முகநூலும் தவறுகளும்


உலகமானது நவீன தொழினுட்பத் தொடர்பாடல் மூலமாக கைக்குள் சுருங்கிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் முகநூலின் வளர்ச்சியும் நம்முள் ஏறுமுகம் காட்டி நிற்கின்றது. நம்முன்னால் ஒருவரின் முகநூலின் பயணத்தடங்களாக அடையாளப்படுத்தி நிற்பவை அவர்கள் வெளிப்படுத்தும் பதிவுகளும், பின்னூட்டங்களுமே!

ஒருவர் மனதை அறியவேண்டுமானால் அவர்கள் அடிக்கடி பிரயோகிக்கும் வார்த்தைகளை அவதானிக்க வேண்டும். ஏனெனில் வார்த்தைகள் என்பது ஒருவரின் மனவோட்டத்தின் பிரதிபலிப்பே!

முகநூலானது ஓர் திறந்த புத்தகம். யார் வேண்டுமானாலும் கட்டுப்பாடின்றி உட் செல்லலாம். நண்பர்கள் வடிவில் தீங்கு பயக்கும் உளவாளிகளும் நம்முலகில் புகுந்து தீங்கினை நமக்குள் எத்திவைக்கலாம். ஆனால் மறுபுறம் தேசஎல்லைகள் கடந்து பல திசைகளிலும், பல நாடுகளிலும் வாழும் பல மனிதர்களின் கரங்களை பேதமைகள் களைந்து ,நட்புடன் இணைக்கும் பாலமாகவும் முகநூல் எனும் இணையத்தளம் விளங்குகின்றது. தொலைவில் வாழும் முகம் நோக்காத பலர் அக எண்ணங்களின் ஒருமைப்பாட்டுடன் ஆரோக்கியமாக இங்கே ஒன்றிணைகின்றனர். இந்நட்புக்களில் வெகுசிலவே வாழ்வின் கடைசிக் காலங்கள் வரை தொடர்ந்துவருகின்றன.

எந்நட்பாயினும் அதன் செழுமைக்கு புரிந்துணர்வு மிகவும் அவசியம். நட்பும், அன்பும் அதிகரித்த நிலையில் புரிந்துணர்வின்றி பிரயோகிக்கப்படும் சிறுவார்த்தைகளாயினும் மன மகிழ்வைக் காயப்படுத்தி, நட்பை அழவைக்கக் கூடியவை.

 "கிட்டவிருந்தால் முட்டப் பகை"

இது நம் வாழ்வின் அனுபவங்களால் பிரயோகிக்கப்பட்ட முதுபழமொழி ..... பழமொழிகள் யாவும் மறுக்கப்படாத உண்மைகள்..முகநூலில் நாம் நட்பின் ஈர்ப்பால் அடிக்கடி  தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் செய்திப் பரிமாற்றம் காரணமாக சாதாரணமான இருவர்  நட்பின் உலகிற்குள் வசீகரத்துடன் தள்ளப்படலாம். நண்பர்கள் காதலர்களாக மாற்றப்படலாம். அவ்வாறே அதிக சுதந்திரமான புரிந்துணர்வில்லாத கருத்தாடல்களின் மூலமாக நல்ல நண்பர்களுக்கிடையே மௌனமாகத் தோன்றும் மனக்கசப்பு, பகைமை மூலம் இடைவெளியையும் ஏற்படுத்தப்படலாம்.

அன்பான நட்பினர் பிரிவையும் வென்று நிற்பர் என்பது பொதுமொழி. ஆனால் இவை வெறும் சொல்லாடல்களுக்குப் பொருந்தினாலும். நிஜ நட்பில் அதிக அன்பே எதிர்பார்ப்பாக அமைந்து மனவேதனைக்கு வழிகோலும்.

முகநூல் நட்பை உறுதிப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டுமாயின் அடிக்கடி குறித்தவொருவருடனான  அநாவசிய செய்திப்பரிமாற்றம் செய்வதைத் தவிர்த்தல் வேண்டும், உண்மையில் முகநூல் "இன்பாக்ஸ்" என்பது விரோதத்தை வளர்க்கக் கூடிய அழுக்குக் கூடை. ...முகநூலில் அவ்வவ்போது இடப்படும் பதிவுகளுக்கான விருப்புக்களையும் , வெளிப்படையான நல்ல ஏற்புடைய பின்னூட்டங்களையும் இடுவது கூட நல்ல நட்புக்கான வழிமொழிதல்களே!  தனிப்பட்ட செய்தியாடல்களைத் தவிர்த்து நட்பைக் காக்கலாம்.

சில நிகழ்வுகள் தரும் படிப்பினைகள் நமக்கு துன்பம் தருபவையாக ஆரம்பத்தில் இருந்தாலும் கூட அவை நம் நிம்மதியை வார்க்கும் நிகழ்வுகளே என்பது காலம் நமக்குள் காட்டி நிற்கும் உண்மைகளாகின்றன. சில மாற்றங்கள் ஏமாற்றமாக மாற்றப்படுவதை தவிர்க்க "இன்பாக்ஸ்" செயலிழக்கப்படுவது அவசியம்.

மேலும் முகநூல் பலர் சங்கமிக்கின்ற பொதுச்சந்தை. இவற்றில் பல நல்ல விடயங்கள் பரிமாறப்படும் அதே நேரம் தீமைகளும் பரிமாறப்படுகின்றன. "போலி" முகங்கள் பல இங்கு உலாவுவதற்குக் காரணம் ஒருவர் எத்தனை முகநூல் பக்கங்களையும்  உருவாக்கலாம் எனும் தாராளமயக் கொள்கை யாக்கமாகும். ஈமெயில் முகவரி மட்டுமேயிருந்தால் போதும் முகநூல் உருவாக்கத்திற்கு தடையேதுமில்லை. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முகநூல்களை உருவாக்குவதை கட்டுப்படுத்தினால் தான் போலிகள் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்படலாம்.

மேலும் முகநூலில் அவதானிக்கப்படும் சில தவறுகளாக பின்வருவன இனங்காணப்பட்டுள்ளன. அவற்றைத் தவிர்க்குமாறு வலைப்பின்னல் துறைவல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


தவறு 1 -சுலபமான ஓர் கடவுச்சீட்டைப் பயன்படுத்தல் (Using a Weak Password)
----------------------------------------------------------------------------
பெயர்கள், சுலபமான வார்த்தைகள், பிறந்த திகதி ,இலக்கங்கள் என்பவற்றைக் கடவுச்சொற்களாகப் பயன்படுத்தும் போது அவற்றை விஷமிகள் இலகுவில் திருடி, நம் பெயரில் அநாவசியமான முறைகேடான பக்கங்களை உருவாக்கி உலாவ விடுவார்கள். இவர்கள் இறைவனுக்கே அஞ்சாத மிருகங்கள். மனிதர்களை மதிக்கவோ , மனிதாபிமானத்தை வெளிப்படுத்தவோ மாட்டார்கள். இவர்கள் நமது அழகிய முகநூல் பக்கங்களுக்குள் உலாவுவதை தடுக்க முறையான பாதுகாப்பு வேலியை திருடப்படாத கடவுச்சீட்டுக்கள் மூலம் உருவாக்குதல் வேண்டும். நமது கடவுச்சீட்டுக்களில் பெரிய மற்றும் சிறிய எழுத்துக்கள், எண்கள் என்பவற்றையும் ஒருமித்த நிலையில் கலவையாக்கியிடல் வேண்டும்.

தவறு 2 - நமது பிறந்த திகதியை முழுமையாக வெளிவிடுதல்
-------------------------------------------------------------------------------
(Leaving Our Full Birth Date in Our Profile)

ஏனெனில் இத் தகவல்களைக் கொண்டு வங்கிக் கணக்குகளைக் கூடத் திருடத் தயாராகவே இருப்பார்கள் இம் முகநூல்த் திருடர்கள்........

தவறு 3 - சுய பாதுகாப்பு வாய்ப்புக்களை அலட்சியப்படுத்துதல்
(Overlooking Useful Privacy Controls)
-------------------------------------------------------------------------------
நமது தொடர்புகளை எப்போதும் நண்பர்கள் மட்டும் எனும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். இதில் சொந்த, குடும்ப, தொழில் விபரங்கள், தொலைபேசி இலக்கம், முகவரி என்பன காட்சிப்படுத்துவது தவிர்க்கப்படல் வேண்டும்.

தவறு 4 :-நமது உறவினர், குழந்தைகளின் பெயரை அடிக்கடி பயன்படுத்துதல்
--------------------------------------------------------------------------------

தவறு 5 :-நமது நிகழ்கால செயல்களைப் பற்றிக் குறிப்பிடுதல்.
--------------------------------------------------------------------------------
உதாரணமாக நான் வெளியூருக்குச் செல்கின்றேன். இந்த திகதியில் வீட்டுக்கு திரும்புகின்றேன் போன்ற தகவல்கள் இடப்படுவதைத் தவிர்த்தல்.

தவறு 6 : கூகுள் போன்ற தேடு இயந்திரங்களின் பார்வையில் நம் பெயர்கள் சேரச் செய்தல்..
---------------------------------------------------------------------------------
இதனால் அறிமுகமில்லாதவர்களுக்கும் நமது பெயர் விபரங்கள் சென்றடையக் கூடிய வாய்ப்புண்டாகும். எனவே பேஸ்புக்கின் சுய பாதுகாப்பு பகுதிக்குள் இருக்கும் தேடுதல் பகுதியில் (Search section of Facebook's Privacy controls)
நண்பர்கள் மட்டும் என்பதை மட்டும் தேர்ந்தெடுத்தல்.

தவறு 7 : _ மேற்பார்வையில்லாமல் சிறுபிள்ளைகள் முகநூல் பயன்படுத்த அனுமதித்தல்.
----------------------------------------------------------------------------------

மேலே கூறப்பட்ட விடயங்கள்  தவறுகளாகக் அனுபவசாலிகளால் குறிப்பிடப்பட்டாலும் கூட அவை பாதிப்பன பெண்களைத் தான். ஏனெனில் ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி உல்லாசமாய், உற்சாகமாய் உலாவும் கலைக்கூடம், இலக்கிய இல்லம், விளையாட்டுத்தளம், அரட்டை அரங்கம் என எல்லாப்  பரிமாணங்களும் இந்த முகநூலில்தான் சங்கமிக்கின்றன. ஆண்கள் எதிரிகளின் விமர்சனங்களால் பாதிக்கப்படும் போது அவர்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றார்கள். ஆனால் பெண்கள் பாதிக்கப்படும் போது அவர்கள் குடும்பம், சமூகம் அனைத்துமே சகதிக்குள் அமிழ்கின்றன.

முகநூல் எனும் தொலைநூலில் நல்ல விடயங்களை மட்டுமே நாம் வாசிக்க முயற்சிக்கும் போது நம்மைச் சூழவெழும் இந்த இடர்பாடுகளைத் தவிர்ப்பது நமது கட்டாயக் கடமையாகும். நாம் இங்கு சஞ்சரிக்கப்போகும் சொற்ப நேரத்திற்குள் நமக்கிடையே மன அழுத்தங்களையும், துன்பங்களையும் இம் முகநூல் தருமாயின் , நாம் இதனை விட்டு நகர்ந்து விடுவது நலம் பயக்கும். எனினும் இயன்றவரை நம்மைச் சூழ வீசப்படும் மனஅழுத்தக் காரணிகளைத் கண்டறிந்து, அவற்றைக் களைபிடுங்க பழக்கப்படுவோமாயின் நம் இயல்பான நடமாட்டம் நமக்குமிங்கே வசந்தத்துடன் கைகுலுக்கும்.

தவறுகளைத் திருத்துவோம்.......அது நம் நிம்மதிக்கான அறைகூவல் !No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை