About Me

2020/10/03

கவிதைச்சாரல் கவிதைகள்

  திறமையே   திறவுகோல்

போராடும் வாழ்விற்குள் வலிமையே அழகே

வேரோடும் தன்னம்பிக்கையால் வெற்றியும் அருகே

அறிவின் ஆட்சிக்குள் திறனையும் ஊற்றுகையில்

அகிலமும் புரட்டுமே சாதனையின் பக்கங்களை


உறுதி நெஞ்சினில் முயற்சியின் பலத்தில்

உயர்ந்த வானையும் உருக்கிடலாம் அறிவியலில்

திறம்பட செயலாற்ற பயிற்சியே தளமாகும்

திறமையே திறவுகோலாம்;; ஆளுமையை வளர்ப்பதற்கே



 
 ஏக்கம்
 
ஏக்கத்தில் பூத்தன காதலர் விழிகள்/
விழிகளின் மொழியில் கலந்தன உயிர்கள்/

உயிர்களும் பிணைந்தே மகிழ்ந்தன ஓருயிரில்/
ஓருயிரும் எழிலானதே அன்பின் புன்னகையில்/

புன்னகையில் கசிந்த இதழ்களும் மயங்கின/
மயக்கத்தில் வீழ்ந்தன காதல் நெஞ்சங்கள்/

நெஞ்சின் அலைவினில் நெருடின உணர்வுகள்/
உணர்வின் சங்கமத்தில் பூத்ததே சுகமே/

சுகத்தின் வருடலில் செழித்ததே மோகம்/
மோகத்தின் வாசமும் பரவியதே ஏக்கத்தில்/

 


 அன்பின் மடியினில்
 
மானுடம் பூத்த விழிகளின் நேசத்தில்/
மயங்குமே வலிமையும் சுருங்குமே சீற்றமும்/

புரிந்துணர்வின் ஓசைக்குள் பறந்தோடும் முரண்பாடும்/
பரிவின் அணைப்பில் அடங்கிடுமே சிங்கமும்/

வெஞ்சினமும் கரைந்திடும் தாய்மையின் இதத்தினில்/
வெறித்தனமும் முறிந்திடும் வெள்ளைச் சிரிப்பினில்/

உலக உருண்டையின் அச்சாணி அன்பே/
உணர்வின் மொழியினை உளமும் புரிந்திடும்/

கருத்தினில் உயர்விருந்தால் மதித்திடும் உயிர்களே/
மிருகத்தின் ஐந்தறிவும் தலைவணங்கும் பாசத்திற்கே/

ஜன்ஸி கபூர் - 11.10.2020


 காலம் காத்திருக்காது
இயந்திர வாழ்வினில் இல்லையே நேரங்கள்/
இழக்கின்றோம் நன்மைதனை  ஒத்திசையாத் தாமதத்தால்/

பொன்னான நேரத்தினுள் பொக்கிசமே நொடிகளும்/
கண்ணான காரியத்தினை கருத்தோடு செய்திடுவோம்/

காலம் காத்திருக்காது  சுழல்கின்றதே ஞாலத்தில்/
கடந்தவை மீளாது இழப்பினில் எதிர்காலம்/

உதிர்கின்ற நொடிக்குள் நன்மைதனைப் பற்றிட/
உழைத்திடல் வேண்டும் உரிய காலத்தினுள்/ 


  மூங்கில்
குழலுக்குள் அலைகின்ற காற்றை/
துளைகளில் நசிக்கின்றதோ விரல்களும்/
அதிர்வின் புன்னகையை/
ரசிக்கின்றதே மூங்கிலும் இசையாக்கி/

















7. துணிவு
 
தளரா முயற்சியினால்// 
தடைகளை உடைக்கின்றேன்//
வெற்றி இலக்கை நோக்கி//
முன்னேறுகின்றேன் நானும்//


 இலக்கின் பயணம்
 
வறுமையும் தடைதானோ 
     கற்றலைத் தொடர்ந்திடவே/
சிறுமையும் சிதைந்திடுமே
     பெற்றிடும் அறிவினால்/

கனவுகள் மெய்ப்பட 
     கல்விதானே தீர்வாகும்/
கற்றோருக்குச் சென்றவிடம் 
     சிறப்புத்தானே யென்றும்/

இரவினைக் கிழித்திடும் 
     விளக்கின் ஒளியிலே/
இழந்திடாதே சிந்தையும் 
     பகுத்தறிவின் ஆழத்தை/

மங்கிய ஒளியிலும் 
     பிரகாசிக்குமே வருங்காலம்/
மங்கையவள் பெற்றிடும் 
     கல்விக்குள் சமூகமே/

மாண்பான முயற்சிக்குள் 
     இலக்கினை எய்தவே/
பயணிக்கும் வெற்றிக்கான 
     தளமே இது/

ஜன்ஸி கபூர் - 16.10.2020


 வலிகள் மறந்த காலம்
 
வறுமையும் கண்டிராத வனப்பான காலமது/
அரும்புகின்ற குறும்புகள் நிறைத்திடுமே இன்பங்களை/

சிறகடிக்கின்ற ஆசைகளைப் பிடித்திடவே துடிக்கின்ற/
சில்வண்டுகளாய் முத்திரையிடும் குதூகலத்தின் சிலிர்ப்புகள்/

கவலைகளைக் கண்டிராத இளமையின் தித்திப்பில்/
கரமதும் இணைந்திடும் களிப்புறும் நட்பினிலே/

பேதங்கள் கலைந்து வாதங்கள் மறந்து/
பேரூற்றாம் ஆனந்தத்தில் தம்மையும் பதித்தே/

அன்பையும் பகிர்ந்துண்ணும் கொஞ்சிடும் நினைவுகள்/
என்றுமே வலிகள் மறந்த காலமே/


 

 முகமூடிகள்
 
அகம் மறைத்தே முகமதில் முகமூடிகள்/
முகமூடிகள் மறைக்குமே பொங்கிடும் உணர்வுகளை/

உணர்வுகள் தானே ஆளுமிந்த வாழ்வினை/
வாழ்வும் சிறக்கவே வாழ்ந்திடல் வேண்டுமே/

வேண்டுமே நல்லெண்ணம் வென்றிடலாம் மனங்களை/
மனங்களின் அன்பே நீக்குமே வலிதனை/

வலிதனைக் களைந்திடவே விரட்டிடுவோம் இடரினை/
இடரும் வேரூன்றத் தயங்குமே வெற்றிகள்/

வெற்றிகளைச் சூடிடவே பயணிப்போம் நல்வழியில்/
நல்வழிப் பயணத்தில் ஏற்கின்றோம் வேடங்களை/


  கரம் கொடுப்போம்
 
வறுமை தொலைத்ததே 
     வனப்பான வாழ்வை/
வாழ்விடம் நிழலாக 
     வடிவமானதே தெருவோரம்/

வயிற்றுப் பசி 
     வருத்தும் அவலத்தில்/
வழியும் மாறியது 
     வழிப்போக்கரிடம் கையேந்த'

வெயிலும் மழையும் 
     வெறுத்திடாத் தேகம்/
வெட்டவெளியும் சூளும் 
     வெப்பக் குடைக்குள்/

வெறுத்திடுவாரோ தெருப்பூக்களை 
     வேகின்றதே உணர்வுகளும்/
வெள்ளை மனங்களைத் 
     தாலாட்டுதே அனலும்/

உறவுகள் தொலைவானதில் 
     உதவிகள் மறைவானதே/
உயிர்வாழும் அன்றில்கள் 
     உருக்குலைகின்றன சிந்தையினில்/

உருவம் பார்க்காத 
     உள்ளத்தின் அன்பினாலே/
உயிரைக் காத்திட 
     உருகி நிற்கின்றனர்/

பச்சிளம் பிஞ்சுகளின் 
     பாதையோரக் கதறல்கள்/
படருதே நெஞ்சினில் 
     வலியதைத் தடவுதே/

பரிவும் நேசமும் 
     பாசமும் கொண்டே/
பாதையைக் காட்டிட 
     கரம் கொடுப்போம்/
 

ஜன்ஸி கபூர் 
 

 



 






No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!