About Me

2020/10/02

நிலாமுற்றக் கவிதைகள்

வாய்மையே வெல்லும்

வாய்மை கொண்டார் வெல்வார் வாழ்வில்/

பொய்மை களைந்தே ஒழுக்கம் அணிவார்/

மெய்ம்மை யுரைக்கும் நாவின் அறமே/

போக்குமே வார்த்தைக் கறையை நம்மில்/

வள்ளுவன் கண்ட நல்லறத் தவத்தில்/

உள்ளத்தை இணைத்தே பெற்றிடலாம் தூய்மையே/

 இன்புறும் பண்பாடு
இன்முகம் காட்டியே இனித்திடும் அன்பில்/
இணையுமே இதயங்கள் நட்பின் புன்னகையில்/
இல்லத்தின் விருந்தோம்பலும் மகிழ்விக்கும் அறுசுவையில்/ 
இன்புறுமே பண்பாடும் உயரிய வாழ்வினில்/  

 
 மானுட சொந்தங்கள்
மாற்றுத் திறனாளிகள் மானுட சொந்தங்களே/
உரிமைதனை வழங்கி உயிர்ப்பிப்போம் வாழ்வுதனை/
வேற்றுமை காட்டாது நெருங்கிடுவோம் அன்பில்/
மறுவாழ்வும் வழங்கி ஏற்றிடுவோம் சமூகத்தினில்/
 கனவாகும் வாழ்க்கை 
கனவுகள் மெய்ப்பட உழைக்கும் வாழ்க்கையில்/
வதைக்குதே நோயும் கலையுதே ஆசைகள்/
வருந்தும் உடலை வேதனைகள் அரித்திட/
துடிக்குதே உணர்வுகளும் தவிக்குதே மனமும்/
நலன்களும் பறந்தோட மரணமும் அருகாக/
ஆரோக்கிய வாழ்வும் இங்கே கனவுதானோ/

  குடும்பம்
கூட்டுக் குடும்பமே/
குவலயத்தில் சிறக்கும்/
பிரிந்து வாழ்கையில்/
வலியதே மிஞ்சும்/
 
 அன்பு வாழ்வினில் 
ஆயுதம் ஏந்தா அன்பு வாழ்வினில்/
பாயுமே இன்பமும் பரவசம் மனதுக்கே/
ஓயுமே சண்டைகள் ஒழியுமே பாதகங்கள்/
சாயுமே வேற்றுமைகள் சக்திமிகுப் புரிந்துணர்வால்/
  
 கனவுகள் தளிர்க்கும்
உதிர்ந்தது அக்னிச் சிறகும் காலனிடம்/
உணர்வுகளின் கதறல்களைச் சேமித்தே பறந்ததே/
உலகிற்கே தேசத்தைப் பறைசாற்றிய நாயகன்/
விதைக்கப்பட்டாரே கண்ணீர்த்துளிகளால் வளர்ந்தாரே வரலாற்றிலும்/  
விரும்பியே ஏற்றிடுவார் இளையோரும் நன்மொழிகளை/
விட்டுச் சென்ற கனவுகளும் தளிர்க்கும்/                             

 கல்வி 
கல்வி கற்றவர்/
உலகில் சுற்றுவார்/
கல்லாதோர் சுருங்குவார்/
தனக்குள் வாழ்வார்/
 
 புது வாழ்க்கை
மறுமலர்ச்சி தந்திடுமே அறிவுப் புரட்சி/
மாற்றங்களையும் காட்டிடுமே பண்பாடும் மலர்ந்தே/
புதுமைகள் படைத்து வளர்ச்சி காணவே/
புத்துணர்ச்சியும் கிடைக்கும் புது வாழ்வினிலே/
 மழலை
புதுவரவு பூத்தது குடும்பத்தில் மழலையென/
புதுஉறவினில் நனைந்தோம் புன்னகையும் உதிர்த்தே/
புது மாற்றங்கள் தவழுமே குடும்பத்திலும்/
புத்துணர்ச்சியும் கொண்டதே உணர்வுகளும் மகிழ்ந்தே/ 

20. இனிக்கும் வாழ்வு
பூமகள் தவழ்ந்தாள் மடியினில் மழலையாகி/
புன்னகைத் தூறலால் வலியும் கரைத்தாள்/
பிஞ்சுக் கரத்தால் கொஞ்சியே நெஞ்சுக்குள்/
பிள்ளை யிவளும் அன்பூற்றுகின்றாள் அழகாய்/
இணைந்தாள் உறவாகி உணர்வும் இனித்திட/
இன்னொரு தாயாகி வாழ்வுக்குள் வந்தாள்/
 தவிப்பு-
தவம் இருந்தே பெற்ற மக்கள்/
தனித்தே விட்டாரே தள்ளாடும் வயதில்/
தவிக்கின்றேன் துணையின்றி தரணிக்கும் சுமையாகி/
தங்கும் நிழலிந்த வயோதிப மடம்தானே/

ஜன்ஸி கபூர் - 29.10.2020

















No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!