உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்ஏப்ரல் 23
-------------
புத்தக வாசிப்பினை ஊக்குவித்தல், புதிய புத்தகங்கள் வெளியிடுதல், புத்தக பதிப்புரிமையை அதிகரித்தல் போன்ற கருப்பொருட்களுடன் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 23ந் திகதி இத் தினம் கொண்டாடப்படுகின்றது. ஐரோப்பியாவில் வாழ்ந்த சிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையுமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும், இறந்ததும் இந்த நாளிலேயே என்பதால் இத் தெரிவு இடம்பெற்றது . 1995 ம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அறிவித்தலின் பிரகாரம்  இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு இத்தினத்தில் இலக்கியவாதிகள் கௌரவிக்கப்படுகின்றனர். இத்தினத்தில் பரவலகாக புத்தகக் கண்காட்சி, புதிய நூல்வெளியீடு, இவை தொடர்பான கூட்டங்கள் நடத்தப்படல், நூலாசிரியர் கௌரவிப்பு போன்ற பலவும் நடைபெறுவது சிறப்பம்சமாகும்..

அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, மக்கள் வாழ்விடங்களில் நூலக உரிமை, உலகில் நாம் பெறக்கூடிய அனைத்து அறிவுச்செல்வங்களையும் தத்தம் தாய்மொழியில் பெறுதல், தத்தமது தாய்மொழியில் இலக்கியச் செல்வங்களைப் பாதுகாப்பதன் பொருட்டு ஆவணப்படுத்தல், புத்தகம்,வாசகர்,எழுத்தாளர்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தல் உள்ளிட்ட 10 கட்டளைகளை நிறைவேற்றுவதன் மூலம் உலகளாவிய ரீதியில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

"வாசிப்பானது மனிதனைப் பூரணப்படுத்துகின்றது" என்பதை நாமறிந்தும் கூட, இந்த இயந்திரமயமான வாழ்க்கைமுறையில் அந்த எண்ணம் நம்மிலிருந்து காணாமல் போய்விடுகின்றது. இளைய தலைமுறையினர் இ-புக், இ- ரீடர் ,தொலைக்காட்சி போன்ற நவீனத்தின்பால் தமது கவனத்தைச் செலுத்தி வருவதால் புத்தகங்களின் வாசிப்புப்பழக்கமும் அருகி வருகின்றது.

தேடலானது புதிய கருத்துக்களை நமக்குள் உட்செலுத்தும் மார்க்கமாகும். தேடலுக்கான பயிற்சி வாசிப்பு மூலம் கிடைக்கின்றது. மனிதர்களின் விழுமியம், பண்பாடு, கலாசாரம், வாழ்க்கைநெறிமுறைகள், பழக்கவழக்கங்கள் என்பவற்றை புத்தகங்கள் வாயிலாக  நாமறிந்து கொள்ளலாம்.

வாசிப்பின் முக்கியத்துவத்தை பாடசாலை மாணவர்களுக்குணர்த்தும் வகையில் பாடசாலைக் கலைத்திட்டத்திலும் ,நூலகப் பாடவேளைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாடசாலை நூலகங்களும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

தற்போது எமக்குக் கிடைக்கும் ஒய்வுநேரம் குறைவாகவே உள்ளது. இந்நேரத்தை நாம் பயன்படுத்த வேண்டும். நம் சிந்தனையை ஆரோக்கியப்படுத்தும் நல்ல நூல்களைத் தேடி வாசிக்க வேண்டும். நிறைய வாசிக்கும் போது சொற்பிழைகள் ஏற்படாது, அத்துடன் மொழிவளம் ,ஆளுமை, சிறந்த தொடர்பாடலும் நமக்குள் ஏற்படும்.

இலங்கையில் எழுத்தறிவு வீதம் 95% ஆக இருப்பதனால் இங்கு வாசிக்கும் திறனும் அதிகமாகவே காணப்படுகின்றது. புத்தகங்களை வாசிக்கும் போது பிறர் வாழ்வில் நுழையும் வீண் நுழைச்சலுக்கும் நேரம் கிடைப்பதில்லை. அதுமாத்திரமின்றி நம் மன அழுத்தமும் குறைக்கப்படுகின்றது. வாழ்க்கையிலெழும் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் ஏற்படுகின்றது.

நாம் தினமும் வீணாக்கும் பணத்தின் சிறுபகுதியிலாவது புத்தகங்களை வாங்குவதன் மூலம் நாமும் வாசித்து, பிறரையும் வாசிக்கத்தூண்டலாம். பாடசாலைகளிலும் வாசிப்புத் தொடர்பான பல்வேறு போட்டிகளை நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தலாம்.

தாய்மொழியிலான தரமான பதிப்புக்களும், அவற்றை உடனடியாக சந்தைப்படுத்தலும் இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும். எமது அறிவை வளர்த்தும், பிறருடன் பகிர்ந்தும் பூரணத்துவம் பெறுவோமாக!

"நிறைய வாசிப்போம்- நம்
வாழ்வின் குறை போக்குவோம்!
No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை