தேர்தல்


அமைதித் தெருக்களிலெங்கும்
ஆரவாரக் கோஷங்கள் !
தெருச் சுவரெங்கும்
சுதந்திரமாய்ச் சிரிக்கும்
மனித முகங்கள் !

காணாத முகங்கள்
படியேறி வாக்குக் கேட்கும்!
வார்த்தைக் கோஷங்களால்
எதிரணிகள் நாற்றமெடுக்கும்!

அச்சுப் பதிப்புக்களில் பல கனாக்கள்
அழகாய்ச் சிரிக்கும்! - அது
பழகிய மாந்தராய்
உரிமையோடு வீட்டுக்குள் வந்து போகும்!

ஒலிபரப்புக்களின் உரப்பு செவிக்குள்
ஓஸியில் நுழையும்!
ஓடியுழைக்கும் கூஜாக்கள் - தெருக்களில்
கூடிப் புகழ் பாடும்!

வாக்குறுதிகளின் கனம்
விண்ணேறி நம்மை எட்டிப் பார்க்கும்!
நம்பிக்கையின் வேரூன்றல்
பொது ஜனங்களைச் சூழ்ந்து கொள்ளும்!

ஆட்சிக் கொடிகள் தலையாட்டும்
தினம் அவசர அபிவிருத்திகளில்!
வோட்டுக்களின் வேட்டைக்காய் - அவை
முகமன் பாடித் திரியும்!

மோதல்களில் மோகங் கொண்டோர்
மெல்ல விழித்திருப்பார் கணங்களுக்காய் !
வெற்றி முரசறைந்தால் - அவர்
வெளுத்தும் வாங்குவார்!

பட்டாசுக்கள் படபடக்கும்........
பணமும் றெக்கை கட்டிப் பறக்கும்!
கள்ள வோட்டும் நல்ல வோட்டும்
களத்தில் மோதிக் குதிக்கும்!

குருதி பூசும் ஜனநாயகம்
குனிந்து கும்மி பாடும்!
தேர்தல் வெற்றி கண்டால்
வாக்கும் தோற்றுப் போகும்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை