About Me

2020/11/01

ஒருநாள் இரவில்

1. ஒருநாள் இரவில்

---------------------------

சலனமற்ற இரவும் அவிழ்க்கின்ற மௌனத்தில்/

சங்கமிக்கின்றன நம் உணர்வுகள் இதமாக/

மெலிதாகத் தீண்டுகின்ற உன் விரல்களால்/

மெருகேறுகின்றதே என் வெட்கப் புன்னகையும்/

விரிகின்ற நீள்வானில் ஒளியினைப் பிசைகின்ற/

விண்ணிலாவும் கவியெழுதுகின்றதோ நம் காதலிற்கே/

--------------------------------------------------------------------------- 

2,நான் அனுப்புவது கடிதம் அல்ல

********************************** 

உயரப் பறந்த உன்றன் சிறகினைத்/

தொட்டிடத் துடிக்கின்றேன் நடுவில் சாகரமோ/

எட்டிப் பார்க்கின்றாய் கனவின் விழிகளில்/

கட்டியணைத்தே கன்னம் சிவந்திடத் துடிக்கின்றேன்/


உனைத் தழுவிய விரல்களின் தவிப்பு/

உருமாறுகிறதே வரிகளாய் உன் வசமாக/

தனிமைக்குள் முகம் புதைக்கும் எண்ணங்களைத்/

திணிக்கின்றேன் மடலில் நீயும் ஏந்திடவே/


ஏக்கத்தைப் பிழிந்தே தீட்டினேன் வார்த்தைகள்/

ஏற்றிடு  என்னுள்ளத்தை  உன்றன் கரங்களில்/ 

------------------------------------------------------------------------------ 

 

3. நாணமோ இன்னும் நாணமோ

*********************************** 

சுருங்கிய தேகங்கள் சுமக்கின்ற அன்பு/

சுகத்தின் இரம்மியத்தில் சுவைக்கின்றதோ மகிழ்வினை/

நரை கண்டும் குறைந்திடாக் காதல்/

திரைதனை விரிக்காது ரசிக்கின்றதோ வெட்கத்தை/

முதுமைக்குள் சிரிக்கின்ற வாலிபக் காதலிது

------------------------------------------------------------------- 

 4. காணி நிலம் வேண்டும்
************************** 
காணி நிலம் வேண்டும் அதில்/
கனிந்திடும் நல்மரங்கள் முளைத்திடல் வேண்டும்/
பசுமையின் அழகினை நிதமும் சுவைத்திட/
பச்சை வயல்களும் செழித்திடல் வேண்டும்/

மழையும் வெயிலும் குடிபூரா வீடொன்றில்/
மங்கள உறவுகளுடன் வாழ்ந்திடல் வேண்டும்/
தென்றலின் சந்தத்துடன் தென்னங்கீற்றுக்களின் பாட்டொலி/
தெவிட்டா இசையாகி அணைத்திடல் வேண்டும்./

----------------------------------------------------------------------- 
5. வெற்றிக்கான உன்றன் பயண நடை/   
வெல்லுமே  தடை வீழ்த்தி/
சூழ்கின்ற இடர்தனை   உடை/
வாழ்வியல் புதிர்களுக்கான விடை கிடைக்கும்/

------------------------------------------------------------------------ 
 
6



7. புன்னகைப் பூக்கள்
******************** 
கொஞ்சுகின்ற நினைவுகள் சுவைக்கின்றதோ உணர்வினை/
இதழ்களின் மடிப்பினில் தழுவும் புன்னகை/
இன்பத்தில் மலர்கின்றதே அழகாக/

ஜன்ஸி கபூர் - 7.11.2020
------------------------------------------------------- 




8. அழகு மலர்
-------------------------
சின்ன வெண்ணிலா மண்ணில் உலாவுகையில்/
வண்ண மலர்கள் கொஞ்சுதே மகிழ்வாய்/
பஞ்சுக் கன்னங்கள் ரசித்திடும் புன்னகை/
நெஞ்சினில் வீழ்கின்றதே இன்பத்தின் மொழியாகி/

ஜன்ஸி கபூர் - 9.11.2020


---------------------------------------------------------------------------------------- 

9. ஏதோ நினைவுகள் கனவுகள் நெஞ்சிலே
-------------------------------------------------------------------------
இயந்திரமாக உழைக்கின்ற இதமற்ற வாழ்விலே/
இசைகின்ற சுமைகள் இன்னலை வருடுகையில்/

தொலைகின்றதே வசந்தமும் தொல்லையோடு தனிமை/
கடந்துபோன காலங்களின் களிப்பூட்டும் நிழல்கள்/

தடம்பதிக்கும் இனிமையாக தொடரூந்துப் பயணமதில்/
விரைவோட்ட அசைவிலும் அவிழாத கனவுகள்/

விழுகின்றபோது விழிகளும் மெய்மறந்தே ரசிக்கின்றன/
மகிழ்வோடு பூத்த மானசீகப் பொழுதுகளை/

ஜன்ஸி கபூர் - 11.11.2020



--------------------------------------------------- 

10. ஒளி வீசும் உன் அழகால்/
களிப்படைகின்றதே என்றன் காதல் மனதும்/
வெளிக்குள் உலாவும் உன் னிழலை/
எனைப் போல் கொஞ்சிடுதோ வளியும்/

ஜன்ஸி கபூர் - 12.11.2020

------------------------------------------------- 

11 தாய் மடி கிடைக்குமா ------------------------------- நகரும் பொழுதுகளை
நசுக்குகின்றதே வறுமை/ நகைக்கின்ற விதிக்குள்
நனைகின்றதே துயரும்/ கண்ணீரின் ஈரலிப்பில்
கண்களும் துடித்திட/ அலைகின்ற அலைகளை
அணைக்கிறேன் மனதுள்/ சோகங்களை மறப்பதற்கே
தாய்மடி கிடைக்குமா/
ஜன்ஸி கபூர் - 17.11.2020
--------------------------------------------------------------

12. புன்னகை மலரே

நெஞ்சத்தைத் தழுவும் அன்பு மலரே
அள்ளுகின்றேன் உன்றன் அழகினைக் கண்ணுக்குள்
வெள்ளைக்குதிரை மீதேறி நீயும் சுற்றுகையில்
உள்ளத்தின் களிப்பில் பூக்கின்றதோ புன்னகையும்

ஜன்ஸி கபூர் - 17.11.2020




-------------------------------------------------------------- 
13. சந்திப்பு

நிலவொளி சிந்தும் நதிக்கரை ஓரம்
உலாவும் தென்றலில் மேனி நனைத்தே
உள்ளங்கள் பிணைந்த சந்திப்பு வேளை
மொழிகள் மறந்த அன்பின் மலர்வில்
கனிந்த காதல் உயிர்க்கின்றது கண்களில்

ஜன்ஸி கபூர் - 20.11.2020

------------------------------------------------------------------------- 


14. என் உலகம்
************* 
சுதந்திர பூமிக்குள் 
சுடுகின்ற வாழ்க்கை/
சுற்றமும் உறவும் 
சூழ்ந்திடாத தனிமை/

விரிகின்றது எனக்குள் 
விடிவில்லாப் போராட்டமாக/
சிறகு அறுந்தாலும் 
பறக்கத் துடிக்கின்றேன்/

ஜன்ஸி கபூர் - 21.11.2020

 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!