இலக்கியப்பிருந்தாவனம்
புல்லல் ஓம்பு என்றது உடையாரே
--------------------------------------------------------
காதலில் இசைந்த தலைவனும் தலைவியும்
களவில் கனிந்தனர் விழிகளோ இன்பத்தில்
கண்டனரே பெற்றோரும் சினத்திலே பொங்கினர்
கலங்கியதே நெஞ்சங்களும் ஈரமும் அனலில்
வெந்த மனதில் விரக்தி பிழம்புகள்
வெடித்த பொழுதினில் உடைந்தாள் தலைவியும்
இடிந்த இதயமும் இறக்கியதே வார்த்தைகளை
இரசித்த காதலுக்குள் இரணங்களின் சேர்க்கையே
சந்தித்த தலைவனை நிந்தித்தாளோ தலைவியும்
சிந்தையை நிறைத்தவள் சிதறினாள் வார்த்தைகளை
அந்நியமானாள் அடுத்தவர் தலையீட்டின் உச்சத்தினால்
அவலத்தின் சுவைக்குள் விழிநீரும் விழுந்திடவே
விட்டுவிடு என்றவளை தொட்டணைக்கத் துடித்தானே
விலகிடும் காதலோ இது என்றானே
உருகும் காமமும் காதலில் நனைந்திட
உணர்வும் உறவாடத் துடித்ததே தவிப்புடன்
மறுப்புரைத்தான் மனதுக்குள் நிறைந்திருந்த தலைவிக்கு
மனம் கவர்ந்தவளே மறுக்கிறேன் பிரிவிற்கே
உந்தன் இருண்ட கூந்தலுக்குள் அலைகின்ற
எந்தன் இரசிப்பினை உடைக்காதே கண்ணே
என் முன்னே பேசிடாதே என்றுரைத்தாரே
அன்றி தழுவிட மறுத்துரைத்தாரோ பெண்ணே
இன்பத்தின் சுவைதனை மென்றிட வேண்டும்
உன் பற்களை மெல்லக் கடித்தே
என்னவளே மெல்லத் தழுவிக்கொள் என்றானே
தலைவனின் கூற்றினை செவிகளும் தாங்கிட
தலைவியின் சிந்தையும் மொழிந்தது உணர்வினை
தனக்குள்ளே எண்ணினாள் தவிப்பினில் உறைந்திட்டாள்
அவன் உரைப்பில் மெய் இருப்பின்
அக அன்பினால் வாழ்க்கைக்குள் இணைவேன்
அன்றில் பொய்யுரைப்பின் கருகுமே மாலையும்
அலைந்திடும் நெஞ்சமும் ஏக்க வெம்மையில்
அழுதிடும் விழிகளை ஆற்றாத தோள்களும்
ஆற்றாத் துயரில் வாடிடுமே என்றும்
அதுவும் அழகுதானே எனும் நெஞ்சின்
அவதியின் அதிர்வினை உணர்ந்த தலைவனும
அகம் மகிழ்ந்தானே தலைவியின் இசைவையெண்ணி
விலையுயர்ந்த காதலின் மெய்யன்பை மெல்ல
தலைவியே தலைவனும் உம்மைத் தழுவாவிடில்
தவழ்ந்திடும் நெஞ்சத்து மாலையும் கருகுமே
தனலாய் கொதித்திடும் ஏக்கத்தின் தாக்கத்தில்
தவிக்கின்ற உன் விழிகளின் சோர்வும்
தோள்களின் வாட்டமும் அழகைப் பறித்தாலும்
உனக்கு அதுவும் அழகே என்றாளே
நெஞ்ச அதிர்வினைத் தனக்குள் பகிர்கையில்
தன்னுடன் இசைகிறாள் என்றெண்ணி மகிழ்ந்தானே
தலைவனும் காதல் அன்பினைச் சுவைத்தவனாக
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!