விழி யின்பம் நுகர்ந்திடும் காதல்
விழுகின்றதே இதயத் துடிப்புக்களில் ஒலியாகி
தழுவுகின்ற பெண்மையின் தித்திப்பின் அதிர்வுகள்
எழுகின்றதே இன்னிசையாக ஏக்கத்தைப் பிழிந்து
கனவின் உயிர்ப்பும் கருவுறும் மண்ணிலே
கனிந்த தேனும் வார்த்திடும் பெண்ணவளாய்
கண்கள் உரசும் மின்னல் பார்வைக்குள்
கன்னமும் பிழியுமே மாதுளைச் சாற்றினை
வெண் மல்லிகை படர்கின்ற உதட்டிலே
கொஞ்சுமே சங்கத் தமிழும் உறவாகி
பஞ்சில் செதுக்கிய மென் மேனியில்
கொஞ்சுகின்றதே சந்தனமும் வாசத்தைத் தடவி
அன்பும் மொய்க்கின்ற மென்னிதய அலைவை
அரவணைக்கின்ற சிற்றிடை நிலாவின் கீற்றோ
அகிலத்தின் ஒளி யவள் நிழலினை
அணைக்காதவன் இழக்கின்றான் இன்பத்தின்; சுவைதனை
உணர்வினை உரசிப் பூக்கின்ற பெண்மைக்குள்
உறவினைத் தேடாதவன் ஒளியிழக்கின்றான் வாழ்வில்
வளைந்த புருவத்தில் வாசமூட்டும் தென்றலினை
உணராதவன் உயிர்ப்பும் இழக்கின்றான் தன்னிலே
அமுதச் சுவையின் சுகத்தில் சுவாசத்தை
அழகுற ஏந்தி மென்னிதழ்களை ரசிக்காதவன்
துறவெனும் மாயைக்குள் நனைகின்றான் தனிமையில்
அழகில் துளிர்க்கின்ற பெண் பேரின்பமே
ஜன்ஸி கபூர் - 27..09.20
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!