About Me

2012/07/30

அன்னை


உதிரத்தில் கரு தந்து
உணர்வினில் மருதாணி வாசம் பூசி
விழிகளில் எனை முடிச்சிடும்
முக்காடிட்ட வெண்ணிலா!

சந்தனக் காகிதத்தில்
நிதமென் பெயரெழுதி
உச்சரித்து...............
மடியணைக்கும் உயிரோவியம்
என் தாயவர் !

வேதனையில்...............
என்னிதயம் வழுக்குகையில் - தன்
நெஞ்சக்கூட்டில் நேயம் நிரப்பி
தஞ்சமாய் என்னுள் உறைந்திடும்
தங்கத் தாயவர்!

என் உள்ளத் தொட்டிலில்
உவகைப் பண்ணிசைத்து..........
புன்னகைப் பூக்களால்
என்னுள் வசந்தம் நிரப்பி
வாழ்வை நகர்த்திடும்
வசந்தத் தேரவர்!

தன்னாத்மாவில் நிதம்
எனை நிறைத்து...........
அணு தினமும் என் கனவில்
கலந்து.................
காலத் தேய்விலும் பொலிவிழக்கா
பொற்சுடரவர்!

நோய் படுக்கையிலென்
தேகம் குளிர்கையில்................
வலி பொறுக்கியெடுக்க........
வழி தேடும்
மாணிக்கச் சுடர்
மாதா என்னன்னை!

தீ நாக்கின்
மேனி தொடுகையில்,,,,,,,,,,,,,
தன் முந்தானைத் திரையாலே
வெம்மை விரட்டிடும்
குளிர் நிலவவர்!

ஆணாதிக்கக் கரங்களால்.........
பெண்ணவள் எரிகையில்..........
தன் மூச்சில் அமிலம் நிரப்பி
துடித்திடும்
மென் தாயவர்!

அவர்...........
என்னன்புத் தேடலில்
நான் கண்டெடுத்த உயிர்ச்சுவடு!
என்............
ஞாபகத் தெருக்களின்
நீண்ட தூண்!

அன்னையின் அருகாமை
கற்றுத் தந்த நேயங்கள் யாவும்...........
பத்திரப்படுத்தப்பட்டுள்ளன - என்
உறவுச் சேமிப்பகங்களில்!

தன்னிழற் பரப்பில்
என் சிறகு பொருத்தி..........
தன் விழிக்குள்
என் பார்வை பொருத்தும்............
அன்னையின் அன்புக்கு
அணையுண்டோ - இக்
கிரகமதில்!

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!