விதியின் காலடியில்


அன்றோ நாம்
நேசத்தைச் சுருக்கிக் கொண்டோம்
மூன்று  முடிச்சுள் !
இன்றோ.................
நம் வாழ்வின் ஸ்பரிசம்
தூக்குக் கயிற்றில்!

போலியான வாழ்விற்கு
வேலியெதற்கு தங்கத்தால்!

நேச வார்த்தைகளால்- நம்
நெஞ்சை நிரப்பி............
நாமீன்ற கனாக்கள்
வீழ்ந்து கிடக்கின்றன ......
ஞாபகவறையில்
வெறும் செல்லாக் காசாகி!

மனப் பொருத்தமென்று
மணம் கண்டோம்..............
பணப் பொருத்தமின்றி
கானலில் தடம் பதித்தோம்!

குடும்ப விழுதுகளில்
உலாக் காணத் துடித்து நின்றோம்!
நீயோயின்று - எனை
அக்கினிக்குள் சிறைப்படுத்த
துடிக்கின்றாய்!

ஓ....................!
கண்ணீரில் காணாமற் போன
சொப்பனம் தேடி...........
கன தூரம் நடக்கின்றேன்
தனிமையில் !
நீயோ...........
வேற்று மனிதனாய்
நெருஞ்சியில் விழி நெய்து
பழிக்கின்றாய் என் விதி மீது!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை