About Me

2014/07/25

இனவாதம்



ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள். உண்மையில் இனவாதத்தைத் தூண்டும் சகலரும் தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் மட்டும் நோக்கும் மனநோயாளிகள். ஏனெனில் அவர்களிடம் மனிதம் இருப்பதில்லை.

ஒரு சிறுபான்மைச் சமூகம் தன் கலாசார, பொருளாதார, உறவுகளால் சூழப்பட்டிருக்கும் தனது பிரதேசத்தில் தனித்துவத் தன்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதனை சகிக்காத சில பெரும்பான்மை இனவாதியினர் இனவாத அடக்குமுறையை அச்சிறுபான்மையினர்மீது திணிக்கும்போது, உலகத்தில் வாழும் மனிதம் நிறைந்த ஏனைய மக்கள் எல்லோரும் கண்மூடிக் கொண்டிருப்பார்கள் என நினைக்கின்றார்கள் போல!

இன்று தகவல் தொழினுட்ப அறிவினால் உலகம் கிராமமாகச் சுருங்கி விட்டது. ஒரு தேசத்தின் சகல விடயங்களும் சமுத்திர எல்லைகள் கடந்து ஒரு நொடியில் உலகம் முழுதும் பரவி விடக் கூடிய இந்தக் கால கட்டத்தில் இனவாதிகளின்  செயல்கள் உலகமெங்கும் உடனடியாகவே வௌிச்சமிடப்பட்டு காட்டப்படுகின்றன.

1990ம் ஆண்டளவில் வடபகுதி முஸ்லிம்கள் புலிகளால் பலவந்தமாக அவர்கள் தாயகத்திலிருந்து விரட்டப்பட்டபோது, அத்தகவல்கள் உலக மக்களின் பார்வைக்கு அன்றே எத்தி வைக்கப்படவில்லை.அதனால் இன்றும் அந்த மக்கள் அகதி அவலத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள்.

ஆனால் .....

பேருவளை , அழுத்கம சம்பவங்கள்.....

அம்முஸ்லிம் மக்களின் கண்ணீர்த்துளிகளை ஈரம் காயமுன்னரே உலகின் பார்வைக்குள் பரவ விட்டதால் இனவாதிகளின் குரோதம் அம்பலப்படுத்தப்பட்டு விட்டது.. இலங்கையில் சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுகின்றனர் எனும் மனப்பதிவுகள் மீண்டும் புதுப்க்கப்பட்டு விட்டது.

அன்று  தமிழ் மக்கள்  இன வன்முறைக்கு    உட்பட்டபோது  பூகோளத்தில் வாழும் ஏனைய தமிழ்மக்களின் தமிழ்ப்பற்றும் அவர்களின் ஒற்றுமையும் ஆதரவும் இன்றுவரை இப்பிரச்சினையை சர்வதேச அரங்கிற்குள் உலாவவிட்டுக் கொண்டிருக்கின்றது..

அவ்வாறே முஸ்லிம் மக்களின் உயிர், உடல், உடமை பாதுகாப்புக்கு முஸ்லிம் நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இப்போது குரல் கொடுக்க ஆரம்பித்திருப்பதும், முஸ்லிம் சில அரசியல்வாதிகளுக்கு இல்லாத சமூகப்பற்று முஸ்லிம் இளைஞர்களிடம் அதிகரித்து வருவதும் ஆரோக்கியமான விடயம்....

"எதிரியின் எதிரி நண்பன்' எனும் மனப்பாங்கில் மொழியால் ஒன்றிணைந்தவர்கள் தற்போதைய சூழ்நிலையை மையப்படுத்தி தம் குரோதத்தை வௌிப்படுத்துவதும் அநாகரிகமான மனிதாபிமானமற்ற செயலே!

உண்மையில் மொழியால் ஒன்றிணைந்த சிறுபான்மையினர் தமக்கெதிரான வன்முறைகள் அவிழ்த்து விடப்படும்போது அவற்றை எதிர்த்து மனவலிமையுடன் ஒன்றாக இணைந்து போராடுவதே காலத்தின் தேவையாகி நிற்கின்றது..

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!