாதிப்பினால் ஏற்படும் நோய்களைத் தீர்ப்பதற்கே அதிகளவு பணம் அரசுக்குச் செலவாகின்றது. தனி மனிதன் சமூகமாக,  சமூகத்தினரோ ஒன்றிணைந்து நாட்டின் அங்கத்தவராகின்றனர் . எனவே தனி மனித ஆகேகியமின்மையால் நாட்டின் நலமும் பாதிக்கப்படுகின்றது. 

நம்மவர்கள் சிந்திப்பார்களா.......புகையின் மீது பகை கொண்டு அதனை நிந்திப்பார்களா! காலம் பதில் சொல்லும் !


2 comments:

  1. Replies
    1. என் எழுத்தார்வத்திற்கு நீங்கள் தரும் ஊக்குவிப்புக்கு நன்றி ......ஸ்ரீதரன்

      Delete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!