வறியவர்க்குதவுவோம்


புனித ரமழான் நமக்கு கற்றுத் தரும் பயிற்சிகள் மகத்தானவை. ஏனெனில் நோன்பானது நம் உடல், உள, ஆன்மீகத்துடன்  தொடர்புபட்ட புனித கடமையாகும்.

புனித நோன்பானது பசியின் கோரத்தை, வறுமையை , ஒட்டியுலர்ந்த வயிற்றின் அலறலை, நமக்குள் மானசீகமாக உணர்த்தி, ஏழ்மையின் இடரை செல்வந்தன் உணரச் செய்யக்கூடிய சிறந்த வழியாக உள்ளது. இது ஓர் சமத்துவத்திற்கான பாதையாகும். ஏனெனில் ஏழை , பணக்காரன் இரு சாரரும் ஒரே திசையில் பயணித்து அல்லாஹ்வுக்கு நோன்பெனும் வரியைச் செலுத்த வேண்டும்.

ஏழ்மையுடையவர்களை நினைந்து, உள்ளம் உருகி, கண்ணீர் சிந்தக்கூடிய சந்தர்ப்பத்தை நோன்பு தருகின்றது. இவர்களின் துயருணர்ந்து அவற்றை ஓரளவாவது களைய முயற்சிப்பது கூட சன்மார்க்க நெறியாகும். புனித ரமழானில் நாம் நோற்கும் நோன்பு மூலம் ஏழைகள், அனாதைகள், அகதிகள் மீது எம் கருணை வளர்க்கப்படல் வேண்டும். அக் கருணையின் உந்தலால் நாம் அவர்களுக்கு ஈகையை வழங்க வேண்டும்

" தர்மத்தில் சிறந்தது ரமழானில் வழங்கப்படும் தர்மமாகும்"

என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் நோன்பு காலங்களில் அதிக தான தர்மங்களை மேற் கொண்டார்கள்.

வறுமையானது கொடியது. வாழ்க்கைக்கே சவால் விடக்கூடியது. இதனால் சிந்தனை, பகுத்தறிவு என்பன மந்தநிலையை அடையும். ஈமானைக் கூட பறித்துவிடக்கூடிய கொடிய மிருகம். ஏனெனில் வறுமைப்படும் போது மனிதன் அறநெறிகளிலிருந்து தவறி தன் நற்பண்புகளைத் துறக்கும் மிருகநிலைக்குச் சமனாகின்றான். இதனால் பண்பற்ற செயல்களும், துர்நடத்தைகளும், முறைகேடுகளும் நடந்து வாழ்வின் பெறுமதியை இழிவுபடுத்தலாம்.பல வறுமைப்பட்ட குடும்பங்களின் கட்டமைப்புக்களும், நடத்தைச் சிறப்புக்களும் சீரழிந்துள்ளன.  எனவே இதன் பயங்கர நிலைக்குள் முஸ்லிம்கள் வீழாமல் நிலைத்திருக்க ரமழான் உதவுகின்றது.இந்த ஆபத்துக்களை நீக்க நாமும் முயல்வதன் மூலம் நல்ல ஆரோக்கியமான சமூகத்தின் இருக்கைக்கான அத்திவாரங்களையும் இடலாம்..

அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள்,

" வறுமையானது குப்ரையும் ஏற்படுத்தி விடக்கூடியது."

குப்ரிலிருந்து பாதுகாப்புத் தேடிய நபியவர்கள், அதனுடன் இணைத்து 'பக்ர்' என்ற வறுமையிலிருந்தும் பாதுகாப்பு தேடியமை அவையிரண்டுக்குமிடையிலான தொடர்பை நம் முன்வைக்கின்றது.

இஸ்லாம் அநாதைகள் மீது அதிக கரிசனை காட்டுகின்றது.ஏழைகளை ஆதரித்து வறுமையை ஒழித்துக் கட்டாதவன் தீனை உண்மைப்படுத்துவனல்லன் என்பதை திருமறையும், ஹதீஸ்களும் நவின்றுள்ளன.

தீனைப் பொய்ப்பிப்பவன் பற்றிக் கூறும் ஸூறா அல்மாஊன் பின்வருமாறு கூறுகின்றது-

"அவன்தான் அநாதைகளைக் கடிந்து விரட்டுபவன்"

" அவன் ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டவும் மாட்டான் "

உண்மையில் ஏழைக்கு தானும் உணவளித்து , பிறரையும் தூண்டி வறுமையை அழிக்கும் செயலில் ஈடுபடாதவர் இஸ்லாம் மார்க்கத்தை பொய்ப்பிப்பவராகவே கருதப்படுகின்றார். இதனை அல்-குர்ஆனும் பின்வருமாறு எடுத்துக்காட்டுகின்றது.

"நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வை விசுவாசிக்கவில்லை. ஏழைகளுக்கு ஆகாரமளிக்கவும்படி தூண்டவுமில்லை. ஆகவே இன்று அவனுக்கு இங்கு எந்த நண்பனும் இல்லை. புண்களில் வடியும் சீழைத் தவிர அவனுக்கு வேறு ஆகாரமும் இல்லை எனக் கூறப்படும் . அதனைக் குற்றவாளிகளைத் தவிர வேறு எவரும் புசிக்க மாட்டார்கள்"

தன் மீதுள்ள கடமை, பொறுப்புக்களை மாத்திரமே நிறைவேற்றி , சமூகக் கடமைகளை உதாசீனம் செய்வோரை இஸ்லாம் ஆதரிப்பதில்லை.
எமது உள்ளங்களுக்கு பக்குவத்தையும், பண்பாட்டையும் வழங்கி, சகோதரத்துவத்தைத் தூண்டக்கூடிய செயல்களில் நாம் ஈடுபடும் போதே எமது இபாதத்துக்கள் நன்மை பயப்பனவாகையாக இருக்கின்றன..

ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் ஓரங்கம். அச் சமுகம் உயிர்ப்போடு இருக்கும் போதே அவனாலும் நிம்மதியாக , மகிழ்வுடன் அச் சமுகத்தில் தன்னைப் பொறுத்தி பயனடைய முடியும்.

முஸ்லிமின் இவ்வுலக கஷ்டங்களிலிருந்து அவனை நீக்கி, அவனுக்கு உதவி செய்து நிறைவான வாழ்வுக்குள் அவனை அழைத்துச் செல்லும் கடமைப்பாடு எம்மெல்லோரின் கடமையாகும்.

எனவே ஈகையினதும், கருணையினதும் மாதமாகிய இப் புனித ரமழானில் சமூகத்தில் வாழ வழியற்றுத் தவித்துக் கொண்டிருக்கும் வறியவர்கள், அனாதைகள், எளியவர்கள் மீது மனிதாபிமானத்துடன் உதவிக்கரம் நீட்டி இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அருளை, உதவியைப் பெற்றுக் கொள்வோமாக!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை