About Me

2021/04/25

பைத்தியம்

 

மெல்லிய கூதல் காற்றும், கருக்கட்டிய மேகமும் மழை வருவதற்கான அறிவிப்புக்களோ... 

வெறிச்சோடிக்கிடந்த வீதியில் அந்த வயோதிபப் பெண் வேகமாக நடந்து வருகின்றார். வயது எழுபதைத் தாண்டிய தோற்றம். கிழிசலும், அழுக்கான ஆடையும் அவருடைய மனநிலை சரியில்லை என்பதை அடுத்தவர்களுக்கு சொல்லக் கூடியனதான்.

"அந்த மனுஷிக்கு கொஞ்சம் மூளை சொகமில்ல. அங்கால போ புள்ள"

 என தன் மகளை விரட்டும் பக்கத்து வீட்டு ஆன்டியின் குரல் கேட்டு நானும் அம்மணியைப் பார்க்கின்றேன். 

அடுத்தவர்கள் சொல்லிச் சொல்லியே எனக்கும் அவர்மேல் சற்றுப் பயம்தான். தலையை வாசல் கேற் உள்ளுக்குள் இழுத்து மறைகின்றேன். ஆனாலும் பாவம் எனது அம்மா தெரு வாசல் பக்கம் துப்பரவு செய்து கொண்டிருந்தார். அம்மாவைத் தாண்டித்தான் அப்பெண் தன்னிருப்பிடத்திற்குச் செல்ல வேண்டும். 

எல்லோரும் பயந்து ஒதுங்கும்போது அம்மாவோ எந்தப் பதற்றமும் இல்லாமல் வாசல் பெருக்கிக் கொண்டேயிருக்கவே மெல்லத் தலையை நீட்டி வெளியே பார்த்தேன். அம்மாவைக் கடந்து சென்ற அப்பெண் திடீரென நின்றார். திரும்பி அம்மா அருகில் வந்து நின்றார். அம்மாவுடன் ஏதோ பேச்சுக் கொடுக்க, அம்மாவும் இயல்பாக பேச ஆரம்பித்தார். எனது விழிகளோ ஆச்சரியத்தில் விரிந்தன.

எல்லோரும் பைத்தியம் என முத்திரை குத்திய பெண் இப்பொழுது,போக மனமின்றி அம்மாவுடன் பேசிக் கொண்டே நின்றா.

அம்மா மாட்டிக் கொண்டாவோ?

சற்று தைரியத்துடன் அம்மாவின் அருகில் சென்றேன்.

"புள்ள உன்ர முகம் மகாலக்ஷிமிகரமா இருக்கு. உனக்கு என்ன உதவி வேணுமோ கேள். செய்து தாரேன். கைவிளக்குமாறு செய்து தாரேன். அதால தெரு வாசலக் கூட்டினா வடிவாயிருக்கும்."

அப்பெண் பேச்சு தொடர்ந்தபோது அதிர்ந்தேன். 

அம்மாவை நிமிர்ந்து பார்த்தேன். அம்மாவின் முகத்தில் புன்னகை மாறவேயில்லை.

அந்தப் பெண் சென்றதும் அம்மாவே சொன்னா,

"அவக்கு பைத்தியம் என்று சொல்றாங்க. ஆனா என்ன மட்டும் றோட்டில கண்டா நின்று கதைப்பா. பாவம் அவ"

  அப்பெண்ணின் மெல்லிய மனமும் உதவி செய்கிற எண்ணமும் தெரியாமல் வெளியே நின்று விமர்சிக்கும் பலரே எனக்குள் பைத்தியங்களாகத் தெரிகின்றார்கள் இப்போது.

ஜன்ஸி கபூர் - 25.04.2021


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!