என்னடா செய்தாய்
என் வெட்கத்தில் பாதி பிடுங்கி
நடுநிசியை கதறச் செய்யும்.............
அன்பான இராட்சகா!

ஈரமுலர்த்தும் மேனிக்குள்
உன் வெம்மை உதறி...........
உருகும் விழிப் பார்வையில்
என்னுசிரை உரசி..................!

என் மடித் தலையணையில் - உன்
தலை சாய்த்து
உன்னை வருடும் என் விரல்களில்
காதல் சேர்க்கும் அன்பிங்கே
உனக்காய் காத்திருக்க..........

அனலாய் கண்ணீருக்குள் அடைகாக்க..........
நீயோ....................
இரும்புச் சிறைக்குள் விலங்கிட்ட
கைதியாய்!

மச்சான் ....
போய் வாரேன்..........!

குஷியாய் கூவிச் சென்ற நீ
பூட்ஸ் கால்களுதைக்க ............
தரைக்குள் சுருண்டு கிடக்கின்றாய்
குற்றுயிராய் சிறைவெளிக்குள்ளே!

உன்னிலை யறியாது..........
ஊர் முன்றலில் உனைக் குற்றவாளியாய்
அறிவிப்புச் செய்தே...........
புலம்பித் திரிந்தேனடா - உன்
கை விலங்கோசை கேளாது!

ஓரிரவுக்குள்..........
ஓராயிரச் துன்பச் சிலுவைகள்
உன் மீது இறங்கியிருக்க..........!

நானோ குருதி பிழிந்து
குற்றுயிராய் வீழ்ந்து கிடக்கின்றேன் - எனைத்
துரத்தி வரும் உன் மௌனம் கண்டு!

என்னடா.............செய்தாய் !
உனக்கும்............
எனக்கும்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை