கண்ணீர்ச்சிலை

ஓ...................!
வாழ்க்கைத் தேசம்.........!!
அழகான வாழ்க்கைத் தேசம் ..!!!
தோற்றுப் போனதில்
கண்ணீர்வார்ப்புக்கள்
தாரை தாரையாய்
தரையை ஆக்கிரமிக்கும்!

கனவுகளின்
தழும்புகளில் விசிறப்பட்ட
ஏக்கங்கள்.............
முத்திரையாய்
முகங் காட்டும்!

இருட்டடிப்புச் செய்யப்பட்ட
சந்தோஷங்களைத் தேடி தேடி
அனல்வெளியில்.......
யாகங்கள் தொடரும்!

முட்வேலிக்குள்...........
நாட்டப்பட்ட இதயமோ
மண்டியிட்டுக் காத்துக் கிடக்கும்
மரணத்தின் சைகைக்காய் !

விழியோர நீரினால்.......
விம்பம் காட்டும் கண்ணாடி கூட
ஈரமாகும்
இரசத்தையும் விரட்டி மிரட்டி!

ஒவ்வொரு நொடிகளும்
ஒவ்வொரு யுகங்களாய்
மிரளுகையில்.............
வாலிபமும்
தாலியறுந்து போகும்!

விதியின் நகர்வலத்தில்
நசுங்கும்.........
சுதந்திர இறக்கைகள் - தன்
உயிர்ப்பை மறந்து
வெந்து போகும்!

அண்டம் விறைக்கும்
உஷ்ணம் வார்த்தைகளாகி
மனதை உருக்கும்...........
சோகங்களின் அட்டகாசத்தில்
சகாராக்களும்
சகபாடிகளாகும்!

விடிவின் தொடுகைக்காய்
காத்திருக்கும்
காத்திருப்புக்கள் மட்டும்..........
நீளமாகும் - என்
நிதர்சன வெளியில்!No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை