About Me

2012/07/29

இதயம் கிழிந்து


என் கனவு முகங்களைக்
கிறுக்கிய கிறுக்கனே!
உன்னால்
உருகிக் கொண்டிருக்கின்றது
என்னிதயம் அடிக்கடி!

இலையுதிர் கால சருகாய்
விதிக் காற்றில் விளையாடும்
கண்ணாமூச்சிக்காரா
நம்
ஞாபகங்களை ஈரப்படுத்துகின்றேன்
அடிக்கடியென்
கருவிழிக் கண்ணீரில்!

நீ வெறுப்புமிழ்ந்த
அந்தக் கணங்களெல்லாம்
உன் வார்த்தைத் துண்டங்களின்
நெருப்புத்தளிர்கள் - என்
மன விருட்சத்தின்
ஒளித்தொகுப்பாய்
சோகத்தைக் கற்றுக் கொள்கின்றது
இப்போது!

சந்தர்ப்பவாத சூரியனின்
சகபாடி நீயானதால்
புதைகுழிக்குள்ளமிழ்ந்த
என் வாழ்வும்
சதை கிழிந்து
கதை முடிந்து போனது!

உன் மனசென்னவோ வெள்ளைதான்
இருந்தும்
காலத்தின் கட்டாயத்தில்
கறைப் படிவுகளைச் சுமந்தே
நீயும் அந்நியமாகி - என்
அழகான அந்திப் பொழுதுகளை
அழுகைக்குள் அழுகச் செய்கின்றாய்!

உன்னிரும்புக் கரங்கள்
என் குரல்வளை வளிச்சேமிப்பை
நசுக்குவதால்
என் ஆத்மாவும்
விழி பிதுங்குகின்றது
மரண ஓலத்துடன் !

நம் இளமைப் பயணமேட்டில்
முட்களின் முகங்கள்
வழிகாட்டியாய் எட்டிப் பார்க்கின்றது
நீயோ
அறுத்தெறியத் தெம்பின்றி
அடுத்தவர்க்காய்
என் மூச்சின் வேரை
வெட்டியெறிகின்றாய்
கெட்டித்தனமாய்!

அன்றுன்
காதல் சுயம்வரத்தில்
தெரிந்தெடுத்த என்னை
இன்றோ
இயக்கம் பறிக்கும் விஷமாய்
தயக்கமின்றி
என்னுடலின் உயிரணுக்களை
பிடுங்கியெறிகின்றாய்!

யோசி!
 வாசிக்கப்படாதவுன் நேசத்தினால்
போஷிக்கப்படாத என் சந்தோஷங்கள்
இம்சிக்கப்பட்டே
இதயம் கிழிந்து ஆவியாகின்றது
அசுரத்தனமாய்!


- Jancy Caffoor-




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!