கற்பும் களவும் இன்பத்தை உரச/
சொற் சுவையினில் களித்திடும் கலித்துறையும்/
கொற்றவனாம் வள்ளல் அசதியினைத் தாங்கியே/
நற்றமிழில் தந்ததே செவியும் இனித்திட/
அமுதம் பிசைந்து கவியூற்றிய ஓளவையின்/
அசதிக் கோவையை சுவைக்கையில் மனமினிக்குமே/
அற்புதக் கவி வார்ப்பின் நயத்தினில்/
அகமும் பருகுமே தமிழ்க்கவியின் புலமையை/
பொன்னுக்கும் புகழுக்கும் இசைகின்ற காலத்தில்/
எண்ணத்தில் சிறந்த வள்ளல் கோமானும்/
தன் கையால் கூழினைக் கொடுத்தே/
நீக்கினானே ஓளவையின் அசதியையும் அன்பாலே/
அசதியை நீக்கியவனுக்காக அசதிக் கோவையை/
ஆக்கினாரே ஒளவையும் நற்றமிழில் கவியாற்றி/
இரண்டு பாடல்ச் சுவைகளின் இதத்தில்/
இதயமும் நனைகின்றதே பரவசமாய்ப் படர்ந்தே/
முற்றா முகில்மலையெனும் சிற்றிளம் பெண்/
பற்றினாள் உறவாய் பாச மகளுமானாள்/
கொற்றவன் மலைக்கும் சென்றாள் பொழுதொன்றில்/
சீற்றமோ வெம்மைக்கும் பாலைக்குள் அனலே/
கொட்டிய வெம்மையைத் தாங்குமோ கால்களும்
கொடுமைதானே வெயில் வலியும் அவளுக்கே/
முத்தமிழ் வித்தகர் பிரிவின் வலிதனில்/
முடங்கிடுமோ உள்ளமும் அடங்காத் துயரில்/
கல்லாதோர் வனப்பிழப்பார் சூழ்ந்தோரும் துயருருவார்/
பொல்லாத உலகின் அடையாளமோ பணமும்/
அல்லலுக்குள் சுற்றுமே இளமை மனமும்/
எல்லாத் துன்பத்தின் திரட்சிக்குள் வீழ்வாளோ/
மகளும் என்றே கலக்கத்தில் தாயவளும்/
அசதி மன்னன் ஆளும் மலையின்/
அழகுக் காதலும் இசைகின்றதே வனப்பில்/
கயல்விழிப் பார்வைத் துடிப்போடு இசைந்த/
காதலன் பார்வைக்குள் காண்பவை அவளே/
காடும் மலையும் பாறைகளும் மரங்களும்/
காதலால் கசிந்தே நினைவுக்குள் வார்க்கின்றதே/
காரிகை எழிலும் காதலன் துடிப்பும்/
கவித்துவத்தில் எழுகின்றதே வனப்பான காவியமாக/
ஜன்ஸி கபூர் - 1.10.2020
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!