About Me

2012/07/29

உலக தாதியர் தினம்



2012.05.12
---------------
கல்வி மற்றும் வைத்திய துறைகளுடன் சம்பந்தப்பட்டோர் வெறும் ஊதியத்திற்காக மட்டும் செயற்படுவதில்லை. இவர்கள் உண்மையில் சேவை மனப்பான்மையுடன் செயலாற்றும் போதே அத்துறைசார் குறிக்கோள் வெற்றி நிலையடைகின்றது. அந்த வகையிலின்று உலக தாதியர் தினம் அல்லது செவிலியர் தினம் கொண்டாடப்படுகின்றது.

1953 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் அரச சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் என்பவர் இந்த நாளை செவிலியர் நாளாகப் பிரகடனம் செய்யும்படி விடுத்த வேண்டுகோள் உரிய காலத்தில் நிறைவேற்றப்பட்டது. 1965ம் ஆண்டிலிருந்து தாதியர் சேவையை கௌரவிக்கும் விதமாக புளோரன்ஸ் பிறந்தநாளான மே 12 ம் திகதி இந் நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் செல்வச்சிறப்புமிக்க உயர் குடியைச் சேர்ந்தவர் நைட்டிங்கேள். இத்தாலி புளோரன்ஸ் எனும் இவரது பிறப்பிடத்தின் ஞாபகமாக பெற்றோர் இவருக்குப் பெயர் சூட்டினார்கள்.

தாதித் தொழிலின் மகிமையில் ஈர்க்கப்பட்ட நைட்டிங்கேள் போரில் காயம்பட்ட வீரர்களை ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார். தாதியர்களுக்கான  பயிற்சிப்பள்ளியையும் இவரே முதன் முதலில் ஆரம்பித்தார். புளோரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844 ஆம் ஆண்டில் ஆதரவற்றோர் விடுதிகளிலும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென்ற போராட்டத்திலும் ஈடுபட்டார்.

1846 ஆம் ஜேர்மனி சென்ற இவருக்கு, அங்குள்ள கெய்சர்ஸ்வர்த் மருத்துவனைச் செயற்பாடுகள் மனங் கவர்பவையாக இருந்தது. இதனால் 1851 ல் தொடர்ச்சியாக 4 மாதங்கள் அக் குறித்த மருத்துவமனையில் தீவிரப் பயிற்சியைப் பெற்றார். அக்காலத்தில் தாதியர் சேவைக்குரிய கௌரவம் அளிக்கப்படவில்லையென்பதால் தன் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறியே அவர் தன் முழு வாழ்வையும் தாதியர் தொழிலுக்காக அர்ப்பணித்தார்.

இங்கிலாந்தில் ஆண்டுதோறும் மே 12 ஆம் நாளில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சம்பிரதாயபூர்வமாக இந்நாள் கொண்டாடப்படிகின்றது. இங்குள்ள செவிலியர் மூலமாக விளக்கு ஏற்றப்படும். இங்கு வருகை தரும் செவிலியர் மூலமாக ஏற்றப்பட்ட விளக்கு கைமாறப்பட்டு இறுதியில் அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும். இவ்வாறு செய்வதன மூலம் தாதியர் தமது அறிவைப் பரிமாறுவதாகக் கருதப்படுகிறது.

'விளக்கேந்திய சீமாட்டி', 'கைவிளக்கேந்திய காரிகை' என அனைவராலும் போற்றப்பட்ட புளோரன்ஸ் ஒரு எழுத்தாளரும், புள்ளிவிபரவியலாளருமாவார்.

1 comment:

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!