2013/04/10
ஞாபக வேலி
கொல்லைப்புற வேலியோரம்
தலை சிதைந்து நிற்கும் பனை போல்
மனசேனோ
இன்னும் இற்றுத்தான் கிடக்கின்றது!
சுபுஹூ.!
சுகமான மன சிலிர்ப்புக்களுடன்
சுகம் விசாரித்துச் செல்லும் அதானோசைகளுடன்!
பனி உதிரும் விடியல் வெளியில்
இனிமையாய் விழுந்தெறிக்கும் திருவெம்பாவையுடன்!
குவியலாய் மலைத்திருக்கும் மலைமேட்டில்
குஷியாய் தொலைந்திருந்த குழவிப் பருவத்துடன்!
மண்சோறு ஆக்கி சாதம் வடித்து
பரிமாறி களித்த பிள்ளை உள்ளத்துடன்
இன்னும் எத்தனையோ.......எத்தனையோ
நினைவுகளின் அரண்கள் மனவறையில்!
அழகான கனவுகளை அறுத்தெறிந்த - அந்த
கணப்பொழுதுகள்
பாழாய் போன மனசினில் - இன்னும்
அடம்பிடித்துத்தான் கிடக்கின்றது!
ஆட்லெறிகள் காவு கொண்ட றோட்டோரம்
ரோஷம் தொலைத்து எமக்காய் காத்து நின்று
பதுக்கி வைத்த காலடித் தடங்கள்- இன்னும்
செதுக்கித்தான் வைக்கப்பட்டுள்ளன இரத்தக் கறைகளில்!
போர் பார்த்த எம் தேசம் - எம்மை
போக்கிடமின்றி அலைக்கழித்ததால்
நாமோ!
மயானம் தேடும் பிரதிநிதிகளாய்
கானகம் தேடுகின்றோம் அவலத்துடன்!
- Jancy Caffoor-
09.04.2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!