மனசே மனசே


வீட்டு முற்றத்தில் சிதறிக்கிடந்த  இரையை உற்சாகமாகத் தேடிப் பொறுக்கித் தின்னும் சின்னச்சிட்டுக்களின் சிரிப்பொலியும் ,அவ்வொலி ஞாபகப்படுத்தும்  சலங்கையொலியும் பலமாய் என் காதுகளுக்குள் விழுந்த போது மேலும் உறங்க முடியவில்லை. தூக்கம் சிதறியோடியது. கண்களை விரித்து உறக்கத்திற்கு விடை கொடுத்தேன்.....நன்றாக விடிந்து விட்டது. கடிகார முட்கள் ஏழைத் தொட்டு நின்றன.

விடிந்து விட்ட இயற்கையின் பரபரப்புக்குள் ஒன்றித்துக் கிடக்க மனசேனோ இடம் தரவில்லை. அமைதிக்குள் அடங்கிப் போனவளாய் வெளி முற்றத்தில் என் கால்களைப் பதித்தேன்.

என் பார்வை என்னையுமறியாமல் மேல் மாடியில்  வீசப்பட்டது.  காயப் போடப்பட்டிருக்கும் வெள்ளை நிற தாதி யூனிபார்ம் கோட்டுக்களால் நிரப்பப்பட்டிருக்கும் கயிற்றுக் கொடிகள் பொலிவிழந்து வெறுமையாகிக் கிடந்தன. மனம் சங்கடப்பட அப் பார்வையை அறுத்தவளாய் ,மறு புறத்திலுள்ள மோட்டார் சைக்கிள் தரிப்பிடத்தைப் பார்க்கின்றேன்.அங்கும் வெறுமை......... மீண்டும் மனசு வெறுமைப் பிரளயத்தில்  கரைந்தோட சில நினைவுகள் எனக்குள் உட்கார்ந்து விழிகளை அரிக்கத் தொடங்கின!

" நிசங்க"

பார்க்குமிடத்திலெல்லாம் அவன் விம்பமாய் பூத்து நின்றான்.

நாங்கள் குடியிருக்கும் வீட்டின் மேல் மாடியிலுள்ள அறையொன்றில்தான் அவனும்  வாடகைக்கு எடுத்துத் தங்கிருந்தான்.அவன் ஒரு பயிலுநர் தாதி. எங்களூர் வைத்தியசாலையிலேயே நியமனம் கிடைத்திருந்தது. ஆரம்பத்தில் அவனுக்கும் எனக்கும் இடையில் வெறும் புன்னகை மட்டுமே பாஷையாக இருந்தாலும் கூட  காலப் போக்கில் எங்கள் சின்னப் பாப்பா மூலம் அவனுடன் பேசும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

"நர்ஸ் மாமா வாறார் "

இரண்டரை வயதுக்குழந்தையின் மழலை மொழி கேட்கும் போதெல்லாம் அவன் பாப்பாவுடன் கதைக்க எங்கள் வீட்டு முற்றத்திற்கே  வந்துவிடுவான். அவன் கதைக்கும் சிங்களப் பாஷை குழந்தைக்கு விளங்காவிட்டாலும் கூட அவன் காட்டும் அன்பும், அவன் சிரித்த முகம் காட்டும் அபிநயமும்  அவளுக்கு ரொம்ப பிடித்துப் போய்விட்டன.

எங்கள் வீதியில் அவன் மோட்டார் சைக்கிள் உறுமிக் கொண்டு வரும் போதெல்லாம் பிள்ளை அவனை வீட்டுக்குள்ளிருந்தே அடையாளம் கண்டவளாய் , "நர்ஸ் மாமா" என கூவிக் கொண்டு வீட்டுக்குள் மறைந்து நின்று அவன் வருகையை எதிர்பார்த்து  காத்து நிற்பாள். அவன் வீட்டுக்குள் நுழைந்ததும் வெளி முற்றத்துக்குள் வந்து அவனது மேல்மாடி அறையை அண்ணார்ந்து பார்ப்பாள்.. அவனுக்கு அவளைப் பற்றித் தெரியும் என்பதால் வீட்டுக்குள் போவதைப் போல் பாசாங்கு செய்து கதவுக்குள் மறைந்து நின்று அவள் வெளியே வந்ததும் ஓடி வந்து தூக்குவான். அவள் சிரித்துக் கொண்டே அவன் பிடியிலிருந்து விலகி வீட்டுக்குள் ஓடி வரத் துடிக்கும் போதெல்லாம், அவர்கள் இருவருக்குமிடையில் நடுவராக நின்று அவன் பிடியிலிருக்கும் அவளைச் சமாதானப்படுத்துவது  நானே என்பதால் தொடர்ந்து வந்த நாட்களில் அவன் புன்னகை என்னைக் கண்டதும் வார்த்தைகளாக மாறின. பிள்ளையின் செயலைப் பற்றி கதைப்போம். அந்த நல்ல நட்பில் அவன் என் மனதுக்குள் மெதுவாக இறங்கினான்.பாப்பாவுக்கும் அவனுக்குமிடையிலான இந்த அன்பு விளையாட்டை நான் அதிகம் ரசித்தேன். சில நேரங்களில் அவர்களின் சிரிப்பில் என் சிரிப்பும் கலந்து கிடக்கும்

நாட்களின் வேகமான பயணத்தில் அந்த நாட்களும் வந்தது. அவன் தாதிப் பயிற்சி நிறைவடைந்து தன் ஊருக்கே மாற்றலாகிப் போகும் அந்த இறுதித்  தருணங்களும் வந்தன..சின்னவளோ இந்த உண்மையை அறியாமல் வழமைபோல் அவனுடன்  ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
அவன் எங்கள் ஊரைவிட்டுப் போகும் கடைசி நிமிடங்களையும் சந்தித்து எம்மிடமிருந்து விடைபெற்றும் சென்றுவிட்டான் ....

உர்ரென்று வீதியை உரசிச் செல்லும் மோட்டார் சைக்கிளின் ஓசையொன்றின் அதிர்வைக் கேட்டு  சின்னவள் கைதட்டி உற்சாகமாகச் சிரிக்கின்றாள்

"நர்ஸ் மாமா வாறார்" "நர்ஸ் மாமா வாறார்" "நர்ஸ் மாமா வாறார்"

அவள் குரலதிர்வு எனக்குள் வேதனையைக் கிளற ,மெதுவாக குழந்தையிடம் சொல்கின்றேன்.

" நர்ஸ் மாமா , இனி வரமாட்டார் செல்லம்"

மனசின் வேதனையோடு  நான் கூறும் வார்த்தைகளை அவள் கேட்பதாக இல்லை. புரிந்து கொள்ள முடியாத அந்த வயசு, தன்னிடம் பதிவாகியுள்ள நம்பிக்கையை மட்டுமே சுமந்தவாறு மீண்டும் மீண்டும் உற்சாகமாக குரல் கொடுக்கின்றாள்.........

"நர்ஸ் மாமா வாறார்............நர்ஸ் மாமா வாறார்"

அவள் அன்பு .......வார்த்தைகளாகி காற்றோடு வேகமாக மோதி வீடெங்கும் ஒலிக்கத் தொடங்க,  நானோ   பிள்ளையின் தவிப்பைக் கண்டு கண்கலங்கி நிற்கின்றேன் சோகத்துடன் !............

இந்த அன்பின் அவஸ்தையில் தவித்துக் கிடப்பதென்னவோ மனசுதானே!

2 comments:

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை