About Me

2021/04/26

பிரார்த்தனை

இரவு பகல் இறைவனின் படைப்புக்களின் இரகஸியம்தான். நிச்சயம் இன்றைய இரவின் முடிவில், நாளைய விடியல் தொடரத்தான் போகிறது. 

ஆனால் வாழ்வில் ...............

கண்களை மெல்ல மூடுகின்றேன். ஈரத்தின் சுமையில் விழிகள் இன்னும் நனைந்தே இருந்தன.

வாழ்வா சாவா எனத் தெரியாமல் மூச்சுத் துவாரங்களை அழுத்தும் கடன் பற்றிய நினைவோடு மனம் மெலிதாக உரசியபோது பயம் பற்றிப் படர்ந்தது.

கண்களில் மரண பயம்!

நாளைய எதிர்காலம் நம்பிக்கையற்றுப் போனது.

நாளை விடிந்தால் கடன்காரர்கள் வீட்டைச் சுற்றுவார்கள். அவர்களைச் சமாளிக்கும் அளவிற்கு மன தைரியம் இல்லை.

விரக்தியின் முன்றலில் அலைந்த மனம் மரணத்தை பற்றியே சிந்தித்தது.

விடியலைத் தர மறுக்கின்ற தொடர் சிக்கல்களின் அழுத்தங்களை தாங்கும் மனநிலை இனியுமில்லை.

வறுமையைச் சமாளிக்க வாங்கிய கடன், இன்று வாழ்வையே மூழ்கடிக்கும் பிரமை  .

கன்னத்தை நனைத்துக் கொண்டிருந்த கண்ணீர், பெருமூச்சில் ஆவியாக்கி கொண்டிருந்தது.

"பெரியம்மா"

என்ற அழைப்போடு பிஞ்சுக் கரங்கள்   தோளைத் தொட்டன. திரும்பிப் பார்த்தபோது................

ஏழு வயது நிரம்பிய சின்ன மலர் சிரித்துக் கொண்டு நின்றாள்.

"உங்க கஷ்டம் தீர இப்போ தொழுதிட்டு வாரேன்"

எனச் சொன்னவளை அணைத்தபோது, எனது அழுகை இருளின் நிசப்தத்தையும் உடைத்தவாறு வெடித்தது.

ஜன்ஸி கபூர் - 26.04.2021



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!