சொந்தம் எப்போதும்!


கால நகர்வில் சிதையாத- என்
மன தேசத்தின்
மானசீக தேசிய கீதம் நீ!

உன்.............
ஞாபகப் பிரகடனங்களிலேயே - என்
இருப்பும் உறுதிப்படுத்தப்படுகின்றன!

உன்...........
அசைவுகளை மோப்பம் பிடித்தே
என் புலனங்கங்கள்
விருது பெற்றன உளவாளியாய்!

என்............
உணர்வுத்தூறலில் உனை நனைத்து
கவிதையாய்ச் சுமக்க - என்
ரேகைகள் உடன்பட்டன!

உன்னை உச்சரிப்பதால்............
சொந்தமான சுருதி - என்
குருதிக்குள் குடியிருப்பானது!

பனித்துளிக்குள் பதுங்கியிருக்கும் - உன்
நாணம் கண்டு
சூரிய ரேகைகள் குளிரானது!

என்...............
இமையோரம் ஒளியுமுன்
மலர் முகம் காக்க............
பூட்டிவைத்தேனுன்னை
என் கவிச்சோலைக்குள்!

உன் ...........
நளின நடையில்
சுளுக்குக் கண்ட என் இலட்சியம்
இப்போ
உன் ஆணையிலொட்டிக் கிடக்கின்றது!

நீயுன்..........
நக முனைகளின் தலை சீவுகையில்
வலிக்கின்றன
என் விரல்கள்!

இவ்வுருளுமுலகின்
மிரளும் யதார்த்தம் கண்டு- உன்
காலடியில் பரவிக் கிடக்க
என் ஆத்மா துடிக்கின்றது
சில கணங்களேனும்
நிம்மதிச் சுகத்திற்காய்!

நரை கண்டாலும்
பிரிவுத் திரை காணா நம் சொந்தம்.........
என்றும்
கறை காணா நேசத்தின்
இருக்கை!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை