விழிகளின் ஈர்ப்பால் கலந்த காதல்/
தழுவுகின்றதே நெஞ்சில் ஏக்கமும் சுமந்தே/
மெல்லிடை தழுவும் சேலை முடிச்சுள்/
ஒழிந்த வாலிபமும் குறும்பாச் சிரிக்குதே/
உன் கொலுசின் சத்தத்தில் உயிர்க்கும் /
பாதச் சுவடுகளும் பரவுதே உன்னோடு/
ஆசைகள் முடிந்த அத்தான் மனதுள்/
ஏக்கத்தின் ஓசைகள் வெடிக்குதே இமயமாக/
காமம் கிள்ளும் நறுமணக் கனாக்களில்/
உன் வாசம் உணர்வுள் மலருதே/
தேகம் சிலிர்க்க செந்நிற உதட்டின்/
மோக முத்தம் கற்பனைக்குள் உறையுதே/
கன்னக் கதுப்பில் செதுக்கிய வெட்கம்/
பக்கம் வருகையில் திரைக்குள் மறையுதே/
வானவில்லும் மையங் கொள்ளும் உன்னை/
வசந்தமும் மெல்லத் தொட்டுச் செல்லுதே/
உந்தன் புன்னகைச் சாரலில் நனைகையில்/
மெல்ல அழியுதே எந்தன் தனிமையும்/
வாழ்வின் முகவுரையாக உன்னை எழுதுகையில்/
உதிர்கின்றன சோகங்களும் உலகின் காலடியில்/
உள்ளத்தின் நினைவாக நீயும் நிரம்புகையில்/
மெல்லக் கரைகின்றதே சூழ்ந்திடும் தனிமை/
உறக்கத்திலும் உறங்காத உன்னோடு பயணிக்கையில்/
உன் ஞாபகமே மொழியாகிப் போகின்றதே/
ஜன்ஸி கபூர் - 01.05.2021
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!